பின்தொடர்ந்து வரும் பாவச் செயல்கள்
இவ்வுலகத்திற்கும் மனிதனுக்கும் உள்ள உறவு அறுந்து விட்டது என்றால் அவனது செல்வமும் சொந்த பந்தமும் அவனை விட்டு நின்று விடும். ஆனால் வாழும் போது அவன் செய்த அமல்கள் அவனது மரணத்திற்குப் பின்னரும் தொடரும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 1. நிலையான தர்மம் 2. பயன்தரும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் 3358
மனிதன் தன் வாழ்வில் செய்த நல் அமல்கள் மரணத்திற்குப் பின் அவனைத் தொடர்வது போன்றே, சக மனிதர்களுக்கு அவன் செய்த தீவினைகளும் மறுமையில் அவனுக்கெதிராக வந்து நிற்கும். இறைவனின் விசாரணையின் போது மனிதனின் தீமைகள் மிகைத்து விட்டது என்றால் அவனது நன்மைகள் அனைத்தும் அழிந்து விடும்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “திவாலாகிப் போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “யாரிடம் வெள்ளிக்காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் திவாலாகிப் போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர் மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்கு முன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர் மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப் போனவர்)” என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 5037
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு விஷயத்திலோ, இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெறட்டும்.) (ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்.
என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி 2449
‘அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்து கொள்ளுங்கள். ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையுமில்லை’ என முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை யமனுக்கு ஆளுநராக அனுப்பும்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி)
நூல்: புகாரி 1496
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அநீதியிழைப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் அநீதியானது, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: முஸ்லிம் 5034
கைகொடுக்கும் நல்லறங்கள்
மறுமை நாளில் விசாரணைக்காக இறைவன் முன் நிறுத்தப்படும் போது, ஒவ்வொருவரும் தாம் செய்த செயல்களைக் கண்டுகொள்வார்கள்.
அந்நாளில் மனிதன் முற்படுத்தியது பற்றியும், பிற்படுத்தியது பற்றியும் அறிவிக்கப்படுவான். மாறாக, மனிதன் சமாதானங்களைக் கூறியபோதும் தன்னைப் பற்றி நன்கு தெரிந்தவனாக இருக்கிறான்.
திருக்குர்ஆன் 75:13-15
இத்தகைய பயங்கரமான நாளில் நமக்குக் கைகொடுத்துக் காப்பாற்றுவது நாம் செய்த நல் அமல்கள் மட்டுமே!
செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியாகும். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும், எதிர்பார்க்கப்படுவதில் சிறந்ததுமாகும்.
திருக்குர்ஆன் 18:46
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் “அடக்கத்தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!” என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 1777
இறைவனின் எச்சரிக்கை
இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட வேண்டாம்! ஏமாற்றுபவனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை ஏமாற்றி விட வேண்டாம்.
அல்குர்ஆன் 31:33
நிலையானது என்று எண்ணி நாம் வாழ்ந்து வரும் இவ்வாழ்க்கை கவர்ச்சி நிறைந்ததும் ஏமாற்றமானதுமே என்றும், அதைக் கண்டு நாம் ஏமாந்து விடக்கூடாது என்றும் அல்லாஹ் எச்சரிக்கின்றான். இதை உணராமல் நிலையில்லா உலகில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எத்தனையோ முயற்சிகளை மேற்கொள்ளும் நாம் நிலையான வாழ்வில் வெற்றி பெற என்ன முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்?
இவ்வுலகில் சுகமாய் வாழ்வதற்காக செல்வங்களைச் சேமித்து வைத்திருக்கும் நாம் மறுமையில் சுகமாய் வாழ்வதற்கு எதனைச் சேமித்துள்ளோம்? பகைமையும் பாவச் சுமைகளுமே மேலோங்கி நிற்கின்றது.
ஓர் ஊருக்குப் பயணம் மேற்கொள்வதாக இருந்தாலே ஒரு வாரத்துக்கு முன் நம்மைத் தயார்படுத்திக் கொள்கிறோம். ஆனால் மறுமைப் பயணத்திற்காக நாம் திரட்டி வைத்திருப்பது என்ன? என்பதை ஒருகணம் சிந்தியுங்கள்.
மரணம் தானே! அது வரும் போது பார்த்துக் கொள்ளலாம், எனது குழிக்கு நான் பதில் சொல்லிக் கொள்கிறேன் என்றெல்லாம் நக்கலாகப் பேசிக் கொண்டு, அசட்டையாக நமது வாழ்வைக் கழிக்கிறோம்.
இறைவனிடம் நமது தவறுகளுக்காக வருந்தி மன்னிப்புத் தேடாமலும் மனம் வருந்தாமலும் வாழ்ந்து வருகிறோம். ஆனால் மரணம் ஒரு நிமிடத்தில் நம்மை வந்தடையலாம். மேலே நாம் சுட்டிக்காட்டிய வசனங்கள் இதை நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
நேற்று வரை நம்முடன் உறவாடியவர்கள் இன்று இல்லை. இன்று காலை ஓடி ஆடித் திரிந்தவர் மாலையில் உயிர்த் துடிப்பின்றி ஓய்ந்து விடுகின்றார். நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் வயோதிகர்களுக்கும் மட்டுமே மரணம் வரும் என்பதில்லை. வாழ்க்கையை ஆரம்பிக்காத பச்சிளம் குழந்தைகளையும் மரணம் விட்டு வைப்பதில்லை. நமக்குரிய கெடு வந்து விட்டால் நம்மால் தப்பித்து விடமுடியாது.
நம்மைச் சுற்றிலும் கேட்கக் கூடிய மரணச் செய்திகள் வெறும் செய்திகள் மட்டும் அல்ல! நம்மை எச்சரிக்கை செய்யக்கூடிய அபாய ஒலி! அத்தகைய மரணம் நம்மை வந்தடைவதற்கு முன்பாக நாம் செய்த பாவச் செயல்களுக்கு பாவமன்னிப்புத் தேடுவதும், நன்மையை சேகரிப்பதும் அவசியமானதாகும்.
ஏனெனில் மரணம் என்பது முடிவல்ல! மற்றொரு வாழ்வின் துவக்கம். இன்னும் சொல்வதென்றால் மறு உலக வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் ஒரு நுழைவுச் சீட்டு தான் மரணம்.
வாழும்போது மார்க்கத்திற்கு முரணாக வாழ்ந்து விட்டு, மரணம் வந்த பிறகு இறைவன் நமக்களித்த வாய்ப்பையும் வாழ்வையும் நினைத்து வருந்துவதை விட, உடலில் உயிர் இருக்கும் போதே நம்மைப் படைத்தவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து, அவனுக்கு அநீதி இழைக்காமலும், சக மனிதர்களுக்கு அநீதி இழைக்காமலும் இஸ்லாம் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளின் அடிப்படையில் வாழ்ந்து மரணிப்போமாக! மறுமையில் வெற்றி பெறுவோமாக!