பித்அத் என்பதின் அர்த்தம் என்ன?
பித்அத் என்பது அரபு வார்த்தையாகும். இதற்கு புதுமை, நவீனம் என்பது இதன் பொருளாகும்.
புதிய ஆடை, புதிய செருப்பு, புதிய மொபைல் என்பதை போல் பயன்படுத்தப்படும் புதுமையை மட்டும் குறிக்கும் ஒற்றை வார்த்தையுடன் இதன் அர்த்தம் நின்றுவிடாது.
இந்த புதுமை என்பதின் கருத்து, முன்மாதிரியின்றி புதிதாக உருவாக்குவது என்பதாகும்.
அதாவது, ஒரு காலத்தில் அறியப்படாத ஒன்று புதிதாக தோன்றியிருக்கும் எனில் அதுவே பித்அத் ஆகும்.
உதாரணமாக, கை விசிறி என்றால் என்னவென்றே தெரியாத காலத்தில் கை விசிறி உருவாக்கப்பட்ட போது அது பித்அத் ஆகும்.
கை விசிறி மட்டுமே தெரிந்த காலத்தில் மின் விசிறி உருவாக்கப்பட்ட போது அது பித்அத் ஆகும்.
இப்படி டெலிஃபோன், மொபைல், டீ.வி, ஏ.சி, ஃப்ரிட்ஜ், சைக்கிள், பைக், கார் என்று எதுவெல்லாம் ஒரு காலத்தில் அறியப்படாமல் புதுமையாக உருவாக்கப்பட்டதோ அந்நேரத்தில் அது பித்அத் ஆகும்.
இந்த அர்த்தத்தை குர்ஆனிலிருந்தே நாம் அறிந்துக் கொள்ளலாம்.
(அல்லாஹ்வே) வானங்கள் மற்றும் பூமியை முன்மாதிரியின்றிப் படைத்தவன். அவன் ஒரு விஷயத்தைத் தீர்மானித்தால் அதற்கு ‘ஆகு’ என்றுதான் கூறுவான். உடனே அது ‘ஆகி’விடும்.
அல்குர்ஆன் 2: 117, 6: 101
இந்த வசனத்தில் இறைவன் தனது வல்லமையைப் பற்றி பதிவு செய்யும் போது தான் ஒரு பதீஃ என்று குறிப்பிடுகிறான். அதாவது, வானம், பூமி என எதுவுமே இல்லாத போதும் அதை புதிதாக முன்மாதிரியின்றி உருவாக்கியவன் நான் என்று சொல்கிறான்.
(நபியே!) “நான் தூதர்களில் புதியவனாக இல்லை. எனக்கும் உங்களுக்கும் என்ன செய்யப்படும் என்பதை நான் அறிய மாட்டேன். எனக்கு இறைச் செய்தியாக அறிவிக்கப்படுவதைத் தவிர எதையும் நான் பின்பற்றுவதில்லை. நான் பகிரங்கமாக எச்சரிப்பவன் தவிர வேறில்லை” என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 46:9
இந்த வசனத்தில் நபிகள் நாயகத்திற்கு இறைவன் ஒரு மறுப்பை சொல்லிக் கொடுக்கிறான். இறை மறுப்பாளர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை ஏற்க மறுத்த போது, தான் இதற்கு முன் வந்த இறை தூதர்களிலிருந்து நான் புதுமையாகவோ வினோதமாகவோ இல்லை. அவர்களை போன்றே நானும் இறைச் செய்திகளை எடுத்துச் சொல்லும் இறைத்தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறேன். நானும் மனிதனே என்ற கருத்தில் கூறச் சொல்கிறான்.
இங்கே புதுமை என்பதை குறிக்க இறைவன் பயன்படுத்தியிருக்கும் வார்த்தை பித்ஃ என்பதாகும்.
மேற்படி வசனங்களில் உள்ள பதீஃ , பித்ஃ என்பதும் பித்அத் என்பதும் ஒரே வார்த்தையின் வெவ்வேறு வடிவங்களாகும். இவை அனைத்திற்கும் பொருள் இல்லாத ஒன்று புதிதாக உருவாகுவது என்ற ஒன்றேயாகும்.
பித்அத் என்றால் என்னவென்று இப்போது ஒரு தெளிவு கிடைத்திருக்கும்.
ஆனால், இங்கே மேலே குறிப்பிட்ட இந்த ஃபேன், டீ.வி, ஃப்ரிட்ஜ் போன்றதற்கும் இந்த புத்தகத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை.
இதுவெல்லாம் பித்அத் என்ற அரபு வார்த்தையின் நேரடி பொருளை – அகராதி பொருளை அறிந்துக் கொள்வதற்காக கொடுக்கப்பட்ட தகவல் தான்.
இங்கு நாம் மார்க்க அடிப்படையில் பித்அத் என்றால் என்ன என்பது குறித்து தான் அறிய இருக்கின்றோம்.
அதை அறிந்துக் கொள்ள வேண்டும் எனில் முதலில் பித்அத் என்பதின் அர்த்தம் என்ன என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே மேற்படி தகவல்கள் வழங்கப்பட்டது.
அப்படியென்றால் மார்க்க அடிப்படையில் எது பித்அத்?
மார்க்க அடிப்படையில் எது “பித்அத்“?:
இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குவது தான் பித்அத் என்பதின் பொருள் என்று தெரிந்து கொண்டோம்.
மார்க்க அடிப்படையில் பித்அத் என்பது இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குவதும் அதை மார்ககத்தில் உள்ளது என்றும் நன்மை என்றும் கருதுவது பித்அத் ஆகும்.
இதை நபி(ஸல்) அவர்கள் தெளிவுப்படுத்தியுள்ளார்கள்.
செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி); நூல்: நஸாயீ 1578.
இந்த செய்தியில் மார்க்கத்தின் அடிப்படையையும் இஸ்லாத்திற்கு எதிரான பித்அத்தையும் நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு தெளிவுப்படுத்தியுள்ளார்கள்.
- உண்மையான செய்திதான் பின்பற்றத் தகுதியானது. அது அல்லாஹ்வின் வேதமும் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலும் தான்.
- மிக மோசமான காரியம் என்பது அந்த இறை வேதத்திலும் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலிலும் இல்லாததை மார்க்கத்தின் பெயரால் புதிதாக உண்டாக்குவதுதான்.
- அத்தகைய புதிய காரியம் தான் பித்அத் எனும் வழிகேடு. அது நரகில் தள்ளும்.
எனவே, நாம் எந்தவொரு காரியத்தை மார்க்கத்தில் நன்மை என்று கருதி செய்வதாக இருந்தாலும் அதற்கு குர்ஆனிலோ அல்லது ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ ஆதாரம் இருக்க வேண்டும்.
அவ்வாறு, ஆதாரம் ஏதுமின்றி காலம் காலமாக கடைபிடித்து வந்தாலும் அது பித்அத்தே ஆகும்.
மார்க்க அடிப்படையில் பித்அத் என்றால் என்ன என்ற இந்த அடிப்படையை இறைவன் குர்ஆனிலும் நமக்கு தெளிவுப்படுத்துகிறான்.
பின்னர், அவர்களின் அடிச்சுவடுகளில் நம் தூதர்களைத் தொடர்ச்சியாக அனுப்பினோம். மர்யமின் மகன் ஈஸாவையும் பின்தொடரச் செய்தோம். அவருக்கு இன்ஜீலையும் வழங்கினோம். அவரைப் பின்பற்றியவர்களின் உள்ளங்களில் கழிவிரக்கத்தையும், கருணையையும் ஏற்படுத்தினோம். அவர்களாகவே துறவறத்தை உருவாக்கிக் கொண்டனர். அதை அவர்கள்மீது நாம் விதியாக்கவில்லை. எனினும், அல்லாஹ்வின் பொருத்தத்தைத் தேடுவதையே (விதியாக்கினோம்.) அவர்கள் அ(த்துறவறத்)தையும் கடைப்பிடிக்க வேண்டிய முறைப்படி கடைப்பிடிக்கவில்லை. எனவே, அவர்களில் இறைநம்பிக்கை கொண்டோருக்கு, அவர்களுக்கான கூலியை வழங்கினோம். எனினும் அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே உள்ளனர்.
அல்குர்ஆன் 57:27
இவ்வசனத்தில் கிறித்தவர்கள் எவ்வாறெல்லாம் மாறுசெய்தனர் என்பதில் ஒரு பகுதியை குறிப்பிடுகிறான்.
அவர்களுக்கு இறைத்தூதரும் இன்ஜீல் வேதமும் இருந்தும் அவர்கள் துறவறத்தை உருவாக்கிக் கொண்டனர். அதை அல்லாஹ்வோ அவனது தூதரோ அவர்களுக்கு விதிக்கவில்லை.
இங்கே துறவறத்தை உருவாக்கிக் கொண்டனர் என்பதை குறிக்க இறைவன் பித்அத் என்ற வார்த்தையின் வினைச்சொல் வடிவத்தையே பயன்படுத்துகிறான்.
கிறித்தவர்கள் கடைபிடித்த துறவறம் என்பது எப்படி பித்அத்தாக ஆகிறது என்பதை ”அதை நாம் அவர்களுக்கு விதியாக்கவில்லை” என்ற வார்த்தையின் மூலம் இறைவன் விவரிக்கிறான்.
அதாவது, அல்லாஹ்வோ அவனது தூதரோ மார்க்கத்தின் ஒரு அம்சமாக சொல்லாத துறவறம் என்ற காரியத்தை மார்க்கத்தில் உள்ளதாக அவர்களே உருவாக்கி கொண்டனர் என்று இறைவன் குறிப்பிடுகிறான் எனில் இவ்வாறு அல்லாஹ்வும் அவனது தூதரும் மார்க்கம் என்று வரையறை செய்யாத ஒன்றை மார்க்கம் என்று நுழைவிப்பது தான் பித்அத் என இவ்வசனத்தின் மூலமும் தெளிவாகிறது.
கிறித்தவர்கள் துறவறத்தை – மார்க்க்கத்தில் இல்லாததை அதில் நுழைத்துக் கொண்டதை போல இன்றைக்கு இஸ்லாத்தில் இல்லாத மவ்லிது, மீலாது, பராஅத், கூட்டு துஆ, புர்தா, ஸலாத்துன்னாரிய்யா, இஷ்ராக் தொழுகை, தஸ்பீஹ் தொழுகை, ஈத் முபாரக் மற்றும் பல என்று சொல்லிக் கொண்டே போகும் அளவிற்கு ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை பல புதுமைகளை மார்க்கம் என்ற பெயரால் நுழைத்து வைத்திருக்கிறார்கள்.
இவற்றை பற்றிய தெளிவைப் பெறுவதற்கு முன்னால் மார்க்கத்தை வஹியை மட்டுமே பின்பற்ற வேண்டும். வஹியில் இல்லாத எதுவும் மார்க்கமாக ஆகாது என்ற வரையறையைப் பற்றி விளங்கிக் கொள்ள வேண்டும்.
மார்க்கத்தில் இத்தகைய வரையறை ஏன்? ஏனெனில், இது இறைவனுக்குச் சொந்தமான மார்க்கமாகும்.
இறைவனுக்கு சொந்தமான மார்க்கம் என்றால்…
இஸ்லாம் இறைவனுக்கு சொந்தமான மார்க்கம்!
தூய மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது என்பதை அறிந்து கொள்ளுங்கள்! அவனையன்றிப் பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டோர், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் பக்கம் மிகவும் நெருக்கமாக்கி வைப்பார்கள் என்பதற்காகவே தவிர நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்). எதில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார்களோ அதுபற்றி அவர்களுக்கிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். பொய்யர்களுக்கும், இறைமறுப்பாளர்களுக்கும் அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
அல்குர்ஆன் 39: 3
இஸ்லாம் என்பது அல்லாஹ்விற்கு சொந்தமான மார்க்கம் என்று இறைவன் இவ்வசனத்தில் குறிப்பிடுகிறான்.
அதற்கான பொருள் என்ன?
இஸ்லாத்தின் உரிமையாளன் அல்லாஹ் ஒருவன் தான் என்றால் அதில் சட்டம் சொல்லும் அதிகாரமும் ஒன்றை நன்மை என்றும் ஒன்றை தீமை என்றும் தீர்மானிக்கும் அதிகாரமும், இது ஹலால் என்றும் இது ஹராம் என்றும் தீர்மானிக்கும் அதிகாரமும், ஒன்றை வணக்கம் என்றும் நன்மை என்றும் வரையறுக்கும் அதிகாரமும் அவனுக்கு மட்டுமே இருக்கிறது.
மொத்தத்தில் இஸ்லாத்தில் சட்டம் இயற்றும் அதிகாரமும் உரிமையும் அவனை தவிர்த்து வேறு யாருக்கும் கிடையாது என்பதே இந்த வசனம் சொல்லும் தகவலாகும்.
பொதுவாகவே, ஒரு விஷயத்திற்கு யார் உரிமையாளரோ அவரே அது தொடர்பான சட்டங்கள் இயற்ற அதிகாரம் படைத்தவர் ஆகிறார்.
இதை உலக விஷயத்தில் நாம் தெளிவாக உணர்கிறோம்.
ஒருவருக்கு வீடொன்று சொந்தமாக இருக்கிறது. அதில் நாம் வாடகைக்கு இருக்கிறோம் எனில் அந்த வீட்டின் உரிமையாளர் அந்த வீடு தொடர்பாக அதன் வாடகை, முன்பணம், ஒப்பந்தம், தண்ணீர் செலவு, அதன் பராமரிப்பு போன்று என்னென்ன சட்டங்கள் விதிக்கிறாரோ அதற்கு நாம் கட்டுப்படுவோம். காரணம், இது அவர் வீடு. அதில் சட்டம் இயற்ற அவரே உரிமைப்படைத்தவர் என்பதினால் ஆகும்.
அதே சமயம், அந்த வீட்டிற்கு சற்றும் தொடர்பில்லாத ஒருவர் வந்து அந்த வீடு தொடர்பாக நமக்கு ஏதேனும் சட்டமோ நிபந்தனைகளோ விதித்தால் அதற்கு நாம் எந்த விதத்திலும் கட்டுப்படுவதில்லை. கட்டுப்படுதில்லை என்பதை தாண்டி இதை சொல்ல நீ யார்? என்று கோபம் கொள்கிறோம். காரணம், நமக்கு சட்டம் விதிக்க அதிகாரம் இல்லாத ஒருவர் நமக்கு சட்டம் சொல்வதை நம் மனம் ஏற்றுக் கொள்வதில்லை.
வீட்டில் வாடகை ஒப்பந்ததாரராக இருக்கும் போது என்று மட்டுமில்லாமல், ஒரு கடையாக இருந்தாலும், நாம் தொழிலாளியாக இருந்தாலும், கடனாளியாக இருந்தாலும் என எந்தவொரு நிலையாக இருந்தாலும் நமக்கு சட்டம் இயற்ற அதிகாரமும் உரிமையும் உள்ளவர் எவரோ அவரே சட்டம் இயற்ற வேண்டும். அதற்கு சற்றும் தொடர்பில்லாத ஒருவர் சட்டம் சொல்லி என்னை அதிகாரம் செய்வதை நான் விரும்ப மாட்டேன் என்று இருக்கிறோம்.
உலக விஷயத்தில் இவ்வாறு நமது ரோஷம் செயல்படுகிறது எனில் மார்க்க விஷயத்தில் நம்மை படைத்த இறைவனது உரிமையை இன்னொருவன் கையிலெடுக்க நினைக்கும் போது நமது நிலை எப்படி இருக்க வேண்டும்.
இஸ்லாம் இறைவனுக்கு சொந்தமான மார்க்கம் எனில் இதில் அனைத்து சட்டங்களையும் நன்மைகளையும் வணக்கங்களையும் சொல்லித் தருபவன் அல்லாஹ்வாக மட்டுமே இருக்க வேண்டும். அவனே இதன் உரிமையாளன். அவனே சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளவன். அவனைத் தவிர வேறு யாரும் மார்க்கத்தில் நீ இதை செய் அதை செய் என்று என்னிடம் சொல்வதற்கு உரிமையில்லை என்றல்லவா நமது நிலையிருக்க வேண்டும்?
மேற்படி வசனத்தில், இந்த மார்க்கத்தில் சட்டம் இயற்ற அதிகாரம் படைத்த அல்லாஹ்வைத் தவிர வேறு பொறுப்பாளர்களை ஏற்படுத்திக் கொண்டு அவர்களுக்கு கட்டுப்பட்டு செல்வோரை பொய்யர்கள் மறுப்பாளர்கள் என்று கண்டிப்பதின் மூலம் மற்றவர்கள் சொன்னதை மார்க்கமாக பின்பற்றினால் அது நன்மையையோ வெற்றியையோ பெற்றுத் தராது. அது இஸ்லாமாகவும் ஆகாது என்பதைதான் அல்லாஹ் நமக்கு கற்றுத் தருகிறான்.
“அவனையன்றி நீங்கள் வணங்குபவை, நீங்களும் உங்கள் முன்னோரும் சூட்டிக் கொண்ட (வெறும்) பெயர்களைத் தவிர வேறில்லை. இதற்கு எந்த ஆதாரத்தையும் அல்லாஹ் அருளவில்லை. அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே தவிர வேறில்லை.
அல்குர்ஆன் 12:40
ஒன்றை மார்க்கம் என்று நாம் செய்வதாக இருந்தால் இந்த வசனத்தின் படி அல்லாஹ்விடமிருந்து ஏதேனும் ஒரு ஆதாரம் நமக்கு இருக்க வேண்டும். ஏனெனில் மார்க்கத்தில் சட்டம் இயற்றும் அதிகாரம் என்பது அல்லாஹ்விற்கு மட்டுமே இருக்கிறது. அவனையன்றி யாருக்கும் அந்த அதிகாரம் கிடையாது.
இதற்கு மாற்றமாக, அல்லாஹ் கற்றுத் தராத அல்லது ஆதாரமற்ற ஒன்றை மார்க்கம் என்றும் வணக்கம் என்றும் நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் இறையதிகாரத்தை மற்றவர்களுக்கு தாரை வார்க்கும் காரியமாகும். இது தான் பித்அத் என்று மார்க்கம் சொல்கிறது.
சரி அல்லாஹ் நமக்கு மார்க்கத்தை எப்படி கற்றுத் தருகிறான்.
இறைவன் இறைத்தூதர்களை நியமித்து அவர்களின் மூலம் வஹி எனும் இறைச் செய்திகளை அருளி நமக்கு மார்க்கத்தையும் அதன் சட்ட திட்டங்களையும் தந்துள்ளான்.
உங்கள் இறைவனிடமிருந்து எது உங்களுக்கு அருளப்பட்டதோ அதையே பின்பற்றுங்கள்! அவனையன்றி பொறுப்பாளர்களைப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்.
அல்குர்ஆன் 7: 3
இறைவன் அருளிய இறைச் செய்திகளை மட்டுமே பின்பற்ற வேண்டும். அந்த வஹி மட்டுமே பின்பற்றத் தகுதியானது. அல்லாஹ் அல்லாத யாரையும் மார்க்கம் இயற்றும் பொறுப்பாளர்களாக ஆக்கிக்கொள்ள கூடாது என்ற மார்க்கத்தின் அடிப்படையை ஒரே வசனத்தில் உடன்பாடாகவும் எதிர்மறையாகவும் உறுதிப்படுத்தி இறைவன் சொல்கிறான்.
இன்னும் ஏராளமான வசனங்கள் நமக்கு இந்த அடிப்படையை விளக்குகிறது.
மேலும், இஸ்லாத்தை மக்களுக்கு எடுத்துரைக்க இறைவனால் நியமிக்கப்பட்ட இறைத்தூதர்கள் கூட மார்க்கத்தில் புதிதாக ஒன்றை அவர்களாகவே உருவாக்கிக் கொள்ள முடியாது. அல்லாஹ்வின் வஹி – இறைச் செய்தியையே அவர்களும் பின்பற்ற வேண்டும்.
முதல் நபி ஆதம் (அலை) அவர்களுக்கு சொல்லப்பட்ட கட்டளை
“நீங்கள் அனைவரும் இங்கிருந்து இறங்கி விடுங்கள். உங்களுக்கு என்னிடமிருந்து நேர்வழி வரும்போது யார் எனது நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்று கூறினோம்.
அல்குர்ஆன் 2: 38
“நீங்கள் இருவரும் மொத்தமாக இங்கிருந்து இறங்கிவிடுங்கள்! உங்களில் சிலர், சிலருக்கு எதிரியாவீர்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும். அப்போது யார் எனது நேர்வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் வழிதவற மாட்டார்; பாக்கியமிழந்தவராகவும் மாட்டார்” என்று (இறைவன்) கூறினான்.
அல்குர்ஆன் 20:123
ஆதம்(அலை) அவர்களுக்கு அனைத்து ஞானங்களையும் இறைவன் கற்றுக் கொடுத்திருந்தாலும் மார்கத்தில் அந்த ஞானத்தை வைத்து அவர் முடிவு எடுத்துவிட முடியாது. மார்க்கத்தில் இறைவன் சொல்வதே சட்டமாக ஆகும்.
இப்ராஹீம் நபி
“எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் தலைமுறைகளை உனக்குக் கட்டுப்படும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வணக்க முறைகளை எங்களுக்குக் காட்டுவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீயே மன்னிப்பு மிக்கவன்; நிகரிலா அன்பாளன்”
அல்குர்ஆன் 2:128
இப்ராஹிம்(அலை) அவர்கள் அல்லாஹ்வின் உற்றத் தோழர் என்று அவனால் புகழப்பட்டிருந்தாலும் கூட அவர்கள் சுயமாக எந்தவொரு வணக்கத்தையும் உருவாக்கி விட முடியாது. இறைவன் அறிவித்துக் கொடுப்பவற்றையே செய்ய வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள்
(நபியே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வேறு எந்தக் கடவுளும் இல்லை. இணை வைப்பவர்களைப் புறக்கணித்து விடுவீராக!
அல்குர்ஆன் 6:106
அவர்களுக்கு நமது வசனங்கள் தெளிவான சான்றுகளாக எடுத்துரைக்கப்பட்டால் “இதுவல்லாத வேறு குர்ஆனைக் கொண்டு வருவீராக! அல்லது இதை மாற்றி விடுவீராக!” என நம்மைச் சந்திப்பதை நம்பாதோர் கூறுகின்றனர். “என் சுயவிருப்பப்படி இதை மாற்ற எனக்கு அதிகாரமில்லை. எனக்கு இறைச்செய்தியாக அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறு செய்தால் மகத்தான நாளின் வேதனைக்கு அஞ்சுகிறேன்” என்று (நபியே!) கூறுவீராக!
அல்குர்ஆன் 10:15
(நபியே!) உமக்கு அறிவிக்கப்படுவதை உறுதியாகப் பிடித்துக் கொள்வீராக! நீர் நேரான பாதையில் இருக்கிறீர்.
அல்குர்ஆன் 43:43
(நபியே!) “நான் தூதர்களில் புதியவனாக இல்லை. எனக்கும் உங்களுக்கும் என்ன செய்யப்படும் என்பதை நான் அறிய மாட்டேன். எனக்கு இறைச் செய்தியாக அறிவிக்கப்படுவதைத் தவிர எதையும் நான் பின்பற்றுவதில்லை. நான் பகிரங்கமாக எச்சரிப்பவன் தவிர வேறில்லை” என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 46:09
“எனது இறைவன் என்னை நேரான வழியில் செலுத்தியுள்ளான். (அது) நிலையான மார்க்கம். சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கம். அவர் இணைவைப்பவர்களில் இருக்கவில்லை” என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 6:161
(நபியே!) நீர் தூதர்களில் உள்ளவர். நேரான வழியில் இருக்கிறீர்.
அல்குர்ஆன் 36:04
(நபியே!) நமது கட்டளையாகிய இறைச்செய்தியை இவ்வாறே உமக்கு அறிவித்தோம். நீர் வேதம் என்றால் என்ன, இறைநம்பிக்கை என்றால் என்ன என்பதை அறிபவராக இருக்கவில்லை. எனினும் இ(வ்வேதத்)தை நாம் ஒளியாக ஆக்கி, இதன்மூலம் நமது அடியார்களில் நாம் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறோம். நீர் நேரான பாதைக்கு வழிகாட்டுகிறீர்.
அல்குர்ஆன்42:52
(நபியே!) அவர்களை நேரான வழிக்கு நீர் அழைக்கிறீர்.
அல்குர்ஆன் 23:73
அவர் சுய விருப்பத்தின் அடிப்படையில் பேசுவதில்லை. இது (அவருக்கு) அறிவிக்கப்படும் இறைச்செய்தியைத் தவிர வேறில்லை.
அல்குர்ஆன் 53:04
(நபியே!) அல்லாஹ் உமக்கு காட்டியவாறு மக்களிடையே நீர் தீர்ப்பளிப்பதற்காக உண்மையுடன் இவ்வேதத்தை உமக்கு அருளியுள்ளோம்.
அல்குர்ஆன் 04:105
மனிதர்களுக்காக அருளப்பட்டதை நீர் அவர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காகவும், அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை அருளினோம்.
அல்குர்ஆன் 16:44
மேற்படி வசனங்கள் அனைத்திலிருந்தும் இதுவல்லாத இன்னும் ஏராளமான ஆதாரங்களிலிருந்தும், நபி(ஸல்) அவர்கள் உட்பட எந்தவொரு இறைத் தூதரும் மார்க்கத்தில் எந்தவொன்றையும் சுயமாக கூறிவிட முடியாது என்பதையும் எந்தவொரு மார்க்க காரியத்தை செய்வதாக இருந்தாலும் அது இறைச் செய்தியின் அடிப்படையில் தான் அமைய வேண்டும் என்பதையும் அறிந்துக் கொள்ளலாம்.
மேலும், நபி(ஸல்) அவர்களின் சொல், செயல் மற்றும் அங்கீகாரம் ஆகியவைகள் உள்ளடங்கியுள்ள ஹதீசும் வஹி தான் என்பதையும் மேற்படி வசனங்களிலிருந்து நாம் அறிந்துக் கொள்ளலாம்.
இறைச் செய்தியில் இல்லாத ஒன்றை மார்க்கம் என்று சொல்ல நபி(ஸல்) அவர்கள் உட்பட எந்த நபிக்கும் யாருக்கும் அதிகாரம் இல்லை.
மார்க்கத்தில் சட்டம் இயற்றுவது அல்லாஹ்வின் அதிகாரத்திற்குட்ப்பட்ட விஷயமாகும். அதில் யாரும் தலையிட கூடாது.
அத்தகைய இறையதிகாரத்தில் தலையீடா?
இறையதிகாரத்தில் தலையீடா?
இஸ்லாம் இறைவனுக்கு சொந்தமான மார்க்கம் என்றும் அதில் வணக்கங்கள் சட்டங்கள் நன்மைகள் என அனைத்தும் அவன் புறத்திலிருந்தே வர வேண்டும் என்றும் அதில் நபிமார்கள் கூட புதிதாக ஒன்றை நுழைத்துவிட முடியாது என்றும் பார்த்தோம்.
ஏனெனில் அவ்வாறான மார்க்கத்தில் இல்லாத ஒன்றை மார்க்கம் என்று கருதுவது இறையதிகாரத்தில் தலையிடும் காரியமாகும்.
அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கத்தில் சட்டமாக்கும் இணைக் கடவுள்கள் அவர்களுக்கு உள்ளனரா? (மறுமையின்) தீர்ப்பு பற்றிய வாக்கு இல்லையேல் அவர்களுக்கிடையே (இவ்வுலகிலேயே) தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். அநியாயக்காரர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.
அல்குர்ஆன் 42: 21
அல்லாஹ் ஒன்றை நமக்கு கற்றுத் தரவில்லை. குர்ஆனிலிருந்தும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலிருந்தும் எந்த ஆதாரமும் ஒன்றிற்கு இல்லையெனில் அது ஒரு போதும் மார்க்கமாக ஆகாது.
மார்க்கமாக ஆகாது என்பதை தாண்டி அதை மார்க்கம் என்று நம்பினால் யார் சொல்லி அவ்வாறு நம்புகின்றோமோ அவரை கடவுளாக நம்புகிறோம் என்று பொருள் என மேற்படி வசனம் கூறுகிறது.
ஏனெனில் இஸ்லாம் இறைவனுக்கு சொந்தமான மார்க்கம் எனும் போது அதில் அவன் சொல்லாத ஒன்றை நாமாக மார்க்கம் என்று கருதினால் அல்லது அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் அவர் சொல்லும் காரியத்தில் ஆதாரம் ஏதும் இல்லாமலிருக்க அவர் சொன்னார் அல்லது செய்தார் என்பதற்காக மட்டும் அதை நாம் பின்பற்றினால் இங்கு இஸ்லாத்தின் சட்டம் இயற்றும் அதிகாரமான அல்லாஹ்வின் அதிகாரத்தை அந்த மனிதருக்கு வழங்கி அவரை கடவுளாக்குகிறோம் என்றாகிறது. அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்!
இங்கு நான் அல்லாஹ்வை தான் இறைவனாக நம்புகிறேன் அந்த அறிஞரை நம்மை போன்ற மனிதர் என்றுதானே சொல்கிறேன். நான் எப்படி அவரை கடவுளாக கருதியதாக ஆகும்? என்ற கேள்வி நமக்கு எழும்.
பொதுவாக இதுபோன்ற சொல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. அந்த சொல்லுக்கு தகுந்தாற் போல் நமது நம்பிக்கையிருக்கிறதா என்றுதான் பார்க்கப்படும். ஒருவரை மனிதர் என்று நம்பினால் மனிதரை எப்படி நம்ப வேண்டுமோ அப்படி நம்ப வேண்டும். மனிதர் என்று நாவில் சொல்லிக் கொண்டு இறைவனை நம்புவது போல் நம்பிக்கை நம் உள்ளத்தில் செயலில் இருந்தால் அது தான் கணக்கில் கொள்ளப்படும்.
உதாரணமாக மக்கத்து முஷ்ரிக்குகள் நல்லடியார்கள் மற்றும் நபிமார்களின் உருவங்களை சிலைகளாக வடிவமித்து வணங்கினார்கள்.
அவர்களிடம் இதுகுறித்து கேட்கப்படும் போது அவற்றை கடவுளாகவோ தாங்கள் வணங்குகிறோம் என்றோ குறிப்பிடவில்லை. மாறாக அல்லாஹ்வையே முன்னிறுத்தினார்கள்.
அல்லாஹ்வை விட்டுவிட்டு, தமக்குத் தீமையோ, நன்மையோ செய்யாதவற்றை அவர்கள் வணங்குகின்றனர். ‘இவர்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரைப்பவர்கள்’ என்றும் கூறுகின்றனர். “வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ்வுக்குத் தெரியாதவற்றை அவனுக்கு நீங்கள் அறிவிக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் உயர்ந்தவன்” என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 10: 18
மேலும் அனைத்தையும் படைத்தது அல்லாஹ் என்றே பறை சாட்டினார்கள்.
(நபியே!) “வானங்களையும், பூமியையும் படைத்து, சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தியவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்றே அவர்கள் கூறுவார்கள். ஆயினும், அவர்கள் எவ்வாறு திசைதிருப்பப்படுகின்றனர்?
அல்லாஹ், தன் அடியார்களில் தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தை வாரி வழங்குகிறான். அவருக்கு அளவுடனும் கொடுக்கிறான். அல்லாஹ், ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.
“பூமி இறந்த பின்னர், வானிலிருந்து மழையைப் பொழிவித்து அதன்மூலம் அப்பூமியை உயிர்ப்பிப்பவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால், ‘அல்லாஹ்’ என்றே அவர்கள் கூறுவார்கள். “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!”என்று கூறுவீராக! எனினும் அவர்களில் பெரும்பாலோர் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.
அல்குர்ஆன் 29: 61-63
இவ்வாறு தாங்கள் சிலைகளை வழிபட்டுக் கொண்டே தாங்கள் அவர்களை கடவுளாக்கவில்லை. அல்லாஹ்தான் அனைத்தையும் படைத்தவன். அவன் தான் இறைவன். அவனிடம் பரிந்துரைப்பவர்கள் தான் இவர்கள் என்றே கூறினார்கள்.
இங்கு இவர்களின் இந்த சொல் பார்க்கப்படவில்லை. இவ்வாறு கூறிக்கொண்டு அந்த சிலைகளை அவர்கள் எவ்வாறு நம்பினார்கள் என்பதை வைத்தே அவர்கள் இணைகற்பிப்பாளர்கள் என்று அடையாளமிடப்பட்டனர்.
இன்னும் நம் தலைப்பிற்கு நேரடி தொடர்பாக பின்வரும் வசனத்திலிருந்து அறிந்துக்கொள்ளலாம்.
அல்லாஹ்வையன்றி தங்களது அறிஞர்களையும், துறவிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் அவர்கள் கடவுள்களாக்கிக் கொண்டனர். ஒரே கடவுளை வணங்க வேண்டும் என்றே அவர்கள் பணிக்கப்பட்டிருந்தனர். அவனைத் தவிர வேறு எந்தக் கடவுளும் இல்லை. அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் தூயவன்.
அல்குர்ஆன் 9: 31
இங்கே இறைவன் கிறித்தவர்கள் குறித்து பேசுகிறான். கிறித்தவர்கள் தங்கள் அறிஞர்களையும் துறவிகளையும் கடவுளாக்கிக் கொண்டனர் என்று குறிப்பிடுகிறான்.
எந்த கிறித்தவர்களும் தங்கள் அறிஞர்களையும் துறவிகளையும் கடவுள் என்று கூறவில்லை. வணங்கவில்லை. அவர்கள் அவ்வாறு கூறவுமில்லை. அவர்களை மனிதர்கள் என்றே குறிப்பிட்டார்கள்.
ஆனால் அவர்களின் சொல்லைப் போல அவர்களின் நம்பிக்கை இல்லை. இறைவனை எப்படி நம்ப வேண்டுமோ அது போல அந்த அறிஞர்களை நம்பினார்கள். அல்லாஹ் சொல்லாததை அறிஞர்கள் கூறியதும் மார்க்கமாக ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் ஹலால் ஹராம் என்று சொன்னவற்றை அப்படியே பின்பற்றினார்கள். அதற்கு இறைவனிடம் எந்த ஆதாரமும் இல்லையென்றாலும் அது குறித்து கவலைப்படவில்லை. விலகவில்லை.
இதனால் தான் கிறித்தவர்கள் அறிஞர்களை கடவுளாக்கிக் கொண்டார்கள் என்று குறிப்பிடுகிறான்.
அன்றைய கிறத்தவர்களின் வழிகெட்ட பயணங்களின் ஒரு பகுதியைத் தான் பித்அத் விஷயத்தில் இன்று சில மக்கள் அறியாமல் செய்து வருகின்றனர். அவர்களை வழிநடத்துபவர்களும் தவறான பாதையில் அழைத்துச் செல்கின்றனர்.
முந்தைய சமுதாயங்களில் பித்அத் தோன்றியதை போலவே இந்த சமுதாயத்திலும் பித்அத்கள் தோன்றும் என்று நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
எப்படி எச்சரித்துள்ளார்கள்? வாருங்கள்!
பித்அத் பற்றிய முன்னறிவிப்புகள்
பித்அத்கள் இந்த சமுதாயத்தில் தோன்றும் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எச்சரித்து விட்டுதான் சென்றார்கள். அதுப் பற்றி பார்ப்பதற்கு முன்னால் நபிகள் நாயகத்திற்கு முந்தைய நிலையைப் பற்றி அறிந்துக் கொள்வது சற்றுப் பொருத்தமாக இருக்கும்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு முன்னால் பல நபிமார்கள் இந்த உலகில் இறைத்தூதர்களாக இறைவனால் நியமிக்கப்பட்டார்கள்.
ஒவ்வொருவரும் மரணித்த பிறகு அடுத்த ஒவ்வொரு சமுதயாத்திற்கும் ஒவ்வொரு மொழி பேசுபவர்களுக்கும் என்று அடுத்தடுத்து தூதர்கள் கால இடைவெளிவிட்டு வந்துக் கொண்டேயிருந்தனர்.
ஒவ்வொரு இறைத்தூதருக்கும் இடைப்பட்ட காலத்தில் அதற்கு முன்பு இருந்த நபியின் வழிமுறை அவருக்கு பின்னால் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டு பல புதுமைகளை உருவாக்கி வைத்திருப்பார்கள். அடுத்த தூதர் வந்ததும் அதிலிருந்து மக்களை வென்றெடுப்பார். அவர் சென்றதும் மக்கள் மீண்டும் அந்த வழிமுறையை மாற்றிவிடுவார்கள். புதுமைகளை புகுத்திவிடுவார்கள். அதன்பின் ஒரு இறைத்தூதர் வந்து மக்களிடமிருந்து அவைகளை களைந்து அவர்களை வழிநடத்துவார்.
இவ்வாறு தான் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இருந்து வந்தது.
இதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு இப்ராஹிம் நபி.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்து வந்த மக்கத்து மக்கள் தங்களை இப்ராஹிம் நபியின் வழிதோன்றல்கள் என்றே கூறினர். அவர்களின் வழியில் வந்தவர்கள் ஏக இறைவனை வணங்குவதற்காக அவர்களால் கட்டப்பட்ட கஅபா ஆலயத்தில் 300க்கும் மேற்ப்பட்ட சிலைகளை வடிவமித்து வழிபட்டார்கள்.
இப்படி தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் நபிமார்களின் வழிமுறைகளை அவர்களுக்கு பின்னால் மக்களால் மாற்றப்பட்டு பித்அத்கள் அரங்கேற்றப்பட்டது.
இப்படி மாற்றப்பட்ட காரணத்தினால் தான் அடுத்து ஒரு தூதர் வந்து அவற்றை சரிசெய்ய வேண்டியிருந்தது.
இதுபோலவே நபி(ஸல்) அவர்கள் தனது காலத்திற்கு பிறகும் இந்த மார்கத்தின் பெயரால் பல பித்அத்கள் தோன்றும் என்று எச்சரித்துவிட்டு சென்றார்கள்.
நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் ஹுனைன் போருக்குச் சென்றோம். நாங்கள் குஃப்ரிலிருந்து விடுபட்டு (இஸ்லாத்தில் நுழைந்த புதியவர்களாக இருந்தோம்). முஷ்ரிகீன்கள் தங்கிச் செல்லும், தங்கள் ஆயுதங்களை தொங்கவிடும் இலந்தை மரம் இருந்தது, அதற்கு ‘தாது அன்வாத்’ எனச் சொல்லப்பட்டது.
அந்த இடத்தைக் கடக்க நேரிட்டபோது அல்லாஹ்வின் தூதரே! முஷ்ரிகீன்களுக்கு தாது அன்வாத் இருப்பது போன்று நமக்கும் ஒரு தாது அன்வாத்தை ஏற்படுத்துங்கள் என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்: அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) மூஸாவிடத்தில் பனூ இஸ்ராயீல்கள் கேட்டது போன்றல்லவா நீங்கள் கேட்கிறீர்கள்: ‘அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போன்று நமக்கும் பல கடவுள்களை ஏற்படுத்துவீராக என்று அவர்கள் கேட்டனர். (அதற்கு மூஸா நபி) நிச்சயமாக நீங்கள் மடமையிலே இருக்கும் ஒரு சமுதாயம்’ (அல்அஃராப் 7: 138). என்று கூறினார்கள். இவ்வாறு நபியவர்கள் கூறிவிட்டு ‘நீங்கள் முன் சென்றவர்களின் வழிமுறையைப் பின்பற்றுவீர்கள்’
அறிவிப்பவர். அபுவாகித் அல்லைஸி (ரலி)
நூல். திர்மிதீ 2180
நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப் பட்டதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2697
“நம்முடைய மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை யார் புதிதாகச் செய்கிறாரோ அது (இறைவனிடம்) நிராகரிக்கப்பட்டதாகும்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 3541
(மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்படும் (பித்அத்தான) காரியங்களை விட்டும் உங்களை நான் எச்சரிக்கை செய்கிறேன். ஏனெனில் புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு காரியமும் பித்அத். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இர்பாள் பின் ஸாரியா(ரலி)
நூல்: அஹ்மத் 17184
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தனக்கு பின்னால் இந்த மார்க்கத்தில் இல்லாததை நிச்சயம் உருவாக்குவார்கள் என்றும் முன்னோர்களின் பாதையை பின்பற்றுவார்கள் என்றும் அவர்கள் குர்ஆன் ஹதீஸில் இல்லாத எதை செய்தாலும் அது மறுப்படும் என்று எச்சரித்து அத்தகைய பித்அத் நரகில் கொண்டு சேர்க்கும் என்றும் எச்சரித்துள்ளார்கள்.
அத்தகைய நிலையில் மறுமை வெற்றியை எதிர்ப்பார்ப்பவர்கள் எந்த வழியில் செல்ல வேண்டும் என்றும் மறுமையில் அழியக்கூடியவன் என்ன செய்வான் என்றும் பின்வரும் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான் உங்களை (மார்க்கம்) வெண்மையான(தாக இருக்கும்) நிலையில் விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும். அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள்.
அறிவிப்பவர் : இர்பாள் பின் ஸாரியா(ரலி)
நூல் : அஹ்மத் (16519)
நபி(ஸல்) அவர்களுக்கு முன்னர் ஒவ்வொரு நபிமார்களுக்கு பின்னாலும் மக்கள் மார்க்கத்தில் இல்லாததை புகுத்தி, மாற்றி பித்அத்களை அரங்கேற்றினால் அடுத்து ஒரு நபி வந்து தான் சரி செய்ய வேண்டும்.
ஆனால் நபி(ஸல்) அவர்களுக்கு பிறகு எந்தவொரு நபியும் இல்லை என்றாலும் அவர்களுக்கு பின்னால் மக்களால் மார்க்கத்தின் பெயரால் நுழைக்கப்பட்ட காரியங்களை நம்மால் அடையாளம் கண்டு தவிர்ந்துக் கொள்ள முடியும்.
ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் பித்அத் என்ற அழிவு பாதையில் எப்போது ஒருவன் வீழ்ந்து மறுமையை நாசாமாக்கிக் கொள்வான் என்று மேற்படி செய்தியில் குறிப்பிட்டுவிட்டார்கள்.
நபி(ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற வெண்மையான பாதையிலிருந்து ஒருவன் விலகும் போதே பாதை மாறி பித்அத்களில் ஒருவன் வீழ்கிறான்.
எனவே பித்அத்களிலிருந்து நாம் விலகி நிற்க நபிகளார் விட்டுச் சென்ற வெண்மையான பாதையிலேயே நிற்க வேண்டும்.
அது தான் நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் போது இந்த மார்க்கத்தை எப்படி விட்டுச் சென்றார்களோ அந்த பாதையாகும்.
அது தான் இறைவனும் பொருந்திக் கொண்ட முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கமாகும்.
எனவே, மேற்படி முன்னறிவிப்புகளை நினைவில் கொண்டு பித்அத்கள் தோன்றத்தான் செய்யும். தோன்றும் போது நாம் நமது மார்க்கத்தை காத்துக் கொள்ள இந்த சமுதாயத்தில் பித்அத்களை களைந்து மக்களை நல்வழிப்படுத்த குர்ஆன் ஹதீஸ் என்ற ஒரு வழியிலேயே நாம் நிற்க வேண்டும்.
மார்க்கம் படித்த ஆலிம்கள் சொல்கிறார்கள் என்பதற்காக ஒன்றை நன்மை என்றோ வணக்கம் என்றோ பின்பற்றிவிட கூடாது. அவர் சொல்வது குர்ஆனிலோ அல்லது ஹதீஸிலோ இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஏனெனில் அது தான் மார்க்கத்தின் அடிப்படை. அவ்வாறு ஆதாரம் இருப்பது மட்டுமே மார்க்கமாக ஆகும்.
ஆதாரம் என்று அவர்கள் கூறுகின்ற அனைத்தும் ஆதாரமாகவும் ஆகிவிடாது. சிலர் தவறான, மார்க்கத்திற்கு சம்பந்தமில்லாத நபர்களை கூட இவர் செய்திருக்கிறார் அவர் செய்திருக்கிறார் என்று ஆதாரமாக காட்டுவார்கள்.
இப்படி தவறாக சிலர் மக்களாகிய நம்மை வழிநடத்தும் போது அவர்களை எப்படி எதிர்கொள்வது? அவர்கள் சொல்வது மார்க்கத்தில் உள்ள காரியமா? அல்லது பித்அத்தா? என்று எவ்வாறு கண்டறிவது? அதுப் பற்றி இஸ்லாம் நமக்கு என்ன வழிகாட்டுகிறது?
வாருங்கள் பார்ப்போம்!
பித்அத்தை கண்டறிய எளிய வழி!
வஹி எனும் இறைச் செய்தி மட்டுமே மார்க்கமாக பின்பற்றத் தகுதியானது. அந்த வஹிச் செய்தி குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் என்ற இரண்டு விதத்தில் நமக்கு கிடைக்கப்பெற்றிருக்கிறது. இதில் இல்லாத எதுவும் மார்க்கம் என்ற பெயரில் செய்யப்படும் எனில் அதுவே பித்அத் ஆகும் என்ற அடிப்படையை மேலே விளங்கிக் கொண்டோம்.
பித்அத்களை முக்கியமான மூன்று முறைகளில் அரங்கேற்றுகிறார்கள். அதை தெரிந்துக் கொண்டு அதை கண்டறியும் வழிகளை அறிந்துக் கொள்ளலாம்.
- குர்ஆன் ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் இஸ்லாத்தின அடிப்படை ஆதாரங்களில் அறவே இல்லாத காரியங்கள்.
- குர்ஆன் ஹதீஸில் சொல்லப்பட்ட காரியத்தை அதன் காரணம், நேரம், அளவு, விதம் என்று அதன் முறைகளை மாற்றி செய்தல்.
- குர்ஆன் ஹதீஸில் பொதுவாக சொல்லப்பட்ட காரியத்திற்கு காலமும் அளவும் நிர்ணயம் செய்தல்
இந்த மூன்று அடிப்படைகளில் தான் பெரும்பாலும் பித்அத்கள் அரங்கேற்றப்படுகிறது. இவற்றை ஒவ்வொன்றாக கண்டறிவதற்கான வழியை பார்ப்போம்.
முதல் வழி – அடிப்படை ஆதாரமற்றவை
மார்க்கத்தைப் பற்றி இறைவன் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். எனது அருட்கொடையை உங்களுக்கு நிறைவாக்கி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்குரிய மார்க்கமாகப் பொருந்திக் கொண்டேன்.
அல்குர்ஆன் 5:3
இறைவன் இந்த வசனத்தில் இரண்டு அடிப்படைகளை நமக்கு சொல்லித் தருகிறான்.
- “இன்றுடன் உங்கள் மார்க்கத்தை முழுமைப்படுத்திவிட்டேன்“ – “இன்று“ என்பது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தை குறிக்கும் என்பது அனைவரும் அறிந்தது. யாரும் இன்றைய தினம் என்றால் எது என்றோ? இன்று என்றால் நாம் படித்துக் கொண்டிருக்கும் இன்று என்றோ வாதிட மாட்டார்கள்.
- “இஸ்லாத்தை உங்களுக்கான மார்க்கமாக பொருந்திக் கொண்டேன்“ – மார்க்கத்தை முழுமைப்படுத்தி அந்த இஸ்லாம் எனும் மார்க்கத்தை இறைவன் பொருந்திக் கொண்டுவிட்டதாக குறிப்பிடுகிறான்.
அல்லாஹ் எதை பொருந்திக் கொண்டானோ அதை பின்பற்றும் போது தான் நமக்கு நன்மை கிடைக்கும். அதன் மூலம் இறை விசுவாசிகள் விரும்பும் சுவனத்தை பெற்றுக் கொள்ளலாம். ஏனெனில் அவற்றை நமக்கு தருபவன் அல்லாஹ் தான். எனவே அவன் விரும்புவதை செய்யும் போது தான் அந்த கூலிகள் நமக்கு கிடைக்கபெறும். அவனால் வழங்கப்படும்.
இறைவன் பொருந்திக் கொண்ட அத்தகைய இஸ்லாம் எனும் மார்க்கத்தை நபி(ஸல்) அவர்கள் காலத்துடன் அவன் முழுமைப்படுத்தியும் விட்டான் என்றால் நபி(ஸல்) அவர்கள் வாழும் போது எது இஸ்லாத்தின் பெயரால் நடைமுறைப்படுத்தப்பட்டதோ அதுவே மறுமை நாள் வரை இஸ்லாம். எது நன்மை என்றும் வணக்கம் என்றும் அவர்கள் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டதோ அதுவே மறுமை நாள் வரை நன்மை, வணக்கம். எது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லையோ அது யார் செய்தாலும், எத்தனை பேர் செய்தாலும் அது ஒரு போதும் மார்க்கமாகவும் நன்மையாகவும் வணக்கமாகவும் ஆகாது. அது நரகில் தள்ளும் பித்அத்தாகவே ஆகும்.
எனவே, நாம் மார்க்கம் என்றோ அல்லது நன்மை, இபாதத் என்றோ எந்த காரியத்தை செய்து வந்தாலும் அதை நமது முன்னோர்கள், ஆலிம்கள் என்று யார் சொல்லிக் கொடுத்தாலும் நாம் நம்மிடமோ அல்லது அவர்களிடமோ கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி ஒன்று தான்.
இதற்கு குர்ஆனிலிருந்தோ அல்லது நபி(ஸல்) அவர்களின் சொல், செயல் மற்றும் அங்கிகாரத்திலிருந்தோ பலமான ஒரு ஆதாரம் வேண்டும்.
ஆதாரம் இருந்தால் அது மார்க்கம். ஆதாரம் இல்லையென்றால் அது பித்அத்.
இப்படி சில கேள்விகளை கேட்டுப் பார்ப்போம் வாருங்கள்!
இன்றைக்கு நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாளை மீலாது விழா என்ற பெயரில் கொண்டாடி வருகிறார்கள். நபி(ஸல்) அவர்களோ அல்லது அவர்கள் முன்னிலையில் ஸஹாபாக்களோ இவ்வாறு செய்து நபி(ஸல்) அதை அங்கீகரித்து பிறந்த நான் கொண்டாடியுள்ளார்களா?
இல்லை. அப்படியென்றால் இது பித்அத்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் தஸ்பீஹ் தொழுகை, இஷ்ராக் தொழுகை எனும் பெயரில் ஏதேனும் தொழுததற்கு பலமான ஆதாரம் இருக்கிறதா?
இல்லை. அதனால் அது பித்அத்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் திருமணம் என்பது ஒரு ஒப்பந்தமாகவே இருந்தது. இன்றைக்கு திருமணம் செய்யும் சிலர் மாற்று மதத்தில் தாலி இருப்பதை போல கருகமணி அணிகிறார்கள். இது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் திருமணத்தின் ஒரு அம்சமாக சொல்லப்பட்டதா?
இல்லை. எனவே இது பித்அத்.
இப்படி ஒவ்வொரு காரியத்திற்கும் நமக்கு நாமே அல்லது இதை நமக்கு சொல்லித் தரும் மார்க்கம் படித்த ஆலிம்களிடமோ ஆதாரம் கேட்க வேண்டும்.
இறைவனால் பொருந்திக் கொள்ளப்பட்ட மார்க்கத்தில் அது முழுமைப்படுத்தப்பட்ட போது இருந்தால் எது இருந்த்தோ அது மார்க்கம். அதற்கு பின் நபிகளார் மரணித்த நொடியில் அவர்கள் வாழும் போது இல்லாத ஒன்று தோன்றியிருந்தாலும் அது பித்அத்தே ஆகும்.
இதுவே அடிப்படையற்ற பித்அத்தை நாம் கண்டறிவதற்கான முதல் வழி! இதற்கு படித்து பட்டம் பெற தேவையில்லை. இத்தகைய கேள்வி ஞானம் இருந்தாலே போதுமானது.