பாபரி மஸ்ஜிதைக் காப்பாற்ற அபாபீல் பறவை ஏன் வரவில்லை ?
இறைவன் தனது ஆலயமான கஃபாவை அழிக்க வந்தவர்களைச் சிறு பறவைகள் மூலம் அழித்து ஒன்றுமில்லாமல் ஆக்கினான் என்கிறீர்கள். ஆனால், பாபர் மஸ்ஜித் இடிப்பின் போது இது போன்ற நிகழ்வுகள் ஏன் நடைபெறவில்லை என்ற என் நண்பரின் கேள்விக்கு எவ்வாறு பதில் கூறலாம்?
இரண்டு காரணங்களால் இந்தக் கேள்வியே தவறானது என்பதை அவருக்குப் புரிய வையுங்கள்! திருக்குர்ஆன் மற்றும் நபி மொழிகளின் அடிப்படையில் கஃபாவும் உலகின் ஏனைய பள்ளிவாசல்களும் சமமானவை அல்ல.
கஃபாவும் அதைச் சுற்றியுள்ள புனித எல்லையும் இறைவனால் அபய பூமியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கஃபாவை எவரும் தகர்க்க முடியாது; அன்னியர்கள் கைப்பற்றவும் முடியாது என்று திருமறைக் குர்ஆன் உறுதி மொழி அளிக்கிறது.
நாங்கள் உம்முடன் சேர்ந்து நேர் வழியைப் பின்பற்றினால் எங்களின் பூமிலியிருந்து வாரிச் செல்லப்பட்டு விடுவோம் என்று அவர்கள் கூறுகின்றனர். அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்கவில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
(திருக்குர்ஆன் 28:57)
இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபய மளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? வீணானதை நம்பி, அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா?
(திருக் குர்ஆன் 29:67)
அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.
(திருக் குர்ஆன் 3:97)
இறைவா! இவ்வூரை அபயமளிக்கக் கூடியதாக ஆக்குவாயாக! என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக! என்று இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!
(திருக் குர்ஆன் 14:35)
யுக முடிவு நாளின் போது கால்கள் சிறுத்த ஒரு கூட்டத்தினர் கஃபாவை அழிப்பார்கள் என்ற நபிகள் நாயகத்தின் முன் அறிவிப்பு உள்ளது.
புகாரி 1591, 1596
அதற்கு முன் எவரும் கஃபாவை அழிக்க முடியாது. இத்தகைய உத்தரவாதம் இருப்பதால் தான் அபாபீல் பறவைகளை அனுப்பி கஃபாவை இறைவன் பாதுகாத்தான். நாளை யாரேனும் கஃபாவைத் தகர்க்க முயன்றால் யானைப் படைக்கு ஏற்பட்டது போன்ற கதியை அவர்கள் அடைவார்கள்.
மற்ற எந்தப் பள்ளிவாசலுக்கும் இத்தகைய எந்த உறுதிமொழியையும் இறைவன் தரவில்லை. மாறாக மற்ற பள்ளிவாசல்கள் இடிக்கப்படலாம் என்பதைத் திருக்குர்ஆன் கூறியுள்ளது.
எங்கள் இறைவன் அல்லாஹ்வே என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்கா விட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன். ( 22:40)
பாபரி மஸ்ஜிதோ, ஏனைய மஸ்ஜிதுகளோ இடிக்கப்படுமானால் அதைத் தடுக்கும் பொறுப்பு நம் மீது தான் சுமத்தப்பட்டுள்ளது. அபாபீல் பறவைகளை எதிர்பார்க்கக் கூடாது. அப்படி எந்த உத்தரவாதமும் எந்தப் பள்ளிவாசலுக்கும் இல்லை.