பிள்ளைகளிடம் பொய் வாக்குறுதி கொடுக்கலாமா?

 

நான் நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்படுவதற்கு முன்பு ஒரு பொருளை வாங்கினேன். அவர்களுக்கு மீதம் தரவேண்டியிருந்தது. எனவே நான், இந்த இடத்தில் இருங்கள் (மீதப் பணத்தைக் கொண்டு) வருகிறேன் என்று வாக்குறுதி வழங்கினேன். (ஆனால்) அதை மறந்துவிட்டேன். மூன்று நாட்களுக்குப் பின்னர் எனக்கு நினைவு வந்தது. அங்கே சென்ற போது அதே இடத்தில் அவர்கள் இருந்தார்கள். அப்போது, இளைஞனே எனக்கு கஷ்டத்தைத் தந்துவிட்டாயே? நான் மூன்று நாட்களே இதே இடத்தில் உன்னை எதிர்பார்த்து காத்திருந்தேன் என்று நபிகளார் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அபீ ஹம்சா (ரலி),

நூல் : அபூதாவூத் (4344)

இதே செய்தி பைஹகீயிலும் (பாகம் :10. பக்கம் :334) இடம்பெற்றுள்ளது.

இந்தச் செய்தியில் நான்காவது அறிவிப்பாளராக அப்துல் கரீம் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் யாரென அறியப்படாதவர். இவரின் நம்பகத்தன்மை பற்றி குறிப்புகள் கிடையாது.

அப்துல் கரீம் பின் அப்துல்லாஹ் பின் ஷகீக் என்பவர் யாரென அறியப்படாதவர்.

நூல் : தக்ரீபுத் தஹ்தீப், பாகம் : 2, பக்கம் : 361)

மேலும் இதன் கருத்தும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. ஒருவர் நில்லுங்கள் வருகிறேன் என்று கூறினால் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் நிற்கலாம். மூன்று நாட்கள் நின்றால் நம்முடைய எத்தனையோ வேலைகள் பாதிக்கப்படும். மேலும் மூன்று நாட்கள் உணவுக்கு என்ன செய்வது? எங்கு உறங்குவது? போன்ற கேள்விகள் இந்த செய்தி பலவீனமானதே என்பதை தெளிவுபடுத்துகிறது.

குழந்தைகளைத் திருத்துவதற்காக அதைத் தருகிறேன், இதைத் தருகிறேன் என்று பொய்யான வாக்குறுதிகள் தரக்கூடாது என்று சில நபிமொழிகளில் கூறப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டில் இருக்கும்போது என் தாய் என்னை, வா நான் உனக்கு (ஒன்றைத்) தருகிறேன் என்று அழைத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், நீ (உன் மகனுக்கு எதையாவது) கொடுக்க எண்ணியுள்ளாயா? என்று கேட்டார்கள்.

நான் அவனுக்கு ஒரு பேரித்தம் பழத்தைக் கொடுக்க எண்ணியுள்ளேன் என்று கூறினார். நீ அவனுக்கு எதையும் கொடுக்கவில்லையானால் உன் மீது பொய் சொன்ன குற்றம் எழுதப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஆமிர் (ரலி),

நூல் : அபூதாவூத் (4339)

இதே செய்தி அஹ்மத் (15147), பைஹகீ (பாகம் ; 10, பக்கம் : 335) ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.

இச்செய்தியின் இரண்டாவது அறிவிப்பாளர் ஒரு மனிதர் என்று இடம்பெற்றுள்ளது. இவர் யார்? இவரின் நம்பத்தன்மை நிலை என்ன என்ற விவரம் தெரியாததால் இந்தச் செய்தி ஆதாரப்பூவர்மானது அல்ல. எனினும் பொதுவாக பொய் சொல்லக்கூடாது என்ற நபிமொழி பெரியவர்கள், சிறியவர்கள் என்று பாகுபாடு இல்லாமல் தடை செய்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் “வாய்மையாளர்’ (சித்தீக்- எனும் பெயருக்கு உரியவர்) ஆகிவிடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்;

தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் “பெரும் பொய்யர்’ எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி),

நூல் : புகாரி (6094)

இந்த நபிமொழியின் அடிப்படையில் குழந்தைகளிடமும் பொய் சொல்லக்கூடாது என்று கூறலாம்.

ஆனாலும் நன்மையை நாடி சொல்லப்படுபவை பொய்யாக ஆகாது என்ற பொதுவான அடிப்படை குழந்தைகளுக்கும் பொருந்தும்.

நம்மிடம் வசதி இல்லாதபோது விலை உயர்ந்த பொருளைக் காட்டி அதை குழந்தை வாங்கிக் கேட்கும்.வாங்கித் தராவிட்டால் அழுது அடம் பிடித்து அதன் காரணமாக குழந்தைக்கும் உடல் நலக் குறைவு கூட ஏற்படலாம்.

அப்போது குழந்தையின் அழுகையை நிறுத்துவதுதான் முக்கியமானது. நாளை வாங்கித் தருகிறேன் என்று கூறி அல்லது இதைவிட சிறந்ததை வாங்கித் தருகிறேன் எனக் கூறி அப்போது அழுகையை நிறுத்துவதுதான் குழ்ந்தைக்கு செய்யும் நன்மையாகும்.

வாங்கித் தரவே முடியாது என்று சொன்னால் குழந்தையின் அழுகை நிற்காது. தன்னிடம் வசதி இல்லை என்று பாடம் நடத்தினால் இந்தப் பொருளாதாரப் பாடம் அக்குழந்தைக்குப் புரியாது. குழந்தையின் நன்மையை நாடி இதுபோன்ற பொய்கள் சொல்வது குற்றமாகாது.

குழந்தை நிலையைக் கடந்து புரிந்துகொள்ளக் கூடிய நிலையை அடைந்தால் அப்போது பொய் சொல்லக் கூடாது. நிலவரத்தை விளக்கி நமது இயலாமையை அல்லது அப்பொருளின் தீமையைப் புரிய வைக்க வேண்டும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *