பாரசீகம் ரோமாபுரியிடம் தோல்வி அடையும்
பாரசீகமும், இத்தாயின் ரோம் சாம்ராஜ்யமும் இருபெரும் வல்லரசுகளாகத் திகழ்ந்தன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்த போது இரண்டு நாடுகளுக்கிடையே போர் மூண்டது. இப்போரில் பாரசீகம் ரோமாபுரியை வென்றது. ரோமாபுரி அரசு படுதோல்வியடைந்தது.
பாரசீகத்தின் வெற்றி மக்காவில் இருந்த நபிகள் நாயகத்தின் எதிரிகளுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் பாரசீக நாட்டவர் மக்காவாசிகளைப் போல் உருவச் சிலைகளை வணங்குபவர்களாக இருந்தனர்.
ரோம் நாட்டவர் கிறித்தவ மதத்தைப் பின்பற்றுவோராகவும், மறுமை, சொர்க்கம் ஆகியவற்றை முஸ்ம்களைப் போல் நம்புபவர்களாகவும் இருந்தனர். இறைவனிடமிருந்து வேதங்கள் அருளப்படும் என்பதும் அவர்களின் நம்பிக்கையாக இருந்தது. இதனால் நபிகள் நாயகத்தின் கொள்கைக்கு இவர்கள் நெருக்கமானவர்களாக இருந்தனர்.
எங்கள் கொள்கைக்கு நெருக்கமானவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். சிலைகளுக்குச் சக்தி உள்ளது என்ற எங்கள் நம்பிக்கை வெற்றி பெற்று விட்டது என்று முஸ்லிம்களிடம் மக்காவாசிகள் இதனால் பெருமையடித்தனர்.
முஸ்ம்களின் நம்பிக்கை இதனால் பாதிக்கப்படவில்லை யென்றாலும் பதில் சொல்ல முடியாமல் கவலைப்பட்டனர்.
இந்த நேரத்தில் தான் பின் வரும் வசனங்கள் இறைவனால் அருளப்பட்டன.
ரோமப் பேரரசு அருகில் உள்ள பூமியில் வெற்றி கொள்ளப்பட்டு விட்டது. அவர்கள் தோல்விக்குப் பிறகு சில வருடங்களில் அல்லாஹ்வின் உதவியால் வெற்றி பெறுவார்கள். முன்னரும், பின்னரும் அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. நம்பிக்கை கொண்டோர் அந்நாளில் மகிழ்ச்சியடைவார்கள். தான் நாடியோருக்கு அவன் உதவி செய்கிறான். அவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் 30.14
பாரசீகர்களால் சின்னாபின்னமாக்கப்பட்ட ரோம் இனி மேல் தலையெடுக்க முடியாது என்ற நிலையில் இருந்தது. இனி மேல் ரோம் சாம்ராஜ்யம் தலை தூக்கவே முடியாது என்ற நேரத்தில் தான் மிகச் சில ஆண்டுகளில் பாரசீகம் ரோமானியர்களால் தோற்கடிக்கப்படும் என்று இறைவன் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.
சில ஆண்டுகள் என்று மொழி பெயர்த்த இடத்தில் ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களைக் குறிக்கும் ‘பிள்வு’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த வெற்றி ஒன்பது ஆண்டுகளுக்குள் நடந்தேறும் என்று இறைவன் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள். அவர்கள் சொன்னது போலவே ஆறு ஆண்டுகளில் ரோமானியர்கள் எழுச்சி பெற்று பாரசீகர்களைத் தோற்கடித்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதர் தான் என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.