பெண்கள் காது மூக்கு குத்துவது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒன்றா ?

அல்லாஹ் படைத்த படைப்பில் மாற்றம் செய்யக் கூடாது என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. காதுகளைக் கிழிப்பதும், அல்லாஹ்வின் படைப்பில் மாற்றம் செய்வதும் ஷைத்தானுடைய செயல் என்று குர்ஆன் கூறுகிறது.

“அவர்களை வழிகெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்” (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான். திருக்குர்ஆன் 4:119

அல்லாஹ் வடிவமைத்ததில் மாற்றம் செய்யக் கூடாது என்று மேற்கண்ட வசனம் கூறுகிறது.

காதுகளிலும், மூக்கிலும் துளையில்லாமலே அல்லாஹ் மனிதர்களை வடிவமைத்துள்ளான். காது, மூக்கு குத்தினால் இறைவனுடைய படைப்பில் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த அடிப்படையில் காது மூக்கு குத்துவது கூடாது என்ற முடிவுக்கு வரலாம்.

அல்லாஹ் படைத்த உறுப்புக்களில் மாற்றம் செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தடை செய்துள்ளார்கள்.

صحيح البخاري

5931 – حَدَّثَنَا عُثْمَانُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، قَالَ عَبْدُ اللَّهِ: «لَعَنَ اللَّهُ الوَاشِمَاتِ وَالمُسْتَوْشِمَاتِ، وَالمُتَنَمِّصَاتِ، وَالمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ، المُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ تَعَالَى» مَالِي لاَ أَلْعَنُ مَنْ لَعَنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ فِي كِتَابِ اللَّهِ: {وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ} [الحشر: 7]

பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி); நூல் : புகாரி 5931

அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அறிவித்தார்
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), ‘பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன் பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்?’ என்று கூறினார்கள். இச்செய்தி பனூ அசத் குலத்தைச் சேர்ந்த, ‘உம்மு யஅகூப்’ எனப்படும். ஒரு பெண்மணிக்கு எட்டியது. அந்தப் பெண் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் வந்து, ‘இப்படிப்பட்ட பெண்களை நீங்கள் சபித்ததாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே என்றார்.

அதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக்கூடாது?’ என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், ‘(குர்ஆன் பிரதியில்) இரண்டு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். நீங்கள் குறிப்பிட்டதை நான் அதில் காணவில்லையே!’ என்று கேட்டதற்கு அவர்கள், ‘நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய். ‘இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்களைத் தடுப்பதைவிட்டும் நீங்கள் விலகி இருங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 59:7 வது) வசனத்தை நீ ஓதவில்லையா?’ என்று கேட்டார்கள்.

அந்தப் பெண், ‘ஆம் (ஒதினேன்)’ என்று பதிலளித்தார். அப்துல்லாஹ்(ரலி), ‘நபி(ஸல்) அவர்கள் (மேலே குறிப்பிட்ட) இவற்றைச் செய்ய வேண்டாமெனத் தடுத்துள்ளார்கள்‘ என்று கூறினார்கள். அந்தப் பெண்மணி, ‘உங்கள் துணைவியார் இதைச் செய்வதாக கருதுகிறேன்’ என்று கூறினார். அப்துல்லாஹ்(ரலி), ‘சரி, நீ சென்று, (என் மனைவியைப்) பார்!’ என்று கூறினார்கள். எனவே, அந்தப் பெண் சென்று பார்த்தார். தம் ணப்படி எதையும் அவர் காணவில்லை. அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), ‘என் மனைவி (மட்டும்) அப்படிச் செய்பவளாக இருந்தால், அவளுடன் நான் சேர்ந்து வாழமாட்டேன்’ என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி: 4886.)

இறைவன் வழங்கியுள்ள உருவத்தை மாற்றுவதால் பெண்கள் சபிக்கப்பட்டுள்ளார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

இறைவனுடைய படைப்பில் மாற்றம் செய்தல் எங்கெல்லாம் இருக்கின்றதோ அவை அனைத்தும் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும்.

காது, மூக்கு குத்துவதில் இந்த அம்சம் இருப்பதால் இது தடை செய்யப்பட்டதாகும்.

மேலும் அல்லாஹ்வின் படைப்பில் மனிதனின் வடிவம் தான் அழகிய வடிவமாகும்.

மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.

திருக்குர்ஆன் 95:4

பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையை சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான். திருக்குர்ஆன் 23:14

“அஞ்ச மாட்டீர்களா? அழகிய படைப்பாளனும், உங்கள் இறைவனும், உங்கள் முன்னோரின் இறைவனுமாகிய அல்லாஹ்வை விட்டு விட்டு “பஅல்’ எனும் சிலையைப் பிரார்த்திக்கிறீர்களா?

திருக்குர்ஆன் 37:125

அழகிய படைப்பாளன் என்று அல்லாஹ் தனக்குப் பெயர் சூட்டியுள்ளான். அவன் எதை எப்படி படைத்துள்ளானோ அது தான் அழகு.

ஆண்களுக்கு எவை அழகோ அவற்றை ஆண்களுக்கு வழங்கியுள்ளான். பெண்களுக்கு எவை அழகோ அவற்றைப் பெண்களுக்கு வழங்கியுள்ளான்.

காது மூக்கு குத்தினால் அல்லாஹ் அழகாகப் படைக்கவில்லை என்று சொல்லாமல் சொல்கிறோம்.

காது மூக்கு குத்தலாம் என்ற கருத்துடையவர்கள் பின் வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு காது மூக்கு குத்தலாம் என வதிடுகின்றனர்.

صحيح البخاري

98 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَيُّوبَ، قَالَ: سَمِعْتُ عَطَاءً، قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، قَالَ: أَشْهَدُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – أَوْ قَالَ عَطَاءٌ: أَشْهَدُ عَلَى ابْنِ عَبَّاسٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – «خَرَجَ وَمَعَهُ بِلاَلٌ، فَظَنَّ أَنَّهُ لَمْ يُسْمِعْ فَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ، فَجَعَلَتِ المَرْأَةُ تُلْقِي القُرْطَ وَالخَاتَمَ، وَبِلاَلٌ يَأْخُذُ فِي طَرَفِ ثَوْبِهِ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: وَقَالَ: إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ عَطَاءٍ، وَقَالَ: عَنْ ابْنِ عَبَّاسٍ، أَشْهَدُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பெருநாள் தினத்தில் உரையாற்றிவிட்டு) பெண்கள் செவியேற்கும் விதத்தில் தாம் பேசவில்லை என்று எண்ணியவர்களாக (பெண்களிருக்கும் பகுதிக்கு) பிலால் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள். அங்கு பெண்களுக்கு அறிவுரை கூறிவிட்டு தர்மம் செய்யும்படி வலியுறுத்தினார்கள். அங்கிருந்த பெண்கள் தங்கள் காதணிகளையும், மோதிரங்களையும் (கழற்றிப்) போடலானார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி); நூல் : புகாரி (98)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னிலையில் காது மூக்கு குத்தும் போது அவர்கள் அதைத் தடுக்காமல் இருந்தால் காது மூக்கு குத்தலாம் என்று நாம் முடிவு செய்யலாம். ஆனால் இந்த ஹதீஸில் அப்படி எதுவும் இல்லை. முன்னரே காது குத்தியவர்கள் நபிகள் நாயகம் முன்னால் இருந்துள்ளனர் என்பது தான் இந்த ஹதீஸில் உள்ளது.

சட்டம் தெரியாமல் இருக்கும் நேரத்தில் காது, மூக்கு குத்தியிருந்தால் துளையிடப்பட்ட அந்தக் காதில் ஆபரணங்களைப் போடுவதை நபியவர்கள் தடை செய்யவில்லை என்ற கருத்தைத் தான் இதில் இருந்து எடுக்க முடியும்.

மார்க்கச் சட்டத்தை அறிவதற்கு முன்னால் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட காரியத்தை ஒருவர் செய்தால் அதற்காக அவர் குற்றம் பிடிக்கப்பட மாட்டார். வறு என்று தெரிந்த பிறகு செய்தாலே அவர் குற்றவாளியாவார். இது ஒரு பொதுவான அடிப்படை விதி.

ஆபரணங்களைக் காதில் துளையிடாத வண்ணம் காதை சுற்றி தொங்க விடுவதை மார்க்கம் தடை செய்யவில்லை. அதே சமயத்தில் இறைவன் படைப்பில் மாற்றம் செய்யும் விதமாக துளையிட்டு ஆபரணங்களைக் அணிவதைத்தான் கூடாது என்பதாக புரிந்து கொண்டால் குழப்பமில்லை.

அல்லாஹ் மிக அறிந்தவன்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *