பூனையை விற்பனை செய்யலாமா?

மனிதர்களைச் சார்ந்து வாழ்கின்ற பல செல்லப் பிராணிகள் இன்று வீடுகளில் வைத்து வளர்க்கப்படுகின்ற அடிப்படையில் பூனைகளும் வளர்க்கப்பட்டு வருகின்றது. பூனையால் வீட்டில் இருக்கும் எலி போன்ற தீங்கு தருகின்றவற்றைக் கொல்வது போன்ற சில பலன்களும் ஏற்படுகிறது. பொதுவாக நாட்டு ரகப் பூனைகளை வளர்ப்பது மட்டுமல்லாமல் பல வகை ஃபேன்சி ரகப் பூனைகளும் இன்று மக்களால் விரும்பி வளர்க்கப்படுகின்றது.

பூனையை வளர்ப்பது தடையில்லை

மார்க்க அடிப்படையில் பூனைகளை வளர்ப்பது தடையில்லை. என்றாலும், அவற்றை வளர்க்கும்போது கொடுமைப்படுத்தாமல், சரியான முறையில் உணவளித்து, பராமரித்து வளர்க்க வேண்டும் என்பதை மார்க்கம் நிபந்தனையிடுகிறது. இதனைப் பின்வரும் செய்தி மூலம் அறிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(முன் சமுதாயத்தைச் சேர்ந்த) பெண்ணொருத்தி ஒரு பூனையின் காரணமாக வேதனைப்படுத்தப்பட்டாள். அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது – அல்லாஹ்வே மிக அறிந்தவன் – நீ அதைக் கட்டிவைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லை என்று அல்லாஹ் கூறினான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி); நூல்: புகாரி 2365

இந்தச் செய்தியில் இந்தப் பெண், பூனையை வளர்த்ததற்காகத் தண்டிக்கப்படவில்லை. மாறாக, அதனைக் கட்டிப்போட்டு சரியாக உணவளித்துப் பராமரிக்காமல் விட்டதற்காகவே தண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதிலிருந்து பூனையை முறையாக வளர்ப்பது தவறில்லை என்பதை அறியலாம்.

அதேபோல, நபியவர்களும் பூனை வளர்ப்பதைத் தடைசெய்யவில்லை என்பதை வேறு சில ஆதாரங்கள் மூலமாகவும் அறியமுடிகிறது.

அதிக நபிமொழிகளை அறிவித்த நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) ஆவார். அவர்களது இயற்பெயரே நம்மில் பலர் அறிந்து வைத்திருக்காத அளவு அபூஹுரைரா என்ற புனைப் பெயரால் அழைக்கப்பட்டார்கள். இதன் பொருள் “பூனையின் தந்தை” என்பதாகும். பூனையை நேசித்துப் பராமரித்ததால் இப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டார் என்பதைச் சில செய்திகள் மூலம் அறியலாம்.

அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், “அபூஹுரைரா என்ற குறிப்புப் பெயர் உங்களுக்கு ஏன் சூட்டப்பட்டது?” என்று கேட்டேன். அதற்கவர்கள், “என்னைப் பார்த்து நீர் பயப்படவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “ஏன் இல்லை? அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உங்களைப் பார்த்து பயப்படுகின்றேன்” என்று கூறினேன். அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள், “நான் எனது குடும்பத்தினரின் ஆடுகளை மேய்த்து வந்தேன். அந்நிலையில் எனக்குச் சொந்தமான சின்னஞ் சிறிய பூனைக்குட்டி ஒன்று இருந்தது. இரவு நேரத்தில் அதனை ஒரு மரத்தில் வைத்துவிடுவேன். பகல் பொழுதில் அதனை என்னுடன் எடுத்துக்கொண்டு வந்து அதனுடன் விளையாடுவேன். எனவே எனது குடும்பத்தினர் எனக்கு அபூஹுரைரா பூனைக்குட்டியின் தந்தை என்ற குறிப்புப் பெயர் சூட்டினார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ராஃபிவு; நூல்: திர்மிதி 3765

பூனையை வளர்ப்பது தடையென்றால், அதைப் பாராமரிப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டித்திருப்பார்கள். அதைக் காரணமாகக் கொண்டு வைக்கப்பட்ட பெயரை நபி (ஸல்) அவர்கள் மாற்றி இருப்பார்கள். ஆனால் இறுதி வரை அவர் அதே பெயர் கொண்டு அழைக்கப்பட்டார். இதிலிருந்து பூனையை வளர்ப்பது தவறல்ல என்பது தெளிவாகிறது.

அதேபோல, வேறு சில பிராணிகளைப் போன்று பூனை அசுத்தமானதாக இல்லை என்பதாலும் இஸ்லாம் பூனைகளை வளர்ப்பதற்குத் தடை விதிக்கவில்லை.

அதனால் தான் தண்ணீர் பாத்திரத்தில் பூனை வாய் வைத்துவிட்டால் அந்தத் தண்ணீர் அசுத்தமாகாது என்று நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

அபூகதாதா (ரலி) அவர்கள் உளூச் செய்வதற்காக நான் தண்ணீர் எடுத்து வைத்தேன். உடனே ஒரு பூனை வந்து அதைக் குடிக்க ஆரம்பித்தது. பூனை குடிப்பதற்கு ஏற்றவாறு அவர் பாத்திரத்தைச் சாய்த்தார். “என் சகோதரர் மகளே! இதில் ஆச்சரியப்படுகிறாயா?” என்று கேட்டார். நான் ஆம் என்றேன். “இவை அசுத்தமானவை அல்ல. இவை உங்களைச் சுற்றி வரக் கூடியவையாகும்” என்று நபி (ஸல்) (ஸல்) கூறியதாகக் குறிப்பிட்டார்.

அறிவிப்பவர்: கப்ஷா பின்த் கஃப்; நூல்: திர்மிதி 92

இது அசுத்தமான பிராணியோ, ஆபத்தான பிராணியோ இல்லை என்பதையும், அதை வளர்க்கலாம் என்பதையும் இதிலிருந்து அறியலாம்.

பூனையை விற்பனை செய்வது தடையே!

தற்போது பரவலாகப் பலரால் பூனை வளர்க்கப்படுவதால், பூனையை விற்பனை செய்து பொருளீட்டும் வியாபாரமும் பலரால் செய்யப்படுகிறது. குறிப்பாகப் பல ஃபேன்சி ரக பூனைகள் பல ஆயிரம் ரூபாய்களில் விற்கப்படுகின்றன. அதனால் இதுகுறித்த மார்க்க நிலைப்பாட்டை அறிந்து கொள்வது அவசியமாகும்.

பூனைகளை வளர்ப்பது தடையில்லை என்றாலும் அவற்றை விற்பனை செய்வதை மார்க்கம் தடை செய்துள்ளது.

நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம், நாய் மற்றும் பூனை விற்ற காசைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் “நபி (ஸல்) அவர்கள் அவற்றைக் கண்டித்தார்கள்’’ என விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூசுபைர்; நூல்: முஸ்லிம் 2933

இந்த நபிமொழியில் நாய் விற்பனை செய்வது எவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதோ அதே போன்று பூனை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டதைத் தெளிவுபடுத்துகிறது.

நபியவர்கள் கண்டித்துள்ளது குறித்து ஹதீஸில் நேரடியாக வந்துள்ளபோது பூனையை விற்பனை செய்வது தடை என்ற முடிவுக்குத் தான் வர வேண்டும்.

பூனையை விற்பனை செய்வது தடை என்ற ஹதீஸ் பலவீனமானதா?

சிலர் மேற்கண்ட ஹதீஸ் பலவீனமானது என்று கூறி வருகின்றனர். முதலில் இந்த செய்தியின் அறிவிப்பு சரியாக உள்ளதா என்பதைப் பார்ப்போம்.

மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்கள் பற்றிய விபரம் வருமாறு

1- ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி)

2- அபூ ஜுபைர்

3- மஃகல் இப்னு உபைதுல்லாஹ்

4- ஹசன் இப்னு அஃயன்

5- சலமத் இப்னு ஷபீப்

அதாவது இந்தச் செய்தியை ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம் இருந்து அபூ ஜுபைர் அவர்கள் கேட்டு அறிவிக்கிறார்.

அபூ ஜுபைர் என்பவர் இதை மஃகல் இப்னு உபைதுல்லாஹ்வுக்கு அறிவிக்கிறார்.

மஃகல் இப்னு உபைதுல்லாஹ் இதை யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் என்பவருக்கு அறிவிக்கிறார்

யூனுஸ் பின் இஸ்ஹாக் என்பார் ஹசன் இப்னு அஃயன் என்பாருக்கு அறிவிக்கிறார்.

ஹசன் இப்னு அஃயன் என்பார் சலமத் இப்னு ஷபீப் என்பாருக்கு அறிவிக்கிறார்.

சலமத் இப்னு ஷபீப் என்பாரிடம் நூலாசிரியர் இமாம் முஸ்லிம் அவர்கள் நேரடியாகக் கேட்டு பதிவு செய்துள்ளார்கள்.

மேற்கண்ட அறிவிப்பாளர்களில் ஒருவரோ, பலரோ பலவீனமாக இருந்தால் இந்த ஹதீஸ் பலவீனமாகி விடும். யாரும் பலவீனமான அறிவிப்பாளராக இல்லாவிட்டால் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதாகும்.

இந்தச் செய்தியில் இடம்பெறும் மேற்கண்ட அறிவிப்பாளர்களில் அபூ ஜுபைர் என்பவர் மீது தத்லீஸ் செய்பவர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. மஃகல் இப்னு உபைதுல்லாஹ், ஹசன் இப்னு அஃயன் ஆகியோர் மீது சில விமர்சனங்கள் உள்ளன. அவை ஹதீஸை ஏற்க முடியாத அளவுள்ள எந்தப் பாரதூரமான குற்றச்சாட்டும் இல்லை. பொதுவாகப் பெரும்பாலான பல புகாரி, முஸ்லிம் அறிவிப்பாளர்கள் மீது கூட இதுபோன்ற சிறு விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன.

எனவே அபூ ஜுபைர், மஃகல் இப்னு உபைதுல்லாஹ், ஹசன் இப்னு அஃயன் ஆகியோர் குறித்து நாம் முடிவு செய்து விட்டால் இந்த ஹதீஸின் தரம் குறித்து சரியான முடிவுக்கு நாம் வந்து விடலாம்.

