பிறர் கண்ணியம் காப்போம் .!
அல்லாஹ் நமக்கு வழங்கிய மார்க்கத்தில், இறைவனுக்கு செய்யவேண்டிய கடமைகள் நமக்கு எந்த அளவுக்கு சொல்லப்பட்டிருக்கிறதோ, அதை விட கூடுதலாக ஒரு மனிதன் இன்னொரு மனிதன் விஷயத்தில் நடந்துக் கொள்ளவேண்டிய அம்சங்கள் குறித்து நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. மனித உரிமைகளில் யார் ? எல்லை மீறுகிறார்களோ, அந்த மனிதர் மன்னிக்காத வரை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். என்று நபிகளார் நமக்கு கூறினார்கள்.
இந்த மனித உரிமைகள் குறித்து நபிகளார் தமது இருதிப்பேருரையில் அதிகம் அதிகமாக வலியுறுத்தி பேசினார்கள். பிற மனிதர்கள் விஷயத்தில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம். எப்படி நடந்துக் கொள்ள வேண்டும். என்பன போன்ற ஏராளமான செய்திகளை அந்த இருதி உரையிலே குறிப்பிட்டார்கள்.
பிறரின் மானம் புனிதமானது
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்:
நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் 10-ஆம் நாள் உரை நிகழ்த்தினார்கள்.
அப்போது, ‘மக்களே! இது எந்த நாள்?’ எனக் கேட்டார்கள். மக்கள் ‘புனிதமிக்க தினம்’ என்றனர்.
பிறகு நபி(ஸல்) அவர்கள் ‘இது எந்த நகரம்?’ எனக் கேட்டதும் மக்கள் ‘புனிதமிக்க நகரம்’ என்றனர்.
பிறகு அவர்கள் ‘இது எந்த மாதம்?’ எனக் கேட்டதும் மக்கள் ‘புனிதமிக்க மாதம்!’ என்றனர்.
பிறகு நபி(ஸல்) அவர்கள், ‘நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகிறதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமைகளும் கண்ணியமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்!’ எனப் பல முறை கூறினார்கள்.
பிறகு தலையை உயர்த்தி, ‘இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்து விட்டேனா? இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்து விட்டேனா?’ என்றும் கூறினார்கள்.
என்னுடைய உயிர் யாருடைய கைவசம் உள்ளதோ அ(வ்விறை)வன் மீது ஆணையாக! இது அவர்கள் தங்களின் சமுதாயத்திற்கு வழங்கிய இறுதி உபதேசமாகும்.
பின்னர் ‘இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள்! என்னுடைய மரணத்திற்குப் பின் நீங்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டு நிராகரிப்பவர்களாகி விட வேண்டாம்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி :1739
நபிகளார் தமது இறுதிப்பேருரையில் மனிதனின் மானம் எந்த அளவுக்கு புனிதமானது என்று எச்சரித்தார்கள். மக்கமா நகரத்தை விட புனிதமானது என்று கூறினார்கள். ஆனால் இன்றைக்கு நாம் மற்ற மனிதர்களின் கண்ணியம் விஷயத்தில், மான மரியாதை விஷயத்தில், எப்படி நடந்துக்கொள்கிறோம். இன்றைக்கு மனிதர்களின் மான மரியாதை பந்தாடப்படுவதை கண்கூடாக பார்த்துக் கொண்டு இருக்கிறோம். கேள்விப்படுவதை யெல்லாம் பரப்பக்கூடியவர்களாக நாம் இருக்கிறோம். தொழில்நுட்பம் வளர்ந்த இக்காலத்தில் சர்வசாதாரணமாக மற்ற மனிதர்களின் மானம் பரப்பப்படுவதை பார்த்து வருகிறோம்.
மேலும் அல்லாஹ் குர்ஆனில் கூறிகிறான்.
உமக்கு அறிவு இல்லாததை நீர் பின்பற்றாதீர்! செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவையாகும்.
(திருக்குர்ஆன் 17:36)
நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றும் நாளை மறுமையில் கேள்விக்கு உட்படுத்தப்படும். என்று அல்லாஹ் சொல்கிறான்.
வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை.
(திருக்குர்ஆன் 50:18)
நாம் எதைப்பேசினாலும் அதை கண்காணித்து பதியக்கூடிய பதிவர்கள் நம்மிடத்திலே இருக்கிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் நம்முடைய ஒவ்வொரு சொல்லும் செயலும் சரியாக அமைத்துக் கொள்ளவில்லை என்றால் நம்முடைய மறுமை வாழ்கை பாழாகிவிடும். பிறர் விஷயத்தில் நாம் சரியாக நடக்கவில்லை என்றால் நாளை மறுமையில் நாம் செய்த நன்மையெல்லாம் பாதிக்கப்பட்ட அந்த மனிதருக்கு கொடுத்துவிட்டு நாம் நஷ்டவாலியாக ஆகிவிடுவோம்.!