பெருநாள் தொழுகை முடிந்த உடன் இமாம் உரை நிகழ்த்துவார். அதில் இரண்டு உரைகளை நிகழ்த்துவார்கள். ஆனால் நான் தொழுகைக்குச் சென்ற இடத்தில் இமாம் ஒரு உரையுடன் நிறுத்தி விட்டார். இது சரியா?
பெருநாட்களில் நிகழ்த்தப்படும் (குத்பா) உரையின் போது இடையில் உட்கார்வதற்கோ அல்லது இரண்டு உரைகள் நிகழ்த்துவதற்கோ நபிவழியில் ஆதாரமில்லை.
இரு உரைகளுக்கு இடையில் பிரித்துக் காட்டும் விதமாக அமர்வது நபிவழி (சுன்னத்) என்று இமாம் ஷாபி அறிவிப்பதாக ஒரு செய்தி கூறப்படுகின்றது. அந்தச் செய்தியை அறிவிக்கும் உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உத்பா என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவரல்லர். எனவே இந்த ஹதீஸ் ஏற்கத்தக்கதல்ல.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாளிலோ அல்லது ஹஜ் பெருநாளிலோ நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு சற்று உட்கார்ந்து விட்டு எழுந்து நின்றார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: இப்னு மாஜா 1254
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் அப்துர்ரஹ்மான் பின் உஸ்மான் பின் உமைய்யா என்ற அபூபஹ்ர் என்பவரும் இஸ்மாயீல் பின் அல் கவ்லானி என்பவரும் பலவீன மானவராவர். எனவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொள்ளலாகாது. மேலும் நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆவைப் போன்று பெருநாளிலும் இரண்டு உரைகள் ஆற்றினார்கள் என்பதற்குத் தெளிவான சான்றுகள் இல்லை.
நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று தரையில் நின்று உரையாற்றினார்கள்.
அறிவிப்பவர்: அபூ சயீத் அல் குத்ரீ (ரலி)
நூல்: இப்னு குஸைமா. 1563
மிம்பர் இல்லாமல் தரையில் நின்று நபியவர்கள் உரையாற்றியதால் இதில் உட்காருவதற்குரிய சாத்தியமில்லை என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே பெருநாளன்று ஒரு உரை நிகழ்த்துவது தான் நபிவழியாகும்.