*பித்அத்தை கண்டறிய எளிய வழி!*

வஹி எனும் இறைச் செய்தி மட்டுமே மார்க்கமாக பின்பற்றத் தகுதியானது. அந்த வஹிச் செய்தி குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் என்ற இரண்டு விதத்தில் நமக்கு கிடைக்கப்பெற்றிருக்கிறது. இதில் இல்லாத எதுவும் மார்க்கம் என்ற பெயரில் செய்யப்படும் எனில் அதுவே பித்அத் ஆகும் என்ற அடிப்படையை மேலே விளங்கிக் கொண்டோம்.

பித்அத்களை முக்கியமான மூன்று முறைகளில் அரங்கேற்றுகிறார்கள். அதை தெரிந்துக் கொண்டு அதை கண்டறியும் வழிகளை அறிந்துக் கொள்ளலாம்.

குர்ஆன் ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் இஸ்லாத்தின அடிப்படை ஆதாரங்களில் அறவே இல்லாத காரியங்கள்.
குர்ஆன் ஹதீஸில் சொல்லப்பட்ட காரியத்தை அதன் காரணம், நேரம், அளவு, விதம் என்று அதன் முறைகளை மாற்றி செய்தல்.
குர்ஆன் ஹதீஸில் பொதுவாக சொல்லப்பட்ட காரியத்திற்கு காலமும் அளவும் நிர்ணயம் செய்தல்

இந்த மூன்று அடிப்படைகளில் தான் பெரும்பாலும் பித்அத்கள் அரங்கேற்றப்படுகிறது. இவற்றை ஒவ்வொன்றாக கண்டறிவதற்கான வழியை பார்ப்போம்.

முதல் வழி – அடிப்படை ஆதாரமற்றவை

மார்க்கத்தைப் பற்றி இறைவன் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.

இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். எனது அருட்கொடையை உங்களுக்கு நிறைவாக்கி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்குரிய மார்க்கமாகப் பொருந்திக் கொண்டேன்.

அல்குர்ஆன் 5:3

இறைவன் இந்த வசனத்தில் இரண்டு அடிப்படைகளை நமக்கு சொல்லித் தருகிறான்.

“இன்றுடன் உங்கள் மார்க்கத்தை முழுமைப்படுத்திவிட்டேன்“ – “இன்று“ என்பது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தை குறிக்கும் என்பது அனைவரும் அறிந்தது. யாரும் இன்றைய தினம் என்றால் எது என்றோ? இன்று என்றால் நாம் படித்துக் கொண்டிருக்கும் இன்று என்றோ வாதிட மாட்டார்கள்.
இஸ்லாத்தை உங்களுக்கான மார்க்கமாக பொருந்திக் கொண்டேன்“ – மார்க்கத்தை முழுமைப்படுத்தி அந்த இஸ்லாம் எனும் மார்க்கத்தை இறைவன் பொருந்திக் கொண்டுவிட்டதாக குறிப்பிடுகிறான்.

அல்லாஹ் எதை பொருந்திக் கொண்டானோ அதை பின்பற்றும் போது தான் நமக்கு நன்மை கிடைக்கும். அதன் மூலம் இறை விசுவாசிகள் விரும்பும் சுவனத்தை பெற்றுக் கொள்ளலாம். ஏனெனில் அவற்றை நமக்கு தருபவன் அல்லாஹ் தான். எனவே அவன் விரும்புவதை செய்யும் போது தான் அந்த கூலிகள் நமக்கு கிடைக்கபெறும். அவனால் வழங்கப்படும்.

இறைவன் பொருந்திக் கொண்ட அத்தகைய இஸ்லாம் எனும் மார்க்கத்தை நபி(ஸல்) அவர்கள் காலத்துடன் அவன் முழுமைப்படுத்தியும் விட்டான் என்றால் நபி(ஸல்) அவர்கள் வாழும் போது எது இஸ்லாத்தின் பெயரால் நடைமுறைப்படுத்தப்பட்டதோ அதுவே மறுமை நாள் வரை இஸ்லாம். எது நன்மை என்றும் வணக்கம் என்றும் அவர்கள் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டதோ அதுவே மறுமை நாள் வரை நன்மை, வணக்கம். எது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லையோ அது யார் செய்தாலும், எத்தனை பேர் செய்தாலும் அது ஒரு போதும் மார்க்கமாகவும் நன்மையாகவும் வணக்கமாகவும் ஆகாது. அது நரகில் தள்ளும் பித்அத்தாகவே ஆகும்.

எனவே, நாம் மார்க்கம் என்றோ அல்லது நன்மை, இபாதத் என்றோ எந்த காரியத்தை செய்து வந்தாலும் அதை நமது முன்னோர்கள், ஆலிம்கள் என்று யார் சொல்லிக் கொடுத்தாலும் நாம் நம்மிடமோ அல்லது அவர்களிடமோ கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி ஒன்று தான்.

இதற்கு குர்ஆனிலிருந்தோ அல்லது நபி(ஸல்) அவர்களின் சொல், செயல் மற்றும் அங்கிகாரத்திலிருந்தோ பலமான ஒரு ஆதாரம் வேண்டும்.

ஆதாரம் இருந்தால் அது மார்க்கம். ஆதாரம் இல்லையென்றால் அது பித்அத்.

இப்படி சில கேள்விகளை கேட்டுப் பார்ப்போம் வாருங்கள்!

இன்றைக்கு நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாளை மீலாது விழா என்ற பெயரில் கொண்டாடி வருகிறார்கள். நபி(ஸல்) அவர்களோ அல்லது அவர்கள் முன்னிலையில் ஸஹாபாக்களோ இவ்வாறு செய்து நபி(ஸல்) அதை அங்கீகரித்து பிறந்த நான் கொண்டாடியுள்ளார்களா?

இல்லை. அப்படியென்றால் இது பித்அத்.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் தஸ்பீஹ் தொழுகை, இஷ்ராக் தொழுகை எனும் பெயரில் ஏதேனும் தொழுததற்கு பலமான ஆதாரம் இருக்கிறதா?

இல்லை. அதனால் அது பித்அத்.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் திருமணம் என்பது ஒரு ஒப்பந்தமாகவே இருந்தது. இன்றைக்கு திருமணம் செய்யும் சிலர் மாற்று மதத்தில் தாலி இருப்பதை போல கருகமணி அணிகிறார்கள். இது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் திருமணத்தின் ஒரு அம்சமாக சொல்லப்பட்டதா?

இல்லை. எனவே இது பித்அத்.

இப்படி ஒவ்வொரு காரியத்திற்கும் நமக்கு நாமே அல்லது இதை நமக்கு சொல்லித் தரும் மார்க்கம் படித்த ஆலிம்களிடமோ ஆதாரம் கேட்க வேண்டும்.

இறைவனால் பொருந்திக் கொள்ளப்பட்ட மார்க்கத்தில் அது முழுமைப்படுத்தப்பட்ட போது இருந்தால் எது இருந்த்தோ அது மார்க்கம். அதற்கு பின் நபிகளார் மரணித்த நொடியில் அவர்கள் வாழும் போது இல்லாத ஒன்று தோன்றியிருந்தாலும் அது பித்அத்தே ஆகும்.

இதுவே அடிப்படையற்ற பித்அத்தை நாம் கண்டறிவதற்கான முதல் வழி! இதற்கு படித்து பட்டம் பெற தேவையில்லை. இத்தகைய கேள்வி ஞானம் இருந்தாலே போதுமானது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *