பேரழிவுகளின் போது நல்லவர்களும் அழிக்கப்படுவது ஏன்?
சுனாமி போன்ற பேரழிவுகளில் முஸ்லிம்களும் மூழ்கி இறந்துவிட்டார்களே? முஸ்லிம்களுக்கு இத்தகைய கொடூரமான மரணத்தை இறைவன் தருவதேன்?
மக்களுக்கு அல்லாஹ் இரு வகைகளில் அழிவை ஏற்படுத்துகிறான்.
ஒன்று நல்லவர் கெட்டவர் என்ற வேறுபாடு இல்லாமல் அழித்தல்.
மற்றொன்று கெட்டவர்களைத் தனியாகப் பிரித்தெடுத்து அவர்களை மட்டும் அழித்தல்.
இறைத்தூதர்களை அனுப்பி அந்தத் தூதரை மக்கள் ஏற்காவிட்டால் அப்போது அல்லாஹ் பேரழிவுகளை ஏற்படுத்துவான். அவ்வாறு அழிக்கும் போது இறைத்தூதரையும், அவருடன் இருந்த நல்லோரையும் தனியாகப் பிரித்து கெட்டவர்களை மட்டும் அழிப்பான்.
இறைத்தூதர்கள் இல்லாத காலங்களில் ஏற்படும் வேதனைகள் நல்லவர்கள், கெட்டவர்கள் என்ற அடிப்படையில் ஏற்படாது.
புயல், மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற துன்பங்கள் நேரும் போது, அந்தத் துன்பங்களில் தீயவர்கள் மாத்திரமின்றி நல்லவர்களும் கூட பாதிக்கப்படுகிறார்கள். இதற்குக் காரணம் அந்த நல்லவர்களை துன்புறுத்த வேண்டும் என்பதல்ல.
இதில் சில நல்லவர்களும் சேர்ந்து தான் அழிக்கப்படுவார்கள். இது தான் இறைவனின் ஏற்பாடாகும். பிறகு நல்லவர்கள் மறுமை நாளில் அவரவர்களது எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள். யாரும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள்; வெட்டவெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும்போது அவர்களில் முதலாமவர் முதல், கடைசி நபர் வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்! என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் முதலாமவர் முதல், கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்களே; கடைவீதிகளும் இருக்குமே! என நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர்களில் முதலாமவர் முதல், கடைசி நபர் வரை புதையுண்டு போகத்தான் செய்வார்கள்; எனினும் (அதற்குப்) பின்னர் அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள் என்றார்கள்.
அறிவிப்பவா் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி 2118
இஸ்லாமிய நம்பிக்கைப் படி இந்த உலகம் ஒரு நாள் அழிக்கப்பட்டு வேறொரு உலகம் அமைக்கப்படும். அந்த உலகம் தான் நிரந்தரமான நிலையான கூலி வழங்கப்படக்கூடிய உலகம். நல்லவர்கள், தீயவர்கள் அனைவரும் அவரவர்களின் செயல்களுக்குரிய பலனை அந்த நிலையான மறு உலகில் தான் அனுபவிப்பார்கள். நல்லவர்கள் சொர்க்கத்திலும் தீயவர்கள் நரகத்திலும் நுழையும் உலகம் அந்த நிலையான மறு உலகமேயாகும்.
இந்த உலகைப் பற்றி இஸ்லாம் சோதனை உலகம் என்று குறிப்பிடுகிறது. மனிதர்கள் சோதிக்கப்படுவது தான் இந்த உலகின் நோக்கம்.
உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன்.
திருக்குர்ஆன் 67:2
மனிதனுக்கு இவ்வுலகில் ஏற்படக்கூடிய நோய் நொடிகள், வறுமை, வேலையின்மை, துர்மரணம் போன்ற அனைத்தும் இறைவனின் புறத்திலிருந்து வரும் சோதனைகளாகும். சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்படுவதும் இறைவனின் சோதனையாகும்.
ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள் என்று அவர்கள் கூறுவார்கள்.
திருக்குர்ஆன் 2:155,156
அவ்வாறு மக்களுக்குப் படிப்பினையாக இறைவன் நிகழ்த்திய சோதனைகளில் நல்லவர்கள் அழிக்கப்படும் போது மறு உலகில் அவர்கள் இந்த உலகத்தில் நடந்து கொண்டதற்கேற்ப இறைவனால் நடத்தப்படுவார்கள். அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
About Author
Sadhiq
அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.
[அல்குர்ஆன் 112:1]