அபூ ஜுபைர் (முஹம்மது இப்னு முஸ்லிம்):

அபூஜுபைர் என்பவர் புகாரி, முஸ்லிம் போன்ற நூல்களிலும் இடம்பெற்றுள்ளார். இவர் நம்பகமான அறிவிப்பாளர்களில் ஒருவராவார்.ஆனால் அவர் தத்லீஸ் செய்பவர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இவர் நிலை குறித்து காண்போம்.

நஸாயீ அவர்களும் அவரல்லாதவர்களும் இவரை தத்லீஸ் செய்பவர் என்று கூறிவிட்டார்கள்.

(தஃரீஃபு அஹ்லித் தக்தீஸ் 1/151)

தத்லீஸ் செய்தல் என்பது தான் யாரிடமிருந்து ஒரு செய்தியைக் கேட்டாரோ அவரை விட்டுவிட்டு, அவருக்கு அடுத்த அறிவிப்பாளரை அறிவிக்கும் நபரை ஹதீஸ் துறையில் தத்லீஸ் செய்பவர்கள் என்று கூறுவார்கள்.

இவரின் ஹதீஸ்கள் முழுமையாக மறுக்கப்படாது. எந்தச் செய்தியில் தத்லீஸ் செய்துள்ளாரோ அந்தச் செய்தி மட்டும் மறுக்கப்படும். எந்தச் செய்தியில் நேரடியாகக் கேட்டதாகத் தெளிவான வாசகத்தைக் கொண்டு கூறுவாரோ அந்தச் செய்தி ஏற்றுக் கொள்ளப்படும்.

இப்னு கத்தான் அவர்கள் கூறுகிறார்கள்: அபூ ஜுபைர் அவர்கள் ஜாபிர் அவர்களிடமிருந்து தான் நேரடியாகச் செவியுற்றார் என்பதைத் தெளிவுபடுத்தாத செய்திகளும், லைஸ் இப்னு சஃது அவர்களிடமிருந்து அறிவிக்காத செய்திகளும் முன்கதிஃ ஆன (தொடர்பு அறுந்த) செய்திகளாகும்.

(இக்மாலு தஹ்தீபில் கமால் 10/336)

அபூஜுபைர் எந்தெந்த செய்திகளில்…

سمعت – أخبرني- حدثني

இன்னாரிடமிருந்து நான் செவியுற்றேன், இன்னார் எனக்கு அறிவித்தார் என்பது போன்ற வார்த்தைகளை, இதே கருத்துள்ள நேரடியாகக் கேட்டதைப் போன்ற சொற்பிரயோகங்களைக் கூறியிருக்கிறாரோ, அதில் அவர் நேரடியாக கேட்டார் என்பது பொருளாகும். இந்த சொற்பிரயோகங்கள் இடம் பெற்றிருக்கும் செய்திகள் பலமானதாக கருதப்படும்.

عن – قال- أنّ

இன்னார் கூறினார், இன்னாரிடமிருந்து என்பது போன்ற சொற்பிரயோகங்கள் இருந்தால் அவர் நேரடியாகக் கேட்கவில்லை என்பது பொருளாகும். இந்த சொற்பிரயோகங்கள் இடம் பெற்றிருக்கும் செய்திகள் பலவீனமானதாக கருதப்படும்.

ஆனால் பூனை விற்பது தடை என்கிற இந்த முஸ்லிம் செய்தியில்

سَأَلْتُ

என்று தான் நேரடியாகக் கேட்ட சொற்பிரயோகத்தை அபூ ஜுபைர் பயன்படுத்தியுள்ளார்.

எனவே இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது தான் என்பது உறுதியாகின்றது.

மஃகல் இப்னு உபைதுல்லாஹ்:

மஃகல் இப்னு உபைதுல்லாஹ் என்பவர் முஸ்லிமில் 26 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். நஸாயீ, அபூதாவூத் போன்ற நூல்களிலும் அறிவிப்பாளராக இடம்பெற்றுள்ளார். இவர் நம்பகமான அறிவிப்பாளர்களில் ஒருவராவார். இவரைப் பல இமாம்கள் நம்பகமானவர் என உறுதிப் படுத்தியுள்ளனர். அவர் பலவீனமானவர் என்று சிலர் விமர்சித்துள்ளதால், அதன் உண்மை நிலை குறித்து காண்போம்.

மஃகல் இப்னு உபைதுல்லாஹ் நம்பகமானவர் என உறுதிப்படுத்தியுள்ளவர்கள்:

[تهذيب التهذيب (٤/ ١٢٠)]

قال عبد الله بن أحمد عن أبيه: صالح الحديث. وقال مرة: ثقة

இமாம் அஹ்மத் அவர்கள் இவர் ஹதீஸ்களில் நல்லவர் என்றும் மற்றொரு தடவை நம்பகமானவர் என்றும் கூறியுள்ளார்.

(தஹ்தீபுத் தஹ்தீப் 4/120)

[إكمال تهذيب الكمال (١١/ ٢٩١)]

وفي « سؤالات حرب யு: سئل أحمد بن حنبل عن النضر بن عربي، فقال: ما علمت إلا خيرا، وكذلك معقل بن عبيد الله

இமாம் அஹ்மத் அவர்களிடம் நள்ரு என்பவர் தொடர்பாக கேட்கப்பட்டது. அவரிடம் நல்லதை தவிர வேறெதுவும் நான் அறியவில்லை என்று கூறிவிட்டு, மஃகல் இப்னு உபைதுல்லாஹ் அவர்களின் நிலையும் இவ்வாறே என்று கூறினார்கள்.

(இக்மாலு தஹ்தீபில் கமால் 11/291)

[تهذيب التهذيب (٤/ ١٢٠)]

قلت: وقال ابن عدي بعد أن سرد له عدة أحاديث: هو حسن الحديث، لم أجد في حديثه منكرا

இமாம் இப்னு அதீ கூறுகிறார்: இவரின் பல செய்திகளை எடுத்துப் பார்த்த பிறகு, ஹஸன் எனும் தரத்திலமைந்த பல ஹதீஸ்களை அறிவித்துள்ளார் என்றும், இவருடைய ஹதீஸில் நிராகரிக்கத்தக்க செய்தி ஏதும் இல்லை என்றும் கூறினார்.

(தஹ்தீபுத் தஹ்தீப் 4/120)

[تهذيب الكمال (٢٨/ ٢٧٤)]

وذكره ابن حبان في كتاب الثقات، وقال: كان يخطئ ولم يفحش خطؤه فيستحق الترك

இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் தமது “அஸ்ஸிகாத்” என்ற நூலில் நம்பகமானவர்கள் பட்டியலில் இவரைக் கொண்டு வந்துள்ளார். இன்னும் இவர் தவறிழைக்ககூடியவர். என்றாலும் இவரது தவறு இவரை விட்டுவிடுகிற அளவுக்கு மோசமானதாக இல்லை என்று கூறினார்.

(தஹ்தீபுல் கமால் 11/291)

[إكمال تهذيب الكمال (١١/ ٢٩١)]

وخرج حديثه في صحيحه، وكذلك أبو عوانة والحاكم والدارقطني.

இப்னு ஹிப்பான், அபூ அவானா, ஹாகீம், தாரகுத்னீ ஆகிய இமாம்கள் இவருடைய ஹதீஸை தங்கள் “ஸஹீஹ்” நூட்களில் பதிவு செய்துள்ளனர்.

(இக்மாலு தஹ்தீபில் கமால் 11/291)

[تهذيب التهذيب (٤/ ١٢٠)]

وعن ابن معين: ليس به بأس. وكذا قال النسائي

இமாம் நஸாயீ அவர்களும் இவர் பரவாயில்லை என்று இப்னு மயீன் கூறியுள்ளதையே கூறுகிறார்.

(தஹ்தீபுத் தஹ்தீப் 4/120)

மேற்கண்ட இமாம்களின் கூற்று அனைத்தும் மஃகல் இப்னு உபைதுல்லாஹ் என்பவர் நம்பகமான உறுதியான அறிவிப்பாளர் என்பதற்குச் சான்றாக உள்ளது.

மஃகல் இப்னு உபைதுல்லாஹ் அவர்களை பலவீனப்படுத்தும் சிலர், அதற்குச் சில இமாம்களின் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். ஆனால் அந்த விமர்சனங்கள் அனைத்தும் தவறாக விளங்கப்பட்டவையாக உள்ளன. அது தொடர்பான விளக்கத்தைக் காண்போம்.

இமாம் யஹ்யா இப்னு மயீன் அவர்களின் விமர்சனம்:

யஹ்யா இப்னு மயீன் அவர்களிடம் செவியுற்றவர்களில் ஒருவரான முஆவியா இப்னு ஸாலிஹ் என்பவர் மட்டும் இவரை பலவீனமானவர் என்று அவர்கள் குறிப்பிட்டதாக கூறியுள்ளார்.

[تهذيب التهذيب (٤/ ١٢٠)]

وقال معاوية بن صالح عن ابن معين: ضعيف

யஹ்யா இப்னு மயீன் அவர்கள் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார் என்று முஆவியா இப்னு ஸாலிஹ் அறிவிக்கிறார்.

(தஹ்தீபுத் தஹ்தீப் 4/120)

யஹ்யா இப்னு மயீன் அவர்களிடம் செவியுற்றவர்களில் மற்றவர்களான இஸ்ஹாக் இப்னு மன்சூர் என்பவர் இவரை நம்பகமானவர் என்று குறிப்பிட்டதாகவும், உஸ்மான் இப்னு ஸயீத் என்பவர் இவரிடம் குறை இல்லை (நம்கமானவர்) என்றும் யஹ்யா இப்னு மயீன் அவர்கள் கூறியுள்ளதாக அறிவிக்கிறார்கள் என்பதை கீழே காணலாம்.

[تهذيب التهذيب (٤/ ١٢٠)]

وقال إسحاق بن منصور عن ابن معين: ثقة

யஹ்யா இப்னு மயீன் அவர்கள் இவர் நம்பகமானவர் என்று கூறியுள்ளார் என்று இஸ்ஹாக் இப்னு மன்சூர் அறிவிக்கிறார்.

(தஹ்தீபுத் தஹ்தீப் 4/120)

[الكامل في الضعفاء (٨/ ٢١٠)]

ثنا محمد بن علي، ثنا عثمان بن سعيد قلت ليحيى بن معين: فمعقل بن عبيد الله ؟ قال: ليس به بأس

யஹ்யா இப்னு மயீன் அவர்கள் இவர் பரவாயில்லை(நம்பகமானவர்) என்று கூறியுள்ளார் என்று உஸ்மான் இப்னு ஸயீத் அறிவிக்கிறார்.

(அல் காமிலு ஃபில் லுஃபா 8/210)

யஹ்யா இப்னு மயீன் அவர்களின் வழக்கப்படி இவர் பரவாயில்லை என்ற அவர்களின் விமர்சனத்தின் பொருள் நம்பகமானவர் என்பது தான். இதை அவர்களே கூறுவதைக் கீழே காணலாம்.

[تدريب الراوي في شرح تقريب النواوي (1/ 406)]

(وَعَنْ يَحْيَى بْنِ مَعِينٍ) أَنَّهُ قَالَ لِأَبِي خَيْثَمَةَ وَقَدْ قَالَ لَهُ: إِنَّكَ تَقُولُ فُلَانٌ لَيْسَ بِهِ بَأْسٌ، فُلَانٌ ضَعِيفٌ (إِذَا قُلْتُ) لَكَ (لَا بَأْسَ بِهِ فَهُوَ ثِقَةٌ)

யஹ்யா இப்னு மயீன் அவர்களிடம் ஒரு அறிவிப்பாளர் விஷயத்தில், லய்ச பிஹி பஃஸ (இவர் பரவாயில்லை) என்று கூறினால், அவர் பலவீனமானவாரா? என்று அபூ கைஸமா அவர்கள் கேட்டபோது, அவர்கள் லா பஃஸ பிஹி (இவர் பரவாயில்லை) என்று சொன்னால் அவர் நம்கமானவர் என்பது பொருள் என்பதை இப்னு மயீன் அவர்களே கூறியுள்ளார்கள்.

(தத்ரீபுர் ராவீ 1/ 406)

யஹ்யா இப்னு மயீன் அவர்களிடம் செவியுற்றவர்களில் ஒருவரான முஆவியா இப்னு ஸாலிஹ் என்பவர் மட்டும் இவரைப் பலவீனமானவர் என்று அவர்கள் குறிப்பிட்டதாகவும், மற்ற இருவர்களான இஸ்ஹாக் இப்னு மன்சூர் என்பவரும், உஸ்மான் இப்னு ஸயீத் என்பவரும் இவரை நம்பகமானவர் என்று இப்னு மயீன் குறிப்பிட்டதாகவும் முரண்பட்ட வகையில் அறிவிக்கிறார்கள்.

இதில் இரண்டு பேர் நம்பகமானவர் என்று அவர் கூறியதாகவும்,ஒருவர் அவர் பலவீனமானவர் என்று கூறியதாக அறிவிப்பதால், இருவருக்கு மாற்றமாக ஒருவர் அறிவிப்பதை ஏற்க இயலாது. இதனடிப்படையில் இவரை நம்பகமானவர் என்று இப்னு மயீன் அவர்கள் கூறியதே ஏற்புடையது.

எனவே இப்னு மயீன் அவர்களும் மஃகல் அவர்களை நம்பகமானவர் என்றே கூறியுள்ளார் என்பது தெளிவாகிறது.

இமாம் அபூ ஜஃபரின் நுஃபைலி அவர்களின் விமர்சனம்:

[إكمال تهذيب الكمال (١١/ ٢٩١)]

وفي كتاب « الكنى யு للنسائي: ثنا محمد بن معدان، سمعت أبا جعفر النفيلي يقول: معقل بن عبيد الله ضعيف.

அபூ ஜஃபரின் நுஃபைலி அவர்கள் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.

(இக்மாலு தஹ்தீபில் கமால் 11/291)

அபூ ஜஃபரின் நுஃபைலி அவர்கள் மட்டுமே இவரைப் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். ஆனால் அதற்குரிய காரணத்தையும் கூறவில்லை.

பலர் நம்பகமானவர் என்று கூறி இருக்க எந்தக் காரணமும் குறிப்பிடாமல் பலவீனமானவர் என்று கூறுவது ஹதீஸ் கலை விதிகளின்படி ஏற்கத்தக்கதாக இல்லை. எனவே அதிகமானவர்கள் நம்பகமானவர்கள் என்று கூறும் கூற்றையே நாம் எடுத்துக் கொள்ளவேண்டும்.

இதை வைத்து இவர் பலவீனமானவர் என்று முடிவெடுக்க முடியாது.

இமாம் இப்னு ஹஜர் அவர்களின் விமர்சனம்:

[تقريب التهذيب (١/ ٩٦٠)]

صدوق يخطئ

இமாம் இப்னு ஹஜர் அவர்கள், இவர் உண்மையாளர், தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்.

(தக்ரீபுத் தஹ்தீப் 1/960)

மேற்கண்ட சிலரின் தவறான விமர்சனங்களின் அடிப்படையில்தான் பிற்கால அறிஞரான இமாம் இப்னு ஹஜர் அவர்கள் “உண்மையாளர். சில வேளைகளில் தவறிழைப்பவர்” என்று “மஃகல் இப்னு உபைதுல்லாஹ்” அவர்கள் குறித்துக் கூறியுள்ளார். தவறான விமர்சனங்களின் அடிப்படையில் கூறப்பட்ட முடிவுகளும் தவறானவையே. எனவே “மஃகல் இப்னு உபைதுல்லாஹ்” அவர்கள் குறித்து கூறப்படும் விமர்சனங்கள் ஏற்கத் தகுந்தவையல்ல.

“மஃகல் இப்னு உபைதுல்லாஹ்” அவர்கள் நம்பகமான, உறுதியான அறிவிப்பாளர் என்பதே சரியானதாகும். அவரைப் பலவீனப்படுத்தும் வகையில் ஏற்கத் தகுந்த எந்த விமர்சனமும் இல்லை.

எனவே இவர் நம்பகமானவர் என்பது உறுதியாகிறது.

ஹசன் இப்னு அஃயன்:

ஹசன் இப்னு அஃயன் என்பவர் முஸ்லிமில் 29 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். புகாரி, நஸாயீ போன்ற நூல்களிலும் அறிவிப்பாளராக இடம்பெற்றுள்ளார். இவர் நம்பகமான அறிவிப்பாளர்களில் ஒருவராவார். இவர் நிலை குறித்து காண்போம்.

[السنن الكبرى – النسائي – ط الرسالة(4/ 437)]

«الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ ‌وَهُوَ ‌ابْنُ ‌أَعْيَنَ ‌ثِقَةٌ

இமாம் நஸாயீ அவர்கள் இவர் நம்பகமானவர் என்று கூறியுள்ளார்.

(சுனன் குப்ரா – நஸாயீ 4/437)

[تهذيب الكمال (٦/ ٣٠٦)]

وذكره ابن حبان في كتاب “ الثقات

இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் தமது “அஸ்ஸிகாத்” என்ற நூலில் நம்பகமானவர்கள் பட்டியலில் இவரைக் கொண்டு வந்துள்ளார்.

(தஹ்தீபுல் கமால் 6/306)

[تقريب التهذيب (١/ ٢٤٢)]

صدوق

இமாம் இப்னு ஹஜர் அவர்கள் உண்மையாளர் என்று கூறியுள்ளார்.

(தக்ரீபுத் தஹ்தீப் 1/242)

[الكاشف في معرفة من له رواية في الكتب الستة (٢/ ٢٧٦)]

ثقة

இமாம் தஹபீ அவர்கள் இவர் நம்பகமானவர் என்று கூறியுள்ளார்.

(அல் காஷிஃப் 4/319)

மேற்கண்ட இமாம்களின் கூற்று அனைத்தும் ஹசன் இப்னு அஃயன் என்பவர் நம்பகமான உறுதியான அறிவிப்பாளர் என்பதற்குச் சான்றாக உள்ளது.

ஹசன் இப்னு அஃயன் அவர்களை இமாம் அபூ ஹாதிம் அவர்கள் மட்டும் ஏற்காமல் இருந்துள்ளார். ஆனால் அந்த விமர்சனம் சரியானதாக இல்லை. அது தொடர்பான விளக்கத்தைக் காண்போம்.

இமாம் அபூ ஹாதிம் அவர்களின் விமர்சனம்:

[تهذيب التهذيب (١/ ٤١٣)]

وقال أبو حاتم: أدركته، ولم أكتب عنه

இமாம் அபூ ஹாதிம் அவர்கள், அவரை நான் அடைந்தேன். அவரிடமிருந்து நான் எழுதிக் கொள்ளவில்லை.

(தஹ்தீபுத் தஹ்தீப் 1/413)

இமாம் அபூ ஹாதிம் அவர்கள் அவரை அடைந்தும் எழுதாமலிருந்தது என்பது அவரை ஏற்காமல் இருந்துள்ளார் என்று இருந்தாலும், இமாம் அபூ ஹாதிம் அவர்கள் அறிவிப்பாளரை குறைக் கூறுவதில் கடினப்போக்குள்ளவர் என்பதை இமாம் தஹபீ அவர்கள் கூறியுள்ளார்.

[ذكر من يعتمد قوله في الجرح والتعديل (ص172)]

«وأبو حاتم والجوزجاني متعنتون

இமாம் அபூ ஹாதிம் அவர்கள் அறிவிப்பாளரைக் குறை கூறுவதில் கடினப் போக்குள்ளவர்.

(திக்ரு மய் யுஃதமது கவ்லுஹூ ஃபில்ஜர்ஹி வத்தஃதீல் பக்கம்:172)

இமாம் அபூ ஹாதிம் அவர்கள் மட்டுமே இவரை ஏற்காமல் இருந்துள்ளார்கள். ஆனால் அதற்குரிய காரணத்தையும் கூறவில்லை என்பதாலும், இமாம் அபூ ஹாதிம் அவர்கள் அறிவிப்பாளரைக் குறை கூறுவதில் கடினப் போக்குள்ளவர் என்பதாலும், நம்பகமானவர்கள் என்று பலர் கூறும் கூற்றையே நாம் எடுத்துக் கொள்ளவேண்டும்.

பலர் நம்பகமானவர் என்று கூறி இருக்க எந்தக் காரணமும் குறிப்பிடாமல் ஏற்காமல் இருப்பது ஹதீஸ் கலை விதிகளின்படி ஏற்கத்தக்கதாக இல்லை. இதை வைத்து இவர் பலவீனமானவர் என்று முடிவெடுக்க முடியாது.

எனவே இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது தான் என்பது உறுதியாகின்றது,

பூனையை விற்பனை செய்வது தடை என்ற ஹதீஸில் குளறுபடி உள்ளதா?

அடுத்து, அறிவிப்பு ரீதியாக வைக்கப்படும் மற்றொரு வாதம், பூனையை விற்கக் கூடாது என்று வரும் செய்திகள் ஆதாரமற்றது என்றும் அதில் இள்திராப் (குளறுபடி) உள்ளது என்றும் சிலர் கூறுகின்றனர்.

ஆனால் உண்மையில் பூனையை விற்கக் கூடாது என்பது தொடர்பாக பல நபித்தோழர்கள் வழியாக பல வழிகளில் அறிவிக்கப்பட்டிருக்கும் அறிவிப்புகளில் பலவீனமான ஹதீஸ்களும் உள்ளன. ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் உள்ளன.

அவற்றில் பலவீனமான ஹதீஸ்கள் தொடர்பான விமர்சனங்களை எடுத்து வைத்துக் கொண்டு பொதுவாக அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவை என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். அது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

இமாம் திர்மிதி அவர்களின் இள்திராப் என்னும் விமர்சனம்:

இமாம் திர்மிதி அவர்கள், பூனையை விற்கக் கூடாது என்பது தொடர்பான செய்தியைக் குறிப்பிட்டுவிட்டு இது இள்திராப் (குளறுபடி) உள்ள ஹதீஸ் என்று குறிப்பிடுகிறார்.

1279 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ، قَالَا: حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ ‌ثَمَنِ ‌الكَلْبِ ‌وَالسِّنَّوْرِ

நபி (ஸல்) அவர்கள் நாய் மற்றும் பூனை விற்ற காசைத் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: திர்மிதி 1279

இமாம் திர்மிதி அவர்கள் இந்த ஹதீஸை குறிப்பிட்டு விட்டு அதற்குக் கீழ் குறிப்பிடுகிறார்:

هَذَا حَدِيثٌ فِي إِسْنَادِهِ اضْطِرَابٌ وَلَا يَصِحُّ فِي ثَمَنِ السِّنَّوْرِ وَقَدْ رُوِيَ هَذَا الحَدِيثُ، عَنِ الأَعْمَشِ، عَنْ بَعْضِ أَصْحَابِهِ، عَنْ جَابِرٍ، وَاضْطَرَبُوا عَلَى الأَعْمَشِ فِي رِوَايَةِ هَذَا الحَدِيثِ وَقَدْ كَرِهَ قَوْمٌ مِنْ أَهْلِ العِلْمِ ثَمَنَ الهِرِّ، وَرَخَّصَ فِيهِ بَعْضُهُمْ، وَهُوَ قَوْلُ أَحْمَدَ، وَإِسْحَاقَ وَرَوَى ابْنُ فُضَيْلٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ غَيْرِ هَذَا الوَجْهِ

இது அறிவிப்பாளர் தொடரில் குளறுபடி (இள்திராப்) உள்ள ஹதீஸாகும். பூனை விற்ற காசு தொடர்பான விஷயத்திற்கு இது சான்றாகாது.

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ், அஃமஷ் அவர்களிடமிருந்து அவரின் மாணவர்கள் சிலர் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸை அறிவிப்பதில் அஃமஷ் அவர்களிடமிருந்து (அவரின் மாணவர்கள் அறிவிப்பதில்) குழப்பம் ஏற்ப்பட்டுள்ளது.

கல்வியாளர்களில் இருந்து ஒரு கூட்டம் பூனை விற்ற காசை வெறுக்கிறார்கள். அவர்களில் வேறு சிலர் அனுமதி உண்டு என்கின்றனர். இதுவே அஹ்மத் பின் ஹன்பல், இஸ்ஹாக் பின் ராஹவைஹி ஆகியோரின் கூற்றாகும்.

இதே ஹதீஸ், அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாகவும் மற்றோர் அறிவிப்பாளர் தொடரில் வந்துள்ளது.

அதை அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அபூஹாஸிம் அவர்களும், அபூஹாஸிம் அவர்களிடமிருந்து அஃமஷ் அவர்களும் அறிவிக்கின்றனர்.

நூல்: திர்மிதி 1279

ஆக ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்ற இந்த ஹதீஸை அறிவிப்பதில் அஃமஷ் அவர்களிடமிருந்து அவரின் மாணவர்கள் அறிவிப்பதில் தான் குளறுபடி (இள்திராப்) ஏற்ப்பட்டுள்ளது என்று இமாம் திர்மீதி அவர்கள் குறிப்பிட்டுக் கூறுகிறார்கள். அஃமஷ் அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் பலவீனமானவை என்பது குறித்து கீழே விரிவாகப் பார்க்கவுள்ளோம்.

நாம் ஆதாரப்பூர்வமானது என்று குறிப்பிட்டுள்ள முஸ்லிம் அறிவிப்பு அஃமஷ் அவர்கள் வழியாக அறிவிக்கப்படவில்லை. எனவே முஸ்லிம் அறிவிப்பு சரியானது தான்.

இப்படி குறிப்பிட்டு அஃமஷ் அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகிற செய்தியில்தான் குளறுபடி (இள்திராப்) ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளதை வைத்து எல்லா அறிவிப்புகளும் குளறுபடி (இள்திராப்) ஆனவை என்று கருதுவது தவறு.

இமாம் நஸாயீ அவர்களின் முன்கர் என்னும் விமர்சனம்:

இமாம் நஸாயீ அவர்கள் பூனையை விற்பது தொடர்பான குறிப்பிட்ட அறிவிப்பாளர் வழியாக வந்த செய்தியை மட்டும் முன்கரான (நிராகரிக்கப்பட்ட) செய்தி என்று குறிப்பிடுகிறார்.

«سنن النسائيயு (7/ 309):

[4668] أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ، قَالَ: أَنْبَأَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم : “ نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ وَالسِّنَّوْرِ، إِلَّا كَلْبِ صَيْدٍ “،

قَالَ أَبُو عَبْد الرَّحْمَنِ: هَذَا مُنْكَرٌ

«سنن النسائيயு (7/ 190):

[4295] أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ الْمِقْسَمِيُّ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم : “ نَهَى عَنْ ثَمَنِ السِّنَّوْرِ، وَالْكَلْبِ إِلَّا كَلْبَ صَيْدٍ “.

قَالَ أَبُو عَبْد الرَّحْمَنِ: وَحَدِيثُ حَجَّاجٍ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، لَيْسَ هُوَ بِصَحِيحٍ

இமாம் நஸாயீ அவர்கள் இந்தச் செய்திகளில் ஹஜ்ஜாஜ் இப்னு முஹம்மது என்பவர் ஹம்மாத் வழியாக அறிவிக்கும் செய்திகளைத் தான் முன்கரான (நிராகரிக்கப்பட்ட) செய்தி என்றும், ஆதாரப்பூர்வமான செய்தியாக இல்லை என்று விமர்சனம் செய்கிறார். இந்தச் செய்திகளில் வேட்டை நாயைத் தவிர மற்ற நாய்களை விற்பது தடை என்ற கூடுதல் வாசகத்துடன் இடம்பெறுகிறது.

ஆக இமாம் நஸாயீ அவர்களின் முன்கர் என்ற விமர்சனம் முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ் குறித்து அல்ல என்பது தெளிவாகிறது.

இப்னு அப்துல் பர் அவர்களின் விமர்சனம்:

இமாம் இப்னு அப்துல் பர் அவர்கள் பூனையை விற்பது தொடர்பாக எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை என்று குறிப்பிடுகிறார்.

«التمهيد – ابن عبد البرயு (8/ 403 ط المغربية):

«وَلَيْسَ فِي السِّنَّوْرِ شَيْءٌ صَحِيحٌ ‌

பூனை (விற்பது) தொடர்பான செய்திகளில் ஆதாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் இல்லை.

(தம்ஹீத் 8/403)

இமாம் இப்னு அப்துல் பர் அவர்கள் இந்த முடிவைக் கூறுவதற்கு முன் தமது தம்ஹீதில் இரண்டு அறிவிப்புகளைக் கொண்டு வந்து, அதன் மீதுள்ள விமர்சனங்களைக் கூறிய பிறகு தான் இது குறித்து எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை என்ற முடிவைக் கூறுகிறார். அந்த இரண்டு அறிவிப்புகளை வைத்துத் தான் இந்த முடிவைக் கூறி இருக்கிறார் என்பது தெளிவாகிறது. அந்த இரண்டு அறிவிப்புகள் குறித்துப் பார்க்கலாம்.

முதலாவது அறிவிப்பு:

«التمهيد – ابن عبد البرயு (6/ 80 ت بشار):

«وقد روَى حمادُ بنُ سلمةَ، عن أبي الزُّبيرِ، عن جابرٍ، أنَّ رسولَ الله صلى الله عليه وسلم نَهى عن ثمَنِ الكلبِ والسِّنَّوْرِயு

«وهذا لم يَرْوِه عن أبي الزُّبَيْرِ غيرُ حمَّادِ بنِ سَلَمَةயு

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்தச் செய்தியில் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூ ஜுபைர் அவர்கள் ஹம்மாத் இப்னு சலமா அவர்கள் வழியாகவே தவிர அறிவிக்கவில்லை என்பது தான் இமாம் இப்னு அப்துல் பர் சொல்கிற விமர்சனம். (தம்ஹீத் 6/80)

ஏனெனில் அபூ ஜுபைர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹம்மாத் இப்னு சலமா அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் அறிவிப்புகளில் மட்டும் கூடுதல் வாசகம் இடம் பெறுவதால் இமாம் நஸாயீ போன்றோர் இந்த அறிவிப்புகளை முன்கர் என்று விமர்சிக்கிறார்கள் என்பதை முன்பு கண்டிருந்தோம்.

ஆனால் இமாம் இப்னு அப்துல் பர் சொல்கிறபடி அல்லாமல், ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்தச் செய்தியில் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூ ஜுபைர் அவர்கள் ஹம்மாத் இப்னு சலமா அவர்கள் அல்லாத வேறு அறிவிப்பாளர்கள் வழியாகவும் அறிவித்துள்ளார்கள்.

