புகாரியில் பதிவான பலவீனமான ஹதீஸ்கள்
அறிஞர் அல்பானியின் ஆய்வுப் பார்வை
ஹதீஸ்களை அறிவிப்பாளர் தரம் பார்த்து பலம், பலவீனம் என்று பிரித்துத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்பத்திலேயே வந்துவிட்டது. அந்தக் காலகட்டத்தில் புகாரி, முஸ்லிமில் பலவீனமான ஹதீஸ்கள் எதுவும் அறவே இடம்பெறாது என்று உலகெங்கிலும் உள்ள மார்க்க அறிஞர்கள் நம்பியது போன்று நாமும் நம்பியிருந்தோம்.
ஆனால் எதையும் குருட்டுத்தனமாக ஏற்றுக் கொள்ளக்கூடாது என்ற குர்ஆனின் போதனைக்கு ஏற்ப, ஆய்வு செய்து, அலசிப் பார்த்து ஏற்க வேண்டும் என்ற தெளிந்த சிந்தனை ஓட்டத்துடன் சத்தியப் பாதையில் லட்சியப் பயணம் செய்யத் துவங்கினோம். இந்த நிலையில் புகாரி, முஸ்லிமையும் பலவீனமான ஹதீஸ்களின் தாக்கம் பதம் பார்க்காமல் விடவில்லை என்பதை அறிந்து கொண்டோம்.
பலவீனமான ஹதீஸ்களாக இருந்தால் மட்டும் பரவாயில்லை, குர்ஆனுடன் நேரடியாக மோதுகின்ற ஹதீஸ்கள் கூட, அல்குர்ஆனுக்கு அடுத்த நூல் என்ற பெயரைப் பெற்ற புகாரியிலேயே இடம் பெற்றிருப்பது தெரிய வந்த போது, ஓர் இறைநம்பிக்கையாளனுக்கு ஏற்படுகின்ற தயக்கமும் சங்கடமும் ஏற்பட்டது.
அதனால் அதற்குண்டான விடையும் விளக்கமும் கேட்டு இந்த ஹதீஸ்களை உலகத்தின் முன்வைத்தோம். விடையும் விளக்கமும் வரவில்லை. மாறாக, இவர்கள் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்ற பட்டம் கிடைத்தது. முஃதஸிலாக்கள் என்ற முத்திரை குத்தப்பட்டது. புகாரி, முஸ்லிமில் பலவீனமான ஹதீஸா? இதற்கு முன்பு இதுபோன்று யாரும் சொன்னதில்லையே! இவர்கள் தான் இதைப் புதிதாகச் சொல்கிறார்கள்: அதனால் இதை ஏற்க முடியாது என்ற குருட்டுப் பார்வை மட்டும் தான் அவர்களுடைய பதிலில் தெரிந்தது.
நாம் அஞ்சுவது அல்லாஹ்வை மட்டுமே! பின்பற்றுவது கலப்படமில்லாத தூய இறைச் செய்தியை மட்டுமே என்ற எஃகுச் சிந்தனையோடு, புகாரியிலும் குர்ஆனுக்கு முரண்படும் பாதகமான ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன எனற விபரத்தை மக்கள் மன்றத்தில் வைத்துவிட்டோம். ஒரே உறுதிப்பாட்டில் பயணத்தைத் தொடர்கின்றோம்.
மறைந்த அறிஞர் அல்பானி அவர்களின் உரையொன்றில் புகாரி தொடர்பான தனது நிலைபாட்டை தெளிவுபடுத்துகின்றார். அந்த உரையில் அறிஞர் அல்பானி அவர்கள் புகாரியிலும் பலவீனமான ஹதீஸ்கள் பதிவாகியுள்ளன என்ற கருத்தைக் கூறுகின்றார். அந்த உரை இந்த நேரத்தில் மிகப் பொருத்தமான ஒன்றாக இருக்கும் என்பதால் அந்த அரபி உரையின் தமிழாக்கத்தை இங்கு இணைத்துள்ளோம்.
எந்த அறிஞரின் கருத்துக்களிலும் ஏற்கத்தக்கவையும், நிராகரிக்கத் தக்கவையும் உண்டு என்ற நிலைப்பாட்டில் தவ்ஹீத் ஜமாஅத் உறுதியாக உள்ளது என்பது அனைவரும் அறிந்த விஷயம். இப்போது அந்தக் கேள்வி பதில் உரைக்குள் செல்வோம்.
கேள்வி?
புகாரியில் பலவீனமான ஹதீஸ்கள் உள்ளன என்று நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள். இதற்கு முன்பு எந்த அறிஞராவது இதைக் கூறியிருக்கின்றார்களா? இது தொடர்பாக நீங்கள் தனி நூல் எதுவும் வெளியிட்டிருக்கிறீர்களா?
அறிங்கர் அல்பானி அவர்களின் பதில்:
புகாரியில் பலவீனமான ஹதீஸ் உள்ளது என்று எனக்கு முன்னால் உள்ள அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள். அந்த உண்மையை ஒப்புக் கொண்டாக வேண்டும். அதை மறுக்கக் கூடாது. இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. முதலவதாக, ஒரு முஸ்லிம் – அவர் ஆசிரியராகவோ அல்லது மாணவராகவோ இருக்கலாம். பண்டிதராகவோ அல்லது பாமரராகவோ இருக்கலாம். முஸ்லிம்களில் எந்த ரகமாகவும் இருக்கலாம்.
அவர்கள் அத்தனை பேரும் ஒன்றாக ஒருமித்து ஒத்துக் கொண்ட உண்மை, தவறான கருத்திலிருந்து பாதுகாக்கப்பட்ட செய்தி (குர்ஆன்) வழங்கப்பட்டவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்கள் மட்டுமே என்பது தான். இந்த அடிப்படையில் ஒரு முஸ்லிமின் உள்ளத்தில் தோன்றுகின்ற அல்லது அவரது காதில் விழுகின்ற எந்தச் செய்தியாக இருக்கட்டும். நூலாக இருக்கட்டும். அதை அவர் புரட்டிப் பார்ப்பதற்கு முன்பு, அதில் புகுவதற்கு முன்னால் அந்த நூல் தவறுக்கு அப்பாற்பட்டதல்ல என்ற உறுதிப்பாட்டை அவரது உள்ளத்தில் ஆழமாகப் பதித்தாக வேண்டும். ஏன்?
பாதுகாக்கப்பட்ட, தவறுக்கு அப்பாற்பட்ட செய்தி (குர்ஆன்) அருளப்பட்ட பாக்கியம் முஹம்மத் (ஸல்) அவர்களைத் தவிர மனித சமுதாயத்தில் வேறு யாருக்கும் இல்லை என்பது முஸ்லிமின் கொள்கையாகும். இந்தப் பின்னணியில் தான் இமாம் ஷாஃபீ அவர்கள், திருக்குர்ஆனைத் தவிர வேறு எந்த நூலுக்கும் அல்லாஹ் முழுமையளிக்கவில்லை என்று கூறியிருக்கின்றார்கள்.
இது விவாதித்து ஏற்க வேண்டிய அவசியமில்லாத ஓர் அடிப்படையான உண்மையாகும். ஹதீஸ் கலையின் அடிப்படை விதிகள், அறிவிப்பாளர்களின் குறை நிறைகளை அலசுகின்ற ஆற்றலை அல்லாஹ் தனது அருட்கொடையாக எனக்கு அளித்துள்ளான். அதற்கு அவனுக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்.
பலமான ஹதீஸ்களை, பலவீனமான ஹதீஸ்களிலிருந்து தரம் பிரிக்கின்ற ஹதீஸ் கலைக் கல்வி மூலம் ஒரு பெருமளவுக்கு இந்தத் துறையில் ஈடுபாடு கொண்டேன். அதே கலை அறிவின் மூலம் புகாரி ஹதீஸ்களை ஆழ்ந்து, அதிகக் கவனம் எடுத்து ஆய்வு செய்ததில் புகாரியில் சில ஹதீஸ்கள் (ஸஹீஹ் என்ற) சரியான தரத்தில் அமைவது ஒருபுறமிருக்கட்டும். ஹஸன் என்ற தரத்தில் கூட அமையவில்லை. புகாரியின் நிலை இப்படி எனும் போது முஸ்லிமின் நிலையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
இது, புகாரியில் பலவீனமான ஹதீஸ்கள் இடம் பெற்றிருப்பது தொடர்பாக நான் செய்த ஆய்வுகள் பற்றிய பதில் ஆகும். புகாரியில் பலவீனமான ஹதீஸ்கள் இடம்பெற்றிருப்பது தொடர்பாக முந்தைய அறிஞர்கள் ஏதேனும் குறிப்பிட்டிருக்கிறார்களா? என்பது உங்கள் கேள்வியின் இரண்டாவது பகுதியாகும். இது தொடர்பாக நான் இங்கு குறிப்பிட விரும்புவது, அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அதிகமான அறிஞர்கள் எனக்கு முன்னரே இதே கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
அவர்கள் என்னை விட ஆயிரம் ஆண்டுகள் முந்தியவர்கள். ஆய்விலும் என்னை விட மிக மிக முந்தியவர்கள். இமாம் தாரகுத்னீ, புகாரியில் பத்து ஹதீஸ்கள் அளவிற்குக் குறை கண்டிருக்கிறார்கள். அவற்றை விமர்சித்துள்ளார்கள். என்னைப் பொறுத்த வரையில் புகாரியில் நான் விமர்சனம் செய்யும் ஹதீஸ்களின் எண்ணிக்கை பத்தை அடையவில்லை. இதற்கு ஓர் அடிப்படைக் காரணம் உண்டு.
நான் வாழ்கின்ற இந்தக் காலத்தில் சுனன் திர்மிதி, சுனன் அபூதாவூத், சுனன் இப்னுமாஜா, சுனன் நஸாயீ ஆகியவற்றில் இடம் பெற்றிருக்கின்ற ஹதீஸ்களின் தரங்களை ஆய்வு செய்து, அவற்றை அடையாளம் காட்டுகின்ற அவசியத்திற்கும் கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டேன். சுனன் இல்லாமல் முஸ்னத் அஹ்மத், முஃஜம் தப்ரானீ போன்ற நூற்களில் இடம்பெறும் ஹதீஸ்களையும் ஆய்வு செய்து அவற்றை அடையாளம் காட்டுகின்ற அவசியமும் கட்டாயமும் இருக்கின்றது.
ஆனால் அவற்றின் பக்கம் நெருங்குவதற்குப் போதுமான அவகாசம் இல்லை. புகாரி, முஸ்லிமைப் பொறுத்த வரையில் லட்சக்கணக்கான ஹதீஸ்களில் சரியானவற்றை பெருமளவிற்கு வடிகட்டி, தேர்வு செய்யும் பணியைச் செய்துள்ளார்கள். உண்மையில் இது மகத்தான பணியாகும்.
அந்த அளவுக்கு வார்த்து, வடிகட்ட வேண்டிய ஹதீஸ்களில் நான் ஆய்வு செய்ய இறங்குவது எனக்கு விவேகமான செயலாகவும், காலத்தின் கட்டாயமாகவும் தெரியவில்லை. அதனால் என்னுடைய முழுக் கவனத்தை நான்கு சுனன்களான திர்மதி, அபூதாவூத், இப்னு மாஜா, நஸயீ ஆகிய நூற்களில் இடம்பெற்ற ஹதீஸ்களில் திருப்பி விட்டேன்.
புகாரியில் பலவீனமான ஹதீஸ்
இந்நிலையில் என்னுடைய ஆய்வின் போது புகாரி, முஸ்லிமிலோ அல்லது இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றிலோ சில பலவீனமான ஹதீஸ்கள் இருப்பது எனக்குத் தெரியவந்தது. இவ்வாறு நான் சொல்லும் போது யாருக்கேனும் எனது ஆய்வின் முடிவில் ஐயம் ஏற்பட்டால் அவர் புகாரியின் விரிவுரையான ஃபத்ஹுல் பாரியைப் புரட்டுவாராக! அதில் ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் புகாரியில் இடம் பெறுகின்ற பல ஹதீஸ்கள் பற்றி அவர் செய்த விமர்சனங்களை அவர் காண்பார்.
ஹாஃபிழ் அஹ்மத் இப்னு ஹஜர் அவர்கள் ஹதீஸ் துறையில் அமீருல் முஃமினீன் என்று அனைவராலும் போற்றப்படக்கூடியவர் ஆவார். இந்தத் துறையில் பங்கெடுத்த அனைவரும் ஹாஃபிழ் இப்னு ஹஜர் போன்ற ஒரு பிள்ளையை எந்தவொரு தாயும் பெற முடியாது என்ற எனது கருத்தை அப்படியே வழிமொழிந்து விடுவார். அந்த அளவுக்கு ஹதீஸ் துறையில் அவரது ஞானம் கொடிகட்டிப் பறக்கின்றது.
அப்படிப்பட்ட அந்த அறிஞர் புகாரிக்கான தனது விரிவுரையில், அதில் பதிவான ஹதீஸ்களில் அதிகமான தவறுகளை விமர்சனம் செய்திருக்கின்றார். முஸ்லிமில் இடம்பெற்றுள்ள, சுனன் மற்றும் முஸ்னதில் இடம்பெற்றுள்ள ஹதீஸ்களைக் கூட அவர் இந்த அளவுக்கு விமர்சனம் செய்யவில்லை என்ற அளவுக்கு புகாரியின் ஹதீஸ்களை விமர்சனம் செய்திருக்கிறார்கள்.
புகாரி ஹதீஸ்கள் மீதான என்னுடைய விமர்சனப் பார்வையில், சில சந்தர்ப்பங்களில் ஒரு ஹதீஸ் முழுவதுமே பலவீனமாகி விடுகின்றது. சில சந்தர்ப்பங்களில் ஹதீஸின் ஒரு பகுதி மட்டும் பலவீனமாகி, அதன் மற்ற பகுதி சரியாக அமைந்துவிடுகின்றது. இதில் முதல் வகையை இப்போது பார்ப்போம்.
முதல் வகை
நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் இருக்கும் போது மைமூனா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள்.
நூல்: புகாரி-1838 , முஸ்லிம்-2755
இந்த ஹதீஸைப் பொறுத்தவரை முஸ்லிமுடன் சேராமல் புகாரி மட்டும் தனியாக அறிவிக்கின்ற ஹதீஸ் கிடையாது. மாறாக புகாரி, முஸ்லிம் இருவரும் கூட்டாகப் பதிவு செய்த ஹதீஸ் ஆகும். இப்போது இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரைப் பார்ப்போம்.
இந்தத் தொடரின் முதல் அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மீது எந்தக் குறையும் கிடையாது. அவர் அல்லாத அறிவிப்பாளர்கள் எவர் மீதும் குறை சொல்ல முடியாது. புகாரியில் வேறு சில ஹதீஸ்கள் உள்ளன. நபித்தோழர் அல்லாத வேறு அறிவிப்பாளர்கள் யாராவது ஒருவரிடம் கோளாறு இருக்கும். அதுபோன்ற தொடராக இந்த ஹதீஸின் தொடர் அமையவில்லை. அது மிகச் சரியான தொடராக அமைந்துள்ளது.
உதாரணத்திற்கு ஃபுலைஹ் பின் சுலைமான் என்ற புகாரியின் ஓர் அறிவிப்பாளரை எடுத்துக் கொள்வோம். அவரைப் பற்றி ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள், உண்மையாளர், மனனம் கெட்டவர் என்று குறிப்பிடுகின்றார். ஹதீஸ் துறையில் இந்த நிலையில் உள்ளவர் மிகக் குறைந்த தரத்தில் உள்ளவராகவே கருதப்படுவார்.
இந்தத் தரத்தில் உள்ளவரின் ஹதீஸை ஏற்க வேண்டும் என்றால் இதே ஹதீஸ் வேறொரு நல்ல அறிவிப்பாளர் தொடரில் வந்திருக்க வேண்டும். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் இதை ஒரு துணைச் சான்றாக எடுத்துக் கொள்வார். இவர் மட்டுமே தனியாக அறிவித்திருந்தால் அந்தத் தொடரை வகை வைக்க மாட்டார்கள். அந்த ஹதீஸை ஏற்கவும் மாட்டார்கள். மொத்தத்தில் சரியான அறிவிப்பாளர் தொடரில் இந்த ஹதீஸ் வராத வரை இந்த ஹதீஸ் பலவீனமானது என்பதே முடிவாகும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்ற, மைமூனா (ரலி) திருமணம் தொடர்பான இந்த ஹதீஸின் தொடர் பக்காவான, பலமான தொடராகும். இதில் ஃபுஹைல் பின் சுலைமான் போன்றோர் இடம் பெறாததால் இதை விமர்சனம் செய்வதற்கு வாய்ப்பு அறவே கிடையாது. அதன் காரணமாக முந்தைய ஹதீஸ் கலை அறிஞர்கள் இதை விமர்சிக்காமல் விட்டு விட்டனர். அவர்கள் ஒருவேளை குறை காண வேண்டுமென்றால் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைத் தவிர வேறு யாரையும் குறை காண முடியாது.
காரணம் அவர் கண்ணியத்திற்குரிய நபித்தோழர். அதனால் இப்னு அப்பாஸ் சிறிய வயதுடையவராக இருந்ததால் இந்தத் திருமண விஷயத்தைத் தவறாக விளங்கி அறிவித்து விட்டார் என்று அந்த ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறுகின்றனர். இது ஒரு காரணம். மற்றொரு காரணம், சம்பந்தப்பட்ட மைமூனா (ரலி) அவர்கள், நாங்கள் இருவருமே இஹ்ராம் அல்லாத சாதாரண நிலையில் தான் திருமணம் முடித்தோம் என்று கூறிவிட்டார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிப்புக்கு மாற்றமாக மைமூனா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
மேற்கண்ட இந்தக் காரணத்தால் இந்த ஹதீஸ் பலவீனமானதாக ஆகிவிட்டது. நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் இருக்கும் போது மைமூனா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள் என்ற இந்த ஹதீஸில் நான்கு அரபி வார்த்தைகள் உள்ளன. இப்படிப் பலவீனமாகும் ஹதீஸ், இதுபோன்று சிறிய அளவிலும் இருக்கலாம். சமயத்தில் இதைவிடப் பெரிதாகவும் அமையும். அதற்கு புகாரியில் எடுத்துக்காட்டுகள் உண்டு.
இரண்டாவது வகை
ஒரு ஹதீஸின் மூலம் சரியாக அமைந்திருக்கும். அந்த ஹதீஸ் தொடரின் இடையில் இடம்பெறுகின்ற யாராவது ஒரு அறிவிப்பாளரின் செய்தி ஹதீஸில் செருகப்பட்டிருக்கும். இதற்கு புகாரி-136 , முஸ்லிம்-415 ஹதீஸ் எடுத்துக்காட்டாகும்.
நுஅய்ம் அல்முஜ்மிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பள்ளிவாசலின் மேல் புறத்தில் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன். அபூஹுரைரா (ரலி) அவர்கள் உளூ செய்தார்கள். (உளூ செய்து முடித்ததும்) “மறுமை நாளில் என் சமுதாயத்தார் உளூவின் உறுப்புகளிலுள்ள அடையாளங்களால் “(பிரதான) உறுப்புக்கள் பிரகாசிப்போரே! என்று அழைக்கப்படுவார்கள். எனவே, உங்களில் எவருக்குத் (தமது உளூவில் பிரதான உறுப்புக்களை நீட்டிக் கழுவி) தமது பிரகாசத்தையும் நீட்டிக்கொள்ள முடியுமோ அதனைச் செய்து கொள்ளட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டிருக்கிறேன் என்றார்கள்.
இந்த ஹதீஸில், “உங்களில் எவருக்குத் தமது பிரகாசத்தையும் நீட்டிக்கொள்ள முடியுமோ அதனைச் செய்து கொள்ளட்டும்’ என்ற வாசகம் நபி (ஸல்) அவர்களின் வார்த்தை இல்லை. அபூஹுரைராவின் வார்த்தைகள்.
ஹாபிழ் இப்னு ஹஜர் அல்அஸ்கலானீ, இப்னும் கய்யூம், ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா, ஹாபிழ் அல் முன்திரி போன்றோர் இதை அடையாளம் காட்டியுள்ளனர். இப்படி ஹதீஸின் ஒரு பகுதி பலவீனமாக அமைந்திருப்பதையும் நாம் பார்க்கலாம். இது தான் அறிஞர் அல்பானியின் ஆய்வுப் பதிலாகும்.
சூனியம் போன்ற புகாரி ஹதீஸை பலவீனம் என்ற தரத்திற்கு அல்பானி அவர்கள் கொண்டு வரவில்லை என்பது நமக்குத் தெரியும். இருப்பினும் புகாரியிலும் பலவீனமான ஹதீஸ் உண்டு என்று ஓர் ஆய்வுப் பார்வையை இந்த உரையில் அல்பானி அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.
அதற்கு ஓர் அழகான அடிப்படையையும் பதிவு செய்கின்றார்கள். அல்லாஹ்வின் செய்தியில் மட்டுமே தவறு ஏற்படாது: மற்றவை தவறிலிருந்து தப்பாது என்பது தான் அந்த அடிப்படை! குறைந்தபட்சம் இந்த அடிப்படையைக் கூட ஸலஃபுகள் என்ற பெயரில் உள்ளவர்கள் மறுப்பது இறை நெறிக்கும் இயற்கை நெறிக்கும் எதிரானது என்பதைச் சுட்டிக் காட்டவே இந்த உரையின் எழுத்தாக்கத்தையும் இங்கு தந்திருக்கின்றோம்.