பாவங்களை அழித்து அந்தஸ்தை உயர்த்தும் உளூ
தொழுகையை முறையாகத் தொழுகின்ற ஒருவன் வாட்டும் குளிர் காலத்தில் கூட, தன்னுடைய உளூவை பரிபூரணமாகச் செய்து தொழுகையை நிலைநாட்டினால் அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவது மட்டுமல்லாமல் அந்தஸ்துகளும் உயர்த்தப்படுகிறது.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அவை:) சிரமமான சூழ்நிலைகளிலும் உளூவை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்து வைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்தத் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவைதாம் கட்டுப்பாடுகளாகும்” என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 421
அழகிய உளூவும் அற்புத சுவர்க்கமும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளூ செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து, உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை”
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: முஸ்லிம் 397
உளூச் செய்த பிறகு ஓதும் துஆவின் சிறப்புகள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் முழுமையான முறையில் உளூ செய்துவிட்டு, “அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்து கொள்ளலாம்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: முஸ்லிம் 397