பிஸ்மில்லாஹ்வின் சிறப்புகள்
ஒரு நபித்தோழர் அறிவிக்கின்றார்:
நான் ஒரு கழுதையின் மீது நபி (ஸல்) அவர்களின் பின்னால் அமர்ந்திருந்தேன். அப்போது அந்தக் கழுதையின் கால் சறுக்கியது. நான் “ஷைத்தான் நாசமாகிவிட்டான்” என்று கூறினேன். அப்போது நபியவர்கள் என்னிடம் “ஷைத்தான் நாசமாகிவிட்டான்” என்று சொல்லாதே! “ஷைத்தான் நாசமாகிவிட்டான்” என்று நீ கூறும் போது ஷைத்தான் தன்னுடைய உள்ளத்தில் தன்னை மிகப் பெரிதாக நினைத்து “அவனை நான் என்னுடைய வலிமையால் வீழ்த்தி விட்டேன்” என்று கூறுகிறான். நீ பிஸ்மில்லாஹ் என்று கூறினால் அவனே அவனிடத்தில் இழிவடைந்து ஈயை விட மிகச் சிறுமையடைந்தவனாக ஆகிவிடுகிறான்” என்று கூறினார்கள்.
நூல்: அஹ்மத் (20591)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தமது இல்லத்திற்குள் நுழையும் போதும் உணவு உண்ணும்போதும் (“பிஸ்மில்லாஹ்” என்று கூறி) அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால், ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்கு (இங்கே) தங்குமிடமும் இல்லை; உண்ண உணவுமில்லை’’ என்று கூறுகிறான். ஒருவர் இல்லத்திற்குள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவுகூராவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது’’ என்று சொல்கிறான். அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர் கூறாவிட்டால் ஷைத்தான் “இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்துகொண்டீர்கள்’’ என்று சொல்கிறான்.
நூல் : முஸ்லிம் (4106)
பிஸ்மில்லாஹ் என்றும் அற்புத துஆவின் முக்கியத்துவத்தை மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவு படுத்துகின்றன.
உண்ணும் போது பிஸ்மில்லாஹ்
உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், சிறுவனே! ‘‘பிஸ்மில்லாஹ்” என்று அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு! என்று சொன்னார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.
நூல்: புகாரி (5376)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘‘உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது ‘‘பிஸ்மில்லாஹ்” என்று கூறட்டும். ஆரம்பத்தில் அதைக் கூற மறந்து விட்டால் ‘‘பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வஆஹிரிஹி” என்று கூறட்டும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : திர்மிதி (1858)
‘‘பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வஆஹிரிஹி” என்பதின் பொருள் ‘‘ஆரம்பத்திலும் இறுதியிலும் அல்லாஹ்வின் பெயரைக் கூறுகிறேன்” என்பதாகும்.
‘‘பிஸ்மில்லாஹ்” கூறாமல் சாப்பிட்டால் அந்த உணவை ஷைத்தான் ஆகுமாக்கிக் கொள்கிறான்.
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் உணவு உண்பதற்கு அமர்ந்தால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலில் கை வைப்பதற்கு முன் எங்கள் கைகளை (உணவில்) நாங்கள் வைக்கமாட்டோம். ஒரு முறை நாங்கள் உணவு உண்பதற்கு அவர்களுடன் அமர்ந்தோம். அப்போது ஒரு சிறுமி, (யாராலோ) தள்ளிவிடப்பட்டவளைப் போன்று (விரைந்து) வந்து, (பிஸ்மில்லாஹ் சொல்லாமல்) உணவில் கை வைக்கப்போனாள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளது கையைப் பிடித்துக் கொண்டார்கள். பிறகு ஒரு கிராமவாசி, (யாராலோ) தள்ளிவிடப்பட்டவரைப் போன்று வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரது கையையும் பிடித்துக் கொண்டார்கள்.
அப்போது, “அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படாத உணவில் ஷைத்தான் பங்கேற்கிறான். அவன் இச்சிறுமியுடன் வந்து, அவள் மூலமே இந்த உணவில் பங்கேற்கப் பார்த்தான். ஆகவே, அவளது கையை நான் பிடித்து (அதைத் தடுத்து)விட்டேன். பிறகு இந்தக் கிராமவாசியுடன் வந்து அவர் மூலம் இந்த உணவில் பங்கேற்கப் பார்த்தான். ஆகவே, இவரது கையைப் பிடித்து விட்டேன். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஷைத்தானின் கை அச்சிறுமியின் கையுடன் எனது கைக்குள் சிக்கிக்கொண்டது’’ என்று கூறினார்கள்
நூல் : முஸ்லிம் (4105)
பிஸ்மில்லாஹ் கூறி உளூச் செய்தல்
“நபித்தோழர்கள் சிலர் உளூச் செய்வதற்காகத் தண்ணீரைத் தேடினர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்களில் எவரிடமாவது சிறிதளவு தண்ணீர் இருக்கின்றதா? என்று கேட்டார்கள். (சிறிதளவு தண்ணீர் கொண்டு வரப்பட்டவுடன்) அந்தத் தண்ணீரில் தமது கையை வைத்தார்கள். ‘அல்லாஹ்வின் பெயரால் உளூச் செய்யுங்கள்’ என்று கூறினார்கள். அவர்களின் விரல்களிலிருந்து தண்ணீர் வெளிப்பட்டுக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்’’ என அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். (அப்போது) நீங்கள் எத்தனை நபர்கள் இருந்தீர்கள்?’’ என்று நான் கேட்டதற்கு சுமார் எழுபது நபர்கள்’’ என்று அனஸ் (ரலி) பதில் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: நஸயீ 77
உடலுறவு கொள்ளும் முன் பிஸ்மில்லாஹ்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தன் வீட்டாரிடம் (உடலுறவு கொள்ள) வந்து, பிஸ்மில்லாஹ் – அல்லாஹ்வின் திருப்பெயரால் – இறைவா! ஷைத்தானை எங்களிடமிருந்து விலகியிருக்கச் செய். எங்களுக்கு நீ அளிக்கும் சந்ததிகளிடமிருந்தும் ஷைத்தானை விலகியிருக்கச் செய் என்று பிரார்த்தனை புரிந்து, பிறகு அவர்களுக்குச் சந்ததி அளிக்கப்பட்டால் அந்தச் சந்ததிக்கு ஷைத்தான் தீங்கு செய்ய மாட்டான்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (3271)
பிராணிகளை அறுக்கும் போது பிஸ்மில்லாஹ்
நபி (ஸல்) அவர்கள் இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவர்கள் தமது பாதத்தை அவற்றின் பக்கவாட்டின் மீது வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பெயர் கூறி, ‘தக்பீர்’ (அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன் என்று) சொல்லி அவற்றைத் தமது கையால் அறுத்ததை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி (5558)
வேட்டையாடுவதற்குப் பிராணிகளை அனுப்பும் போதும் பிஸ்மில்லாஹ்
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (வேட்டை) நாய்களின் மூலம் வேட்டையாடும் ஒரு சமுதாயத்தார் ஆவோம் என்று நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறி (அதன் சட்டம் என்னவென்று) வினவினேன். அதற்கு அவர்கள், பயிற்சியளிக்கப்பட்ட உங்கள் (வேட்டை) நாய்களை ‘‘பிஸ்மில்லாஹ்” என்று அல்லாஹ்வின் பெயர் சொல்லி நீங்கள் அனுப்பியிருந்தால் உங்களுக்காக அவை கவ்விப் பிடித்து வைத்திருப்பவற்றை நீங்கள் உண்ணலாம்; அவை அதைக் கொன்றுவிட்டாலும் சரியே! நாய் தின்றுவிட்டதை மட்டும் உண்ணாதீர்கள்! ஏனென்றால், அது தனக்காக அதைப் பிடித்து வைத்திருக்குமோ என நான் அஞ்சுகிறேன். இவ்வாறே வேறு நாய்கள் அதனுடன் கலந்து விட்டிருந்தாலும் (அது வேட்டையாடிக் கொண்டு வரும் பிராணியை) உண்ணாதீர்கள்.
நூல் : புகாரி (5483)
வீட்டின் கதவு, ஜன்னல், பாத்திரங்களை மூடும் போதும், விளக்கை அணைக்கும் போதும் பிஸ்மில்லாஹ் கூறுதல்
(இரவு நேரத்தில்) உன் கதவை மூடிவிடு. (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல். (உறங்கச் செல்கையில்) உனது விளக்கை அணைத்து விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் தண்ணீர்ப் பையைச் சுருக்கிட்டு மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். உனது பாத்திரத்தை மூடி வை. அதன் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : புகாரி (3280)
(இரவு நேரத்தில்) கதவுகளைப் பூட்டி விடுங்கள். அப்போது, அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள், ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட கதவைத் திறக்க மாட்டான்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : புகாரி (3304)
பிஸ்மில்லாஹ் கூறி படுக்கையைத் தட்டுதல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் படுக்கைக்குச் சென்றால், உங்களது கீழங்கியின் ஓரத்தால் விரிப்பைத் தட்டிவிடுங்கள். அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறுங்கள். ஏனெனில், நீங்கள் இல்லாதபோது உங்களது விரிப்பில் என்ன (விஷ ஜந்து) புகுந்துகொண்டது என்பது உங்களுக்குத் தெரியாது.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (5257)