குறிப்பாக முஸ்லிமில் இடம்பெறும் செய்தியில், அபூ ஜுபைர் அவர்கள் மஃகல் இப்னு உபைதுல்லாஹ் அவர்கள் வழியாக ஆதாரப்பூர்வமான செய்தியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது அறிவிப்பு:

«التمهيد – ابن عبد البرயு (6/ 81 ت بشار):

«وروَى الأعمشُ، عن أبي سفيانَ، عن جابرٍ، عن النبيِّ صلى الله عليه وسلم مثلَه، قال: نهَى رسولُ الله صلى الله عليه وسلم عن ثمَنِ الكلبِ والسِّنَّوْرِ.

وحديثُ أبي سفيانَ عن جابرٍ لا يَصِحُّ؛ لأنَّها صَحِيفَةٌ، وروايةُ الأعمشِ في ذلك عندَهم ضعيفةٌயு

ஜாபிர் (ரலி) அவர்கள் அவர்களிடமிருந்து அபூ சுஃப்யான் அறிவிக்கும் செய்தி சரியானது இல்லை. ஏனென்றால் அது ஏட்டிலிருந்து பெற்றவையாகும் (நேரடியாகக் கேட்டவையாக இல்லை). மேலும் இதன் விஷயத்தில் உள்ள அஃமஷ் அவர்களின் அறிவிப்பு ஹதீஸ் கலை அறிஞர்களிடம் பலவீனமானதாகும் என்று இமாம் இப்னு அப்துல் பர் கூறுகிறார்கள்.

(தம்ஹீத் 6/81)

நாம் அஃமஷ் அவர்களிடமிருந்து அவரின் மாணவர்கள் அறிவிப்பதில் குளறுபடி உள்ளது என்ற இமாம் திர்மிதி அவர்களின் விமர்சனத்தை முன்பே பார்த்திருந்தோம்.

அதுமட்டுமில்லாமல், இன்னும் பல விமர்சனங்கள் அஃமஷ் அவர்கள் அறிவிப்பின் மீது வைக்கப்படுகிறது. அதில் இமாம் பைஹகீ அவர்கள் தனது சுனன் குப்ராவில் கூறுவதை காண்போம்.

«السنن الكبرى – البيهقيயு (6/ 18 ط العلمية):

« لِأَنَّ وَكِيعَ بْنَ الْجَرَّاحِ رَوَاهُ عَنِ الْأَعْمَشِ قَالَ: قَالَ جَابِرُ بْنُ عَبْدِ اللهِ، فَذَكَرَهُ، ثُمَّ قَالَ: قَالَ الْأَعْمَشُ: أَرَى أَبَا سُفْيَانَ ذَكَرَهُ، ‌فَالْأَعْمَشُ ‌كَانَ ‌يَشُكُّ ‌فِي ‌وَصْلِ ‌الْحَدِيثِ، فَصَارَتْ رِوَايَةُ أَبِي سُفْيَانَ بِذَلِكَ ضَعِيفَةًயு

இந்தச் செய்தியை ஜாபிர் (ரலி) அவர்கள் சொன்னதாக அஃமஷ் அவர்களிடமிருந்து வகீஃ இப்னு ஜர்ராஹ் அறிவிக்கிறார்.

பின்னர் இந்தச் செய்தியை ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து சுஃப்யான் அறிவித்தாக அஃமஷ் குறிப்பிடுகிறார். இதில் அஃமஷ் அவர்கள் இந்தச் செய்தி நபிகளாருடன் இணைந்த செய்தி என்பதில் அஃமஷ் சந்தேகம் கொள்கிறார். எனவே சுஃப்யான் வழியாக வரும் செய்தி பலவீனமானதாகும்.

(சுனனுல் குப்ரா – பைஹகீ 6/18)

ஆக அஃமஷ் அவர்களின் அறிவிப்புகளில் குறைகள் உள்ளது என்பது தெளிவாகிறது.

அஃமஷ் அவர்களின் அறிவிப்புகளில் குளறுபடி உள்ளது என்ற இமாம் திர்மீதி அவர்களின் விமர்சனம், அஃமஷ் அவர்கள் இந்த ஹதீஸை நபிகளாருடன் இணைந்த செய்தி என்பதில் அஃமஷ் சந்தேகம் கொள்கிறார் என்ற விமர்சனம், ஜாபிர் (ரலி) அவர்கள் அவர்களிடமிருந்து அபூ சுஃப்யான் அறிவிக்கும் செய்தி நேரடியாகக் கேட்டவையாக இல்லை ஏட்டிலிருந்து பெற்றவை என்ற விமர்சனம். இதுபோன்ற பல விமர்சனங்கள் இந்த அஃமஷ் அவர்களின் அறிவிப்புகள் சரியானவை அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

ஆக இமாம் இப்னு அப்துல் பர் அவர்கள் பூனை (விற்பது) தொடர்பான செய்திகளில் ஆதாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் இல்லை என்று இந்த பலவீனமான இரண்டு அறிவிப்புகளை வைத்துத் தான் சொல்கிறார். இந்த விமர்சனம் முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ் குறித்து அல்ல.

அதே போல, இமாம் நவவி அவர்கள் இமாம் இப்னு அப்துல் பர் அவர்களின் விமர்சனம் சரியில்லை என்பதை தனது முஸ்லிமுக்கான விரிவுரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

«شرح النووي على مسلمயு (10/ 234):

«وَأَمَّا ما ذكره الخطابى وأبو عمرو بْنُ عَبْدِ الْبَرِّ مِنْ أَنَّ الْحَدِيثَ فِي النَّهْيِ عَنْهُ ضَعِيفٌ فَلَيْسَ كَمَا قَالَا بَلِ الحديث صحيح رواه مسلم وغيره وقول بن عَبْدِ الْبَرِّ إِنَّهُ لَمْ يَرْوِهِ عَنْ أَبِي الزُّبَيْرِ غَيْرُ حَمَّادِ بْنِ سَلَمَةَ غَلَطٌ مِنْهُ أَيْضًا لِأَنَّ مُسْلِمًا قَدْ رَوَاهُ فِي صَحِيحِهِ كما تروى مِنْ رِوَايَةِ مَعْقِلِ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ أَبِي الزُّبَيْرِ فَهَذَانِ ثِقَتَانِ رَوَيَاهُ عَنْ أَبِي الزُّبَيْرِ وَهُوَ ثِقَةٌ أَيْضًا وَاللَّهُ أَعْلَمُயு

பூனை விற்பது தடை என்பது தொடர்பான ஹதீஸ் பலவீனமானது என்று ஹத்தாபி மற்றும் இப்னு அப்துல் பர் அவர்கள் கூறியது என்பது, அவ்விருவரும் கூறியது போல் இல்லை. மாறாக, அந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதாகும். இதை முஸ்லிம் மற்றும் அவரல்லாதவர்களும் அறிவித்துள்ளார்கள். அபூ ஜுபைர் அவர்கள் ஹம்மாத் இப்னு சலமா அவர்கள் வழியாகவே தவிர அறிவிக்கவில்லை என்ற இமாம் இப்னு அப்துல் பர் அவர்களின் விமர்சனம், அவரிடம் ஏற்பட்ட பிழையே ஆகும். ஏனென்றால் முஸ்லிம் அவர்கள் தனது ஸஹீஹில் அபூ ஜுபைர் அவர்கள் மஃகல் இப்னு உபைதுல்லாஹ் அவர்கள் வழியாக அறிவிப்பதைப் போன்று அறிவித்துள்ளார்கள். அவ்விருவரும் நம்பகமானவர்கள். அவ்விருவரும் அபூ ஜுபைர் அவர்கள் வழியாக அறிவிக்கிறார்கள். அவரும் நம்பகமானவர். அல்லாஹ் நன்கறிந்தவன்.

(ஷரஹுன் நவவி அலா முஸ்லிம் 10/234)

ஆக இமாம் இப்னு அப்துல் பர் அவர்கள் பூனை விற்பது தடை என்பது தொடர்பான செய்திகளில் ஆதாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் இல்லை என்ற விமர்சனம் முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ் குறித்து அல்ல என்பது மேலும் தெளிவாகிறது.

இமாம் அஹமத் அவர்களின் விமர்சனம்:

இமாம் அஹமத் அவர்கள் பூனையை விற்கக் கூடாது என்பது தொடர்பான செய்திகளை இள்திராப் (குளறுபடி) உள்ளது என்று குறிப்பிடுகிறார்.

«جامع العلوم والحكمயு (2/ 453 ت الأرنؤوط):

«قال أحمد: ‌ما ‌أعلم ‌فيه ‌شيئًا ‌يثبت ‌أو ‌يصحَّ، وقال أيضًا: الأحاديث فيه مضطربةٌ

இமாம் அஹமத் அவர்கள் கூறுகிறார்கள்: இது (பூனை விற்பது தடை என்பது) தொடர்பாக உறுதியான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் எந்த ஒன்றையும் நான் அறியவில்லை. இன்னும் கூறினார்கள்: இது தொடர்பான ஹதீஸ்களில் குளறுபடி உள்ளது.

(ஜாமிவுல் உலூமி வல் ஹிகமி 2/453)

இமாம் அஹமத் அவர்கள் கூறும்போது, பூனை விற்பது தடை என்பது தொடர்பான ஹதீஸ்களில் அதை உறுதிப்படுதுகிறவற்றைத் தான் அறியாததாகக் குறிப்பிட்டுவிட்டு, மற்றொரு முறை இந்த செய்திகளில் குளறுபடி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ஆக, தான் அறிந்தவரையில் குளறுபடியாக உள்ளதாகக் கூறுகிறார்.

இமாம் அஹமத் அவர்கள் தனது முஸ்னதில் பதிவு செய்திருக்கும் செய்திகள்:

(13881)- [13752] حَدَّثَنَا عَبْد اللَّهِ، حَدَّثَنِي أَبِي، وَيَحْيَى بْنُ مَعِينٍ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا عُمَرُ بْنُ زَيْدٍ الصَّنْعَانِيُّ، أَنَّهُ سَمِعَ أَبَا الزُّبَيْرِ الْمَكِّيَّ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم “ نَهَى عَنْ ثَمَنِ الْهِرِّ “

இந்தச் செய்தியில் இடம்பெறும் உமர் இப்னு ஜைத் என்பவர் பலவீனமான அறிவிப்பாளர் என்பதால் இந்த ஹதீஸ் பலவீனமானது.

(14356)- [14242] حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عِيسَى، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، وَعَن خَيْرِ بْنِ نُعَيْمٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، أَنّ النَّبِيَّ صلى الله عليه وسلم “ نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ، وَنَهَى عَنْ ثَمَنِ السِّنَّوْرِ “

(14851)- [14728] حَدَّثَنَا حَسَنٌ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، قَالَ: سَأَلْتُ جَابِرًا، عَنْ ثَمَنِ الْكَلْبِ، وَالسِّنَّوْرِ، فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم زَجَرَ عَنْ ذَلِكَ “

(14473)- [14353] حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم “ نَهَى عَنْ ثَمَنِ السِّنَّوْرِ وَهُوَ الْقِطُّ “

இந்தச் செய்திகளில் இடம்பெறும் இப்னு லஹீஆ என்பவர் பலவீனமான அறிவிப்பாளர் என்பதால் இந்த ஹதீஸ்கள் பலவீனமானது.

இமாம் அஹமத் அவர்கள் தான் அறிந்து, தனது முஸ்னதில் பதிவு செய்திருக்கும் செய்திகள் பலவீனமானவையாக உள்ளது. இதை வைத்துத் தான் இமாம் அஹமத் அவர்கள் இப்படி விமர்சனம் செய்திருக்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது.

அதே நேரத்தில் முஸ்லிமில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பு ஆதாரப்பூர்வமான அறிவிப்பாகும். ஆக இமாம் அஹமத் அவர்கள் குறிப்பிடும் விமர்சனம் முஸ்லிம் அறிவிப்புக்குப் பொருந்தாது என்பது தெளிவாகிறது.

இந்த வகையில், பூனையை விற்கக் கூடாது என்பது தொடர்பாக வரும் ஹதீஸ்களில் குறிப்பிட்ட சிலர் வழியாக அறிவிக்கப்படும் செய்தியின் மீது வைக்கப்படும் விமர்சனங்களைப் பொதுவாக்கி அனைத்து அறிவிப்பாளர் தொடரிலும் குளறுபடி உள்ளதாகக் கூறிவருகின்றனர்.

ஆக, பூனையை விற்கக் கூடாது என்று வரும் செய்தியில் அறிவிப்பாளர் மற்றும் அறிவிப்பு ரீதியாக வைக்கப்படும் வாதங்கள் தவறானவை என்பது உறுதியாகின்றது.

வியாக்கியானங்களும் உண்மை விளக்கமும்:

அடுத்ததாக இந்த ஹதீஸை ஆதாரப்பூர்வமானது என்று ஏற்கும் சிலர் சில வியாக்கியானங்களைக் கொடுத்து பூனை விற்பதை அனுமதிக்கப்பட்டதாகக் கூறிவருகிறார்கள். ஆனால் அவர்கள் கூறும் வாதங்கள் எதுவும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை என்பதைக் காண்போம்.

பூனையை விற்பனை செய்வது தடை என்ற ஹதீஸில் உள்ள தடை நஹ்யு தன்ஜீஹ் தானா?

பூனையை விற்கக் கூடாது என்ற இந்த தடை நஹ்யு தன்ஜீஹ்

تنزيه نهي

என்ற அடிப்படையில் தான் சொல்லப்பட்டுள்ளது. அதாவது இந்தத் தடை நஹ்யு தஹ்ரீம்

تحريم نهي

என்கிற வகையில் முழுமையாக ஹராமாக்கப்பட்டுள்ளது என்றில்லாமல், ஹராமுக்குக் கீழ் நிலையில் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற வகையில் தான் சொல்லப்பட்டுள்ளது என்றும் கூறிவருகிறார்கள். இதற்கான பதிலைப் பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்கள் தடை செய்த ஒன்றை வேறொரு நிலையில் நபி (ஸல்) அவர்களே அதைச் செய்வதை போன்று சில ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வகை தடையைத் தான் நஹ்யு தன்ஜீஹ் என்று குறிப்பிடுகிறார்கள்.

உதாரணமாக, நபி (ஸல்) அவர்கள் நின்று குடிக்கத் தடை செய்துள்ளார்கள் என்றும், சில சந்தர்ப்பங்களில் நின்று குடித்துள்ளார்கள் என்றும் இரண்டு வகையான ஹதீஸ்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த இரண்டு ஹதீஸ்களின் அடிப்படையில் நின்று குடிக்கத் தடை தான், என்றாலும் குறிப்பிட்ட அமர முடியாத சந்தர்ப்பங்களில் நின்றும் குடிக்கலாம் என்று முடிவெடுத்துக் கொள்வோம்.

ஆனால் பூனை விற்பது தொடர்பான ஹதீஸைப் பொறுத்தவரை, இவர்கள் சொல்வதைப் போன்று இரண்டு விதமான ஹதீஸ்கள் வரவில்லை.

பூனை விற்பது தடை என்று ஹதீஸ் வந்துள்ளதே தவிர நபி (ஸல்) அவர்கள் பூனையை விற்பனை செய்ததாகவோ அல்லது செய்யலாம் என்று சொன்னதாகவோ ஹதீஸ் எதுவும் இடம்பெறவில்லை.

ஆக இந்தத் தடை முழுமையான தடையாகத் தான் விதிக்கப்பட்டுள்ளது. இதை நஹ்யு தன்ஜீஹ் என்கிற வகையிலான தடை என்று குறிப்பிட்டு ஆகுமாக்கிட எந்த முகாந்திரமும் இல்லை.

பூனை விற்பனை தடை என்ற ஹதீஸில் இடம்பெறும் ‘ஸஜர’ என்ற வார்த்தை லேசான தடையைத் தான் குறிக்கிறதா?

அதேபோல, சிலர் இந்தச் செய்தியில் தடை செய்யப் பயன்படுத்தப்பட்ட ‘ஸஜர’

زجر

என்ற வார்த்தையை வைத்து, இந்த வார்த்தை லேசான தடையைத்தான் குறிக்கிறது என்றும் முழுத்தடையைக் குறிக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

ஆனால் இவர்கள் கூறுவது போலல்லாமல் இவ்வார்த்தை பரவலாக நபிமொழிகளில் தடை என்பதைக் குறித்தே பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக,

«121 – (2126) وحَدَّثَنِي الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ. قَالَا: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ. أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ. أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ؛ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ: زَجَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ تَصِلَ الْمَرْأَةُ بِرَأْسِهَا شيئا

நபி(ஸல்) அவர்கள் பெண்கள் தமது தலையில் எதையும் ஒட்டுச்சேர்க்கை செய்வதைக் கண்டித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 4312

இந்த நபிமொழியிலும் நபி (ஸல்) அவர்கள் தலையில் ஒட்டுமுடி வைத்துக் கொள்வதைக் கண்டித்தார்கள் என்பதற்கு ‘ஸஜர’ என்ற வார்த்தை தான் வந்துள்ளது. ஒட்டுமுடி வைப்பது தடை என்பது, அதை வைப்பவர் மற்றும் வைத்துக் கொள்பவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் சபிக்கிற அளவு கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை நாம் ஹதீஸ்கள் வாயிலாக அறிந்து கொள்கிறோம்.

وَحَدَّثَنِي أَحْمَدُ بْنُ سَعِيدٍ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا حَبَّانُ ، حَدَّثَنَا وُهَيْبٌ ، حَدَّثَنَا مَنْصُورٌ ، عَنْ أُمِّهِ ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ: « أَنَّ امْرَأَةً أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم، فَقَالَتْ: إِنِّي زَوَّجْتُ ابْنَتِي فَتَمَرَّقَ شَعرُ رَأْسِهَا، وَزَوْجُهَا يَسْتَحْسِنُهَا، أَفَأَصِلُ يَا رَسُولَ اللهِ؟ فَنَهَاهَا

மேற்கண்ட இந்த (முஸ்லிம் 4307) அறிவிப்பில் நபி (ஸல்) அவர்களிடம் ஒட்டு முடி வைக்க அனுமதி கேட்கும் போது நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என்பதை குறிக்க ‘நஹா’

نَهَا

என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது.

ஒரே விஷயத்தைத் தடை செய்ய ‘ஸஜர’ என்ற வார்த்தையும், ‘நஹா’ என்ற வார்த்தையும் வந்துள்ளதை வைத்தே இரண்டுமே பொதுவாகத் தடை செய்வதைக் குறிக்கும் வார்த்தைகள்தான் என்பதை அறிந்துகொள்ளலாம்.

மேலும் இவர்கள் குறிப்பிடுவதற்கு மாற்றமாக இப்னு ஹஸ்ம் போன்றோர் ‘ஸஜர’ என்ற வார்த்தை மிகக் கடுமையான தடையைக் குறிப்பதாகக் கூறியுள்ளனர்.

«عمدة القاري شرح صحيح البخاري (12/ 60):

وَعكس ابْن حزم هَذَا، فَقَالَ: الزّجر أَشد النَّهْي

இப்னு ஹஸ்‌ம் ‘ஸஜர’ என்ற வார்த்தை மிகக் கடுமையான தடையைக் குறிப்பதாகக் கூறியுள்ளார்.

(உம்ததுல் காரி 12/60)

ஆக ‘ஸஜர’ என்ற வார்த்தை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள் என்ற கருத்தில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் லேசான தடையைக் குறிக்கவில்லை என்றும் தெளிவாகிறது.

காட்டுப்பூனைகள் மட்டும் தான் விற்கத் தடையா?

அடுத்து, இந்தச் செய்தியில் விற்பனைக்குத் தடை செய்யபட்டிருப்பது அனைத்து பூனைகளையும் அல்ல. மூர்க்கத்தனம் கொண்ட காட்டு பூனை போன்றவைகளைத்தான் எனச் சிலர் கூறுகின்றனர். ஆனால், இதுவும் சரியான கருத்து இல்லை.

பூனை என்பதை குறிக்க அரபு மொழியில் ஸின்னவ்ர், ஹிர், கித் என்று பல வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட இந்தச் செய்தியில் ஸின்னவ்ர் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பொதுவாகப் பூனை என்பதைத் தான் குறிக்கும். இந்த வார்த்தைக்கான சரியான பொருளை அரபி மொழி அகராதிகளில் காணலாம்.

«معجم متن اللغةயு (3/ 224):

«السنور: ‌الهر

ஸின்னவ்ர் என்பதன் பொருள் பூனை (ஹிர்)

(முஃஜமு மத்னில் லுகத் 3/224)

«المصباح المنير في غريب الشرح الكبير (1/ 291):

«‌‌(س ن ر) : ‌السِّنَّوْرُ الْهِرُّ وَالْأُنْثَى سِنَّوْرَةٌ قَالَ ابْنُ الْأَنْبَارِيِّ وَهُمَا قَلِيلٌ فِي كَلَامِ الْعَرَبِ وَالْأَكْثَرُ أَنْ يُقَالَ هِرٌّ وَضَيْوَنٌ وَالْجَمْعُ سَنَانِيرُ

ஸின்னவ்ர் என்பதன் பொருள் பூனை (ஹிர்), பெண்பால் ஸின்னவ்ரா.

இப்னுல் அன்பாரி கூறுகிறார் : இந்த(ஸின்னவ்ர், ஸின்னவ்ரா) இரண்டு வார்த்தைகளும் அரபுகளின் பேச்சில் குறைவானதாகும்.

பூனையைக் குறிக்க ஹிர், லைவனுன் என்ற வார்த்தைகள் கூறப்படுவது தான் அதிகம். ஸின்னவ்ர் என்பதன் பன்மை வடிவம் ஸனானீர்

(அல் மிஸ்பாஹுல் முனீரு ஃபிய் கரீபிஷ் ஷரஹில் கபீர் :1/291)

ஆக ஸின்னவ்ர் என்பது பூனையைக் குறிக்கும் வார்த்தை தான் என்பதையும், அரபுகளின் பேச்சுவழக்கில் குறைவாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை என்பதையும் மேற்கண்ட ஆதாரங்கள் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது.

இவர்கள் வாதிடுவதைப் போன்று தனித்த ஒரு வகையைச் சார்ந்த அல்லது மூர்க்கத்தனம் கொண்ட பூனையை மட்டும் தான் குறிக்கும் என்று சொல்வதாக இருந்தால், அப்படிச் சொல்வதற்குத் தகுந்த தனியொரு ஆதாரம் இருக்க வேண்டும்.

அப்படி எந்தவொரு ஆதாரமும் இல்லாமல், இவர்களாகவே, ‘ஹிர் என்ற வார்த்தை தான் பூனையைக் குறிக்க ஹதீஸ்களில் வந்துள்ளது. அதனால் இது வேறு வகைப் பூனையைக் குறிக்கும்’ என்று தானாகக் கற்பனை செய்து கூறுவது ஏற்கத் தகுந்ததாக இல்லை.

எனவே, இந்த வியாக்கியானம் அர்த்தமற்றதாக ஆகிவிடுகிறது.

பூனையை விற்பனை செய்வது தடை என்ற சட்டம் மாற்றப்பட்டுவிட்டதா?

அடுத்து, பூனை விற்கத் தடை என்பது ஆரம்ப காலச் சட்டம். ஆரம்பத்தில் பூனை அசுத்தம் என்ற வகையில் இருந்தது. அதன் பின் “அது நம்மைச் சுற்றிவரக்கூடியது என்று கூறி, அது வாய் வைத்த தண்ணீர் அசுத்தம் இல்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள். அதனால் அந்தச் சட்டம் மாற்றப்பட்டுவிட்டது. எனவே, பூனை விற்பனை செய்வதும் கூடும் என்று சிலர் கூறுகிறார்கள். இதுவும் தவறான ஆதாரமற்ற விளக்கமாகும்.

பூனை வாய் வைத்த தண்ணீரை நபி (ஸல்) அவர்கள் உளூ செய்ய அனுமதித்தார்கள். அது நம்மைச் சுற்றிவரக்கூடியது என்று கூறினார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதிலிருந்து பூனை வளர்ப்பதற்குத் தடையில்லை என்ற சட்டம் தான் எடுக்கப்படுமே தவிர, பூனை விற்பனை செய்யலாம் என்ற சட்டத்தை எடுக்க இயலாது.

மேலும், இது ஆரம்பகாலச் சட்டம், இது மாற்றப்பட்டுவிட்டது என்றெல்லாம் மார்க்கத்தில் கூறுவதாக இருந்தால், அது தெளிவான ஆதாரத்தின் மூலம் கூறப்பட வேண்டும். அப்படி எந்தவொரு ஆதாரமும் இல்லாத போது இரண்டு செய்திகளும் என்ன சட்டம் சொல்கிறதோ அதைத் தான் எடுத்து நடைமுறைப் படுத்த வேண்டும்.

இரண்டு செய்திகளும் நமக்குக் கூறும் சட்டம், பூனை வளர்க்க எந்தத் தடையுமில்லை. அதே சமயம் பூனை விற்பனை செய்யக் கூடாது என்பதாகும்.

இந்த இரண்டில் ஒன்று முந்தைய சட்டம், மற்றொன்று பிந்தைய சட்டம் என்றும், விற்கக் கூடாது என்பது மாற்றப்பட்டுவிட்டது என்றும் கூற எந்த ஆதாரமும் இல்லை.

வளர்க்கலாம் என்பதால் விற்கலாமா?

அடுத்தாக சிலர், எதைப் பயன்படுத்துவது கூடுமோ அதை விற்பனை செய்வதும் கூடும் என்கிற அடிப்படையில், பூனையை வளர்க்க அனுமதியுள்ளதால், அதை விற்பதில் தவறில்லை என்று கூறிவருகின்றனர்.

அவர்களின் வாதம், பூனை விற்பதைத் தடை செய்கிற நபிமொழியில் நபியவர்களிடம், நாய் விற்ற காசும் பூனை விற்ற காசும் சேர்த்துக் கேட்கப்படுகின்றது. அப்படி கேட்கப்படும் நிலையில், அவ்விரண்டுக்கும் தடை விதிக்கிறார்கள்.

‘இங்கு இரண்டும் ஒரே வகையிலானதல்ல. நாயை வீட்டுப் பிராணியாக வளர்க்கத் தடை செய்த நபிகளார், பூனையை வீட்டுப் பிராணியாக வளர்க்கத் தடை செய்யவில்லை. பூனை என்பது நம்மைச் சுற்றிவரக்கூடிய தூய்மையானது என்பதால், அதை வளர்க்கலாம் என்னும் போது, அதை விற்பதில் தவறில்லை’ என்று கூறிவருகின்றனர்.

இவர்களின் இந்த வாதமும் பிழையானது. நாயும் பூனையும் வெவ்வேறு அடிப்படைகளைக் கொண்டது என்பதை அறிந்துதான் நபியவர்கள் தடை விதிக்கிறார்கள். எந்தப் பூனையை வளர்க்க நபியவர்கள் அனுமதித்தார்களோ, அவர்களே அதை விற்கத் தடையும் விதித்துள்ளார்கள். அது தெளிவாக ஹதீஸில் வந்துவிட்ட பிறகு இதில் லாஜிக்கைப் புகுத்தி, இப்படியான கேள்விகளைக் கேட்டு, அனுமதியாகக் கருதுவது நபிவழியை மீறும் செயல் என்பதால் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ள வேண்டும்.

இது ஆதாரபூர்வமான நபிமொழி என்று தெளிவானதற்குப் பிறகு அதற்கு வியாக்கியானம் கொடுப்பதை விட்டுவிட்டு அதற்கு நாம் கட்டுப்பட்டுத் தான் ஆக வேண்டும்.

மார்க்க விஷயங்களில் ஆகுமானது எது? தடை செய்யப்பட்டது எது? என்று முடிவு செய்யும் அதிகாரம் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கு மட்டுமே உள்ளது.

أَمْ لَهُمْ شُرَكَاءُ شَرَعُوا لَهُمْ مِنْ الدِّينِ مَا لَمْ يَأْذَنْ بِهِ اللَّهُ

அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கத்தில் சட்டமாக்கும் இணைக் கடவுள்கள் அவர்களுக்கு உள்ளனரா?

அல்குர்ஆன் 42:21

وَمَا ءَاتَىٰكُمُ ٱلرَّسُولُ فَخُذُوهُ ‌وَمَا ‌نَهَىٰكُم عَنهُ فَٱنتَهُواْ

தூதர் கொடுத்ததை எடுத்துக் கொள்ளுங்கள். எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்.

அல்குர்ஆன் 59:07

பொதுவாக மார்க்கத்தில் தடை செய்யப்பட்டவைகளைப் பொறுத்தவரை பல வகைகளில் அது தடை செய்யப்பட்டு இருக்கும். பொத்தாம் பொதுவாக எதை பயன்படுத்துவது கூடுமோ அதை விற்பனை செய்வதும் கூடும் என்று கூறிவிட முடியாது.

சில விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டும் தடுக்கப்பட்டு மற்றவர்களுக்கு அனுமதிக்கப்பட்டதாக இருக்கும். தங்கம், காவி, பட்டு போன்றவற்றை ஆண்களுக்கு மட்டும் மார்க்கம் தடை செய்து பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதைப் போன்று.

சில தடை செய்யப்பட்ட பொருட்களில், ஒரு வகையில் தடுக்கப்பட்டு அதை  மற்றொரு வகையில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருக்கலாம். தானாக இறந்து விட்ட பிராணியை உண்பதைத் தடை செய்துவிட்டு அதன் தோலைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதைப் போன்று.

ஆக ஒரு விஷயம் ஒரு வகையில் அனுமதிக்கப்பட்டு, வேறொரு வகையில் தடை செய்யப்பட்டிருந்தால், எதை, எந்த வகையில் நபியவர்கள் தடை செய்துவிட்டார்களோ அதை அந்த வகையில் தவிர்த்துத் தான் ஆக வேண்டும். இதனடிப்படையில் பூனை வளர்க்க அனுமதிக்கப்பட்டிருந்தாலும், விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அதை தவிர்த்துத்தான் ஆக வேண்டும்.

பூனை தூய்மையானது என்கிற வகையில் வளர்க்க அனுமதிக்கப்பட்டிருந்தாலும், கோரைப் பற்களை உடைய, கூரிய நகம் உள்ள பிராணி என்கிற வகையில் உண்ணத் தடை செய்யப்பட்ட பிராணியாகும்.

தூய்மையானது என்று வளர்க்க அனுமதிக்கப்பட்டதால், அதை உண்ணலாம் என்று கருதுவது எப்படி தவறோ, அதைப் போன்றுதான் வளர்க்க அனுமதிக்கப்பட்டதால், அதை விற்கலாம் என்று கருதுவதும் தவறு.

பராமரிப்புக்கான தொகை தான் விலையாக வாங்கப்படுக்கிறதா?

அடுத்து, தண்ணீரைப் பயன்படுத்த அனுமதியுள்ளது. ஆனால் அதை விற்பனை செய்யத் தடையுள்ளது. அதே சமயம் அதைப் பாட்டிலில் அடைப்பதற்காக, சுத்திகரிப்புக்காக, லாரியில் சுமந்து செல்வதற்காக விலை நிர்ணயிப்பதைப் போல பூனையைப் பராமரித்ததற்காக விலை நிர்ணயிக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

ஆனால், இது முற்றிலும் தவறான வாதமாகும். முதலில் தண்ணீருடன் பூனையை ஒப்பிடுவதே தவறான ஒப்பீடு. தண்ணீர் என்ற அத்தியாவசியத் தேவையைப் போல பூனை என்பது அத்தியாவசியத் தேவையாக இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மனிதனின் அத்தியாவசியத் தேவையாக இருக்கும் தண்ணீரை, தன் தேவைக்கு மிஞ்சிய பிறகு அடுத்தவருக்கு எளிதாகக் கிடைக்கவிடாமல், அதை விற்பதை இஸ்லாம் தடை செய்கிறது. இதன் மூலம் இலகுவாக அனைவருக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொண்டு தடை செய்யப்பட்டுள்ளதை அறியலாம்.

அதனடிப்படையில்தான் தற்போதைய சூழலில் தண்ணீரை, அதை உரிய முறையில் மக்களுக்கு கொண்டுபோய் சேர்க்க ஆகும் செலவீனங்களுக்காகவும், அதில் ஈடுபடுவோருக்காகவும் அந்த தடையின் நோக்கம் சிதைக்கப்படாமல், தண்ணீர் விற்பனையாக அல்லாமல் அதைப் பயன்படுத்த செய்யப்படும் வேலைகளுக்கான கட்டணமாக அதை அனுமதிக்கிறோம்.

ஆனால் பூனையைப் பொறுத்தவரை, அத்தியாவசியத் தேவையாக அது இல்லை, அதுவும் தற்போது வளர்க்கப்படுகிற ஃபேன்ஸி ரகப் பூனைகளால் எலிகளைப் பிடிப்பது போன்ற பலன்களைக் கூட அடைய முடிவதில்லை.

பூனை என்பது தற்போது இரண்டு காரணங்களுக்காகத் தான் வளர்க்கப்படுகிறது. முதலாவது, ஒருவரது விருப்பத்திற்காக வளர்க்கப்படுகிறது. அப்படியில்லையென்றால், பூனை வளர்க்க விரும்புவோரிடம் விற்பதற்காக வளர்க்கப்படுகிறது.

அதில் விருப்பப்பட்டு வளர்க்கின்ற ஒருவரிடம் நாட்டு பூனை இருக்கிறது என்றால் அவர் அந்தப் பூனைக்கு உணவு கொடுப்பார், அதைப் பராமரிப்பார். அது அவரது கடமையைச் சார்ந்தது என்பதைப் புரிந்துள்ளார். ஆனால் ஃபேன்ஸி ரகப் பூனைகளைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட பெரும் தொகை கொடுத்து வாங்கிய காரணத்தினால், மீண்டும் இதைப் பெரும் தொகைக்கு விற்றோ, இனபெருக்கம் செய்து விற்றோ, போட்ட பணத்தை அடையலாமா என்று எண்ணுகின்றனர்.

அதே போல விருப்பப்படுபவர்களுக்கு விற்பனை செய்ய வளர்க்கின்றவரும் விற்பனை செய்வதற்காக சில பூனைகளைப் பெற்று அதற்காகவே இவர் அதைப் பராமரிக்கிறார் எனும்போது இங்கே விற்பனை நோக்கமே அன்றி வேறில்லை.

இவர்கள் நோக்கம் இப்படியிருக்க, இதை வைத்துக்கொண்டு உரிய நோக்கத்திற்காகத் தடை செய்யப்பட்ட தண்ணீருடன், பூனை விற்பதை ஒப்பிடுவது சரியானதல்ல.

மேலும், இவர்கள் சொல்லும் பராமரிப்புக்கான விலைக்குத் தான் விற்கபடுகிறது என்ற இந்த வாதமும் ஒரு சப்பைக்கட்டாகத்தான் இருக்கிறது.

ஏனெனில், இன்றைக்குச் சில பூனைகளை ஐந்தாயிரம், பத்தாயிரம் என ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்கு விற்பனை செய்கிறார்கள். இவ்வளவு தொகைக்கு விற்பனை செய்துவிட்டு இது பூனைக்கான விலையல்ல, பூனைக்கு ஊசி போட்ட, உணவு கொடுத்த பராமரிப்புக்கான விலைதான் என்று கூறுகின்றனர்.

இதில் நாம் கவனிக்கவேண்டியது, ஒருவர் பூனை வளர்ப்பதாக இருந்தால், அவர் அந்த பூனைக்கு உணவு கொடுக்க வேண்டும். அதைப் பராமரிக்க வேண்டும். அது அவரது கடமையைச் சார்ந்தது. பூனையை உணவளித்து பராமரிக்க வசதி மற்றும் வாய்ப்புள்ளவர்கள் தான் அதை வளர்க்க வேண்டும் என்று மார்க்கம் நிபந்தனையிடுகிறது.

ஆக அவர் விரும்பினால் தனியாரிடம் போய் ஊசி போடலாம் அல்லது அரசு கால்நடை மருத்துவமனைகளில் இலவச ஊசியும் போடலாம். அவர் விரும்பினால் அதிக விலையுள்ள உணவுகளை கொடுக்கலாம் அல்லது குறைந்த செலவில் சத்தான உணவும் வழங்கலாம். அவரவர் விருப்பத்தைப் பொறுத்து தான் இந்த செலவு அமைகிறது.

ஆக பராமரிப்பைக் காரணம் காட்டி விலையை நிர்ணயிப்பதாகச் சொல்லப்படுகிற காரணம் போலியானதே. மாறாக அன்றைக்கு சந்தையில் பரவலாக என்ன விலையில் விற்பனை செய்யப்படுகிறதோ அதைக் கவனித்து, அந்த விலையில் தான் விற்கப்படுகிறது என்பதே உண்மை. அவர் பராமரித்ததைக் கவனித்து அல்ல.

நாம் வளர்க்கும் ஏனைய எந்த வளர்ப்புப் பிராணிகள் மற்றும் கால்நடைகளின் விற்பனையின் போதும், நாம் பராமரித்ததை வைத்தெல்லாம் விலையை நிர்ணயம் செய்வதில்லை. இன்னும் சொல்லபோனால், நாம் விற்பனைகாகப் பண்ணை வைத்து வளர்த்தாலும் கூட, விற்கப்படும் விலையைப் பொறுத்தே நாம் அதன் பராமரிப்புச் செலவை அமைத்துக் கொள்வோம் என்பதே உண்மை.

இதன் மூலம் இது பூனைக்கான விலையாகவே நிர்ணயிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

அதேபோல, ஏதோ பூனையை வளர்ப்பதில் திடீரென்று செலவீனங்கள் ஏற்பட்டுவிட்டதைப் போன்று பூனைக்கான விலையில்லாமல், செலவீனங்களுக்கான விலையை வைத்து விற்கலாம் என்ற இவர்கள் வாதம் அமைந்துள்ளது. இவர்கள் சொல்கிறபடி பார்த்தால், அன்றைக்கு தண்ணீர் சுத்திகரிப்பது போன்ற செலவுகள் இல்லாமல் இருந்தது. அதனால் தற்காலத்தில் அதற்கு விலை நிர்ணயம் செய்யவேண்டியுள்ளது.

ஆனால், நபி (ஸல்) அவர்கள் பூனையை விற்கத் தடை செய்யும்போதே, அதை முறையாகப் பராமரித்து உணவளித்து வளர்த்தவர்களுக்கு அன்றைக்கேற்றபடி செலவுகள் இருக்கத்தான் செய்தது. உணவளிப்பது என்றைக்குமே இலவசமாக அமையாது. இந்த நிலையில் தான் நபி(ஸல்) அதை விற்கத் தடை செய்தார்கள் என்னும் போது இன்றைக்கு ஏதோ புதிதாக பராமரிக்கச் செலவாவதைப் போன்று அதற்கான தொகையாக வாங்கிக் கொள்ளலாம் என்று கூறி பூனை விற்பதை அனுமதிக்கின்றனர்.

இவர்கள் சொல்வது போல் அனுமதித்தால், நபி (ஸல்) அவர்கள் தடை செய்த நாளில் இருந்து இன்று வரையிலும், எந்தவொரு பூனையை வளர்த்தாலும் அதற்குச் சில தொகை பராமரிப்புக்காக செலவாகத்தான் செய்யும், அதை வைத்து பூனையை விற்றுக்கொள்ளலாம் என்று சொல்லும் போது எல்லாப் பூனைகளையும் விற்பனை செய்துகொள்ளலாம் என்ற நிலை ஏற்படும். இவர்களின் கருத்துப்படி, நபியவர்களின் தடையே அர்த்தமற்றதாக ஆகிவிடுகிறது.

நபி (ஸல்) அவர்கள் பூனை விற்பனையைத் தடை செய்திருப்பது ஆதாரப்பூர்வமான நபிமொழி என்று ஏற்ற பிறகு உலக ஆதாயங்களுக்காக இதுபோன்ற வியாக்கியானங்களைக் கொடுப்பதால், நபிமொழியைக் கேலிக்கூத்தாக்கி அப்பட்டமாக மறுக்கின்ற நிலை தான் ஏற்படும் என்பதைக் கவனிக்க வேண்டும். ஆக இந்த வாதமும் ஏற்புடையதாக இல்லை.

எனவே, பூனையை விற்பனை செய்ய நேரடித் தடையிருக்க அனுமதி என்று கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை

Source: onlinetntj

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *