*பித்அத்( நூதன அனுஷ்டானம்) – நஃபில்(உபரியான வணக்கம்) வேறுபாடு என்ன?*

மேலோட்டமாகப் பார்க்கும் போது பித்அத்தும், நஃபிலும் ஒன்று போல் தோன்றினாலும் இரண்டுக்கும் வித்தியாசங்கள் உள்ளன.
பித்அத் குறித்து அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்வது என்ன என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து ‎விட்டேன்.‎ ( 5:3‎)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் வாழும் போதே அவர்களின் இறுதிக் காலத்தில் இம்மார்க்கத்தை அல்லாஹ் முழுமையாக்கி விட்டான் என்று இவ்வசனம் கூறுகிறது.
அல்லாஹ் முழுமையாக்கி விட்டான் என்றால் என்ன பொருள்?
அதில் எந்த ஒன்றையும் யாரும் எக்காலத்திலும் கூட்ட முடியாது என்பது தான் இதன் பொருள்.
அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத எதையேனும் யாராவது உருவாக்கினால் அல்லாஹ்வின் மார்க்கத்தில் அல்லஹ்வால் விடப்பட்டவை இருந்தன; அதை நாங்கள் போட்டு நிரப்பி விட்டோம் என்பது தான் அதன் கருத்தாகும்.
இதை மிகத் தெளிவான சொற்களால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நமக்குக் கூறியுள்ளார்கள்.
*நமது மார்க்கத்தில் ஒருவர் புதிதாக ஒன்றை உருவாக்கினால் அது ‎ரத்து செய்யப்படும்* என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎கூறினார்கள்.‎
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி); நூல் : புகாரி 2697
*நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது ‎நிராகரிக்கப்படும்* என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.‎
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)‎; நூல் : முஸ்லிம் 4590
‎‘(மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப்படுபவை பற்றி ‎உங்களை நான் எச்சரிக்கிறேன். புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் ‎‎(பித்அத்எனும்) அனாச்சாரமாகும். அனாச்சாரங்கள் அனைத்தும் ‎வழிகேடாகும். வழிகேடுகள் யாவும் நரகத்தில் சேர்க்கும்’ என்று நபிகள் ‎நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.‎
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)‎
நூல்: நஸாயி 1578
இந்த நபிமொழிகள் சொல்வது என்ன?
மார்க்கத்தில் சொல்லப்படாத எந்த ஒன்றை மார்க்கம் என்று கருதினாலும் செயல்படுத்தினாலும் அது பித் அத் எனும் வழிகேடு. அது நரகத்தில் தள்ளும் கொடிய குற்றமாகும்.
அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத எந்தக் காரியமானாலும் அது வழிகேடு தான் என்பதில் சந்தேகம் இல்லை.
அப்படியானால் நாம் விரும்பும் நேரத்தில் தொழுகிறோம்; விரும்பும் நாளில் நோன்பு நோற்கிறோம் அவற்றை நபில் என்று கூறி அனுமதிக்கிறோமே? இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்ற சந்தேகம் பலரிடம் உள்ளது.
நஃபிலுக்கும் பித்அத்துக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன.
நஃபில் என்ற பெயரில் நாம் விரும்பும் காரியத்தை வணக்கமாக உருவாக்க முடியாது. அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்த வணக்கத்தை நம் வசதிக்கேற்ப அதிகப்படியாக செய்வதே நஃபிலாகும்.
உதாரணமாக தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்கள் மார்க்கத்தில் வஹீ மூலம் நமக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளன. அந்த வணக்கங்களை நாம் நமது வசதிக்கேற்ப கூடுதலாக செய்யும் போது எந்த வணக்கத்தையும் நாம் உருவாக்கியவர்களாக ஆக மாட்டோம்.
மாறாக இதற்கு தெளிவான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:‎
நஜ்த்வாசிகளில் ஒருவர் தலைவிரி கோலத்துடன் (பயணம் முடிந்த ‎கையோடு)  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். ‎‎(தூரத்திலிருந்து) அவருடைய குரல் செவியில் ஒலித்தது. ‎ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று எங்களால் விளங்க ‎முடியவில்லை. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ‎அருகில் வந்ததும் இஸ்லாமைப் பற்றிக் கேட்டார். அப்போது ‎அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பகலிலும், இரவிலும் ஐந்து ‎தொழுகைகள் ‎என்றார்கள்.‎
அவர் “இதைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது உள்ளதா?” என்று கேட்க, “*இல்லை, நீயாக ‎விரும்பிச் செய்வதைத் தொழுகையைத் தவிர*” என்று ‎அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். மேலும் ‎ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அல்லாஹ்வின் ‎தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், “இதைத் தவிர ‎வேறு ஏதேனும் என் மீது உள்ளதா?” ‎எனக் கேட்க, “*இல்லை, நீயாக விரும்பிச் செய்வதைத் தவிர*” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‎கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத் பற்றியும் ‎அவருக்கு எடுத்துரைத்தார்கள். அவர், “இதைத் தவிர வேறு (‎ஏதும் என் மீது உள்ளதா?” என்று கேட்டார். ‎அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “*இல்லை, நீயாக விரும்பிச் செய்வதைத் தவிர*” என்றார்கள்.‎
“அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவற்றை விட ‎கூட்டவும் மாட்டேன்; குறைக்கவும் மாட்டேன்’ என்று கூறியவாறு அந்த மனிதர், ‎திரும்பிச் ‎சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,  ‎‎”அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால் அவர் ‎வெற்றியடைந்து விட்டார்” என்று சொன்னார்கள்.‎
நூல் : புகாரி 46‎
அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தந்த வணக்கம் தான் நஃபிலாக இருக்க முடியும். நாமாக ஒரு வணக்கத்தை உருவாக்கி அதை நஃபில் என்று சொல்லிக் கொள்ள முடியாது.
மார்க்கத்தில் உள்ள ஒரு வணக்கத்தை ஒவ்வொரு மனிதனும் தனது வசதிக்கும், வாய்ப்புக்கும், விருப்பத்துக்கும் ஏற்ப செய்வது நஃபிலாகும்.
ஒருவர் நபில் என்ற பெயரில் ஒரு ரக்அத்தில் மூன்று ஸஜ்தா செய்யலாமா? செய்யக் கூடாது என்றே நாம் கூறுவோம். அவர் செய்வது ஸஜ்தாவாக இருந்தாலும் மூன்று ஸஜ்தாக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை.  எனவே அது பித்அத் ஆகிவிடுகிறது
கடமையான வணக்கம் என்றால் அதற்கான நேரமும், நாளும், அளவும் வஹியால் தீர்மானம் செய்யப்படும். அந்த நாளிலும் அந்த நேரத்திலும் அந்த அளவிலும் தான் அதைச் செய்ய முடியும். இது அனைத்து முஸ்லிம்களுக்கும் யூனிஃபாமாக இருக்கும்.
அது போல் சுன்னத்தான வணக்கம் என்றால் அதற்கான அளவும், நேரமும் நாளும் அல்லாஹ்வின் தூதரால் காட்டித் தரப்படும். அந்த அளவிலும் அந்த நேரத்திலும் தான் அதை செய்ய வேண்டும். ‎. இதுவும் அனைத்து முஸ்லிம்களுக்கும் யூனிஃபாமாக இருக்கும்.‎
நபில் என்றால் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரும் தனது வசதிக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப அதைச் செய்து கொள்வார். இது அனைவருக்கும் யூனிஃபாமாக இருக்காது. நான் செய்வது போல் தான் அனைவரும் செய்ய வேண்டும் என்று யாரேனும் சொன்னால் அது நபில் என்ற தனிமனித விருப்பம் என்பதைக் கடந்து இன்னொரு மனிதனின் முடிவை மார்க்கமாக ஆக்குதல் என்ற குற்றம் ஏற்படுகிறது. இது தான் பித்அத் ஆகும்.
ஒருவர் தனக்கு விருப்பமான நாளில், நேரத்தில் குறிப்பிட்ட ரக்அத்கள் தொழுதால் அது நஃபில் ஆகும். அனைவரும் குறிப்பிட்ட நாளில் 20 ரக்அத் அல்லது குறிப்பிட்ட ரக்அத்கள் தொழ வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அது பித்அத் ஆகிவிடும்.
ஒருவர் தானாக விரும்பிச் செய்யாமல் மற்றவர் தீர்மானித்ததைப் பின்பற்றும் போது அல்லாஹ்வின் தூதருக்கு கொடுத்த இடம் மற்றவர்களுக்குக் கொடுக்கப்படுவதால் அது பித்அத் ஆகிவிடுகிறது.
அதாவது மார்க்கத்தில் சொல்லப்படாத ஒன்றை வணக்கம் என்று சொன்னாலும் அது பித்அத் ஆகும்.
மார்க்கத்தில் சொல்லப்பட்ட வணக்கத்தின் அளவையும், நேரத்தையும் ஒருவர் தீர்மானித்து மற்றவர் மீது தினிப்பதும் பித்அத் ஆகும்.
உதாரணமாக ஒருவர் ஒரு வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு இரண்டு ரக்அத்களை தானாக விரும்பித் தொழ எண்ணுகிறார். அவ்வாறே தொழுகிறார். இது நஃபிலாகும். இதற்கு அவருக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு 4 ரக்அத் தொழுவது நல்லது என்று பிரச்சாரம் செய்யப்பட்டால், அல்லது யாரும் பிரச்சாரம் செய்யாமலே அந்தக் கருத்து மக்களிடம் நிலைபெற்று விட்டால் அது பித்அத் ஆகும்.
ஏனெனில் அனைவரும் ஒன்றைச் செய்வது நல்லது என்று தீர்மானம் செய்வது அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் உள்ள அதிகாரமாகும்.
அதை மற்றவர்களுக்குக் கொடுத்தாலோ ,அல்லது மற்றவர்கள் எடுத்துக் கொண்டாலோ அது பித்அத் ஆகிவிடுகிறது.
ஒருவர் விரும்பிய தினத்தில் நோன்பு நோற்க அனுமதி உள்ளது என்பதை ஒப்புக் கொள்ளும் அறிஞர்கள் மிஃராஜ் நோன்பு என்பதை மறுக்கின்றனர். இதற்குக் காரணம் இந்தப் பெயரில் முஸ்லிம்கள் அனைவரும் நோன்பு நோற்க வேண்டும் என்ற அடிப்படையில் இது கூறப்படுகிறது. எனவே தான் இதை பித்அத் என்கிறோம்.
சுன்னத் என்றால் இஷ்டம் போல் கூட்டவோ, குறைக்கவோ முடியாது. நபில் என்றால் ஒரு நாள் இரண்டு ரக்அத்கள் தொழுதவர் மறு நாள் நான்கு ரக்அத்கள் தொழலாம். அதற்கு மறுநாள் அதை விட்டு விடலாம். நஃபில் என்பது முழுக்க முழுக்க தனித் தனி நபர்களின் விருப்பத்தின் பாற்பட்டதாகும்.
ஸுபுஹ் தொழுகைக்கு இரண்டு ரக்அத்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்து வைத்துள்ளோம்.
இது குறைந்த அளவாக உள்ளது என்று எண்ணிக் கொண்டு ஒருவர் ஸுபுஹ் தொழுகைக்கு நான்கு ரக்அத்கள் தொழலாமா? என்று கேட்டால் மார்க்க அறிஞர்கள் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம்களும் இவ்வாறு செய்யக் கூடாது என்று தான் பதிலளிப்பார்கள்.
இரண்டு ரக்அத்களை விட நான்கு ரக்அத்கள் அதிகம் தானே! அதனால் ஸுப்ஹுக்கு நான்கு ரக்அத்கள் தொழலாம் என்று யாரும் வாதிடுவதில்லை.
இதற்கு என்ன காரணம்?
ரக்அத்களின் எண்ணிக்கை இதில் முக்கியம் அல்ல! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு ஒரு வழியைக் காட்டியுள்ளனர்; அவர்கள் காட்டியதை விட அதிகப்படுத்தினால் பல விபரீதமான முடிவுகள் ஏற்பட்டு விடும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குச் சிறந்த வழியை, முழுமையான வழியைக் காட்டவில்லை; அதை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம்’ என்று கூறும் விபரீதம் இதனுள் அடங்கியுள்ளது.
நாம் இரண்டை நான்காக ஆக்கினால் அடுத்து வருபவர் அதை ஆறாக ஆக்குவார். அடுத்த ஒரு காலத்தில் அது எட்டாக ஆகும். வணக்கத்தை நாங்கள் குறைக்கவில்லையே? அதிகப்படுத்துவது நல்லது தானே என்று அனைவரும் வாதிடுவார்கள். இதனால் இஸ்லாம் என்ற பெயரால் உலகெங்கும் முரண்பட்ட பல வணக்கங்கள் உருவாகி விடும்.
எனவே தான் இரண்டு ரக்அத்களை நான்காக ஆக்கக் கூடாது என்கிறோம்.
நஃபிலுக்கும் பித்அத்துக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எப்போதும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.
ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *