பூண்டு சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு வரக்கூடாதா?
வெள்ளைப் பூண்டு வெங்காயம் சாப்பிட்டுவிட்டு பள்ளிவாசலுக்கு வரக்கூடாது என்று ஹதீஸ் உள்ளது. இதற்கு என்ன காரணம்?
இதற்கான காரணத்தை அல்லாஹ்வின் தூதர் அவர்களே நமக்குத் தெளிவுபடுத்தி விட்டனர்.
பூண்டு, வெங்காயம் போன்ற பொருட்கள் அசுத்தமானவையோ உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ அல்ல. ஆனால் அவற்றை உண்டால் நீண்ட நேரத்திற்கு வாயில் துர்நாற்றம் அடிக்கும். இந்த துர்நாற்றம் பள்ளியில் உள்ள மற்றவர்களுக்கு நோவினை ஏற்படுத்தும்.
தொழுகைக்காகப் பள்ளிக்கு வரும் போது, இது போன்ற நாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்பது தான் இதற்கான காரணம்.
*வெள்ளைப் பூண்டோ, வெங்காயமோ சாப்பிட்டவர் நம்மிடமிருந்து விலகியிருக்கட்டும். அல்லது நம் பள்ளிவாசலிலிருந்து விலகியிருக்கட்டும்* என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 5452
வெங்காயம் சாப்பிட்டு விட்டு, நம்முடன் தொழ வேண்டாம் என்றும், மஸ்ஜிதிற்கு வர வேண்டாம் என்றும் பல்வேறு ஹதீஸ்களில் கூறப்பட்டாலும், பின்வரும் ஹதீஸில் அதற்கான காரணம் கூறப்பட்டுள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சாப்பிட வேண்டாம் என்று தடை செய்தார்கள். எங்களுக்குத் தேவை மிகைத்து விடவே அவற்றிலிருந்து நாங்கள் சாப்பிட்டு விட்டோம். அப்போது அவர்கள், *துர்வாடையுள்ள இந்தச் செடியிலிருந்து விளைகின்றவற்றைச் சாப்பிட்டவர் நமது பள்ளிவாசலை நெருங்க வேண்டாம். ஏனெனில் மனிதர்களுக்குத் தொல்லை தருகின்றவை வானவர்களுக்கும் தொல்லை தருகின்றன* என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 874
*மனிதர்களுக்குத் தொல்லை தருவதால் தான் நபிகள் (ஸல்) அவர்கள், வெங்காயம் சாப்பிட்டு விட்டுப் பள்ளிக்கு வருவதைத் தடை செய்துள்ளார்கள்.*
தொழுகை நேரம் அல்லாத மற்ற நேரங்களில் இவற்றைச் சாப்பிடத் தடையில்லை. இவற்றைச் சாப்பிட்டுவிட்டு துர்வாடை கிளம்பாத அளவுக்கு வாயைத் தூய்மைப்படுத்திவிட்டால் ஜமாஅத்தில் தாராளமாக்க் கலந்து கொள்ளலாம்.
———————
*ஏகத்துவம்*