பாத் ரூமில் துஆக்களை ஓதலாமா?
கழிவறை செல்லும் போது ஓதுவதற்கு துவா உள்ளது. அது போல் கழிவறையில் இருந்து வெளி வருவதற்கும் துவா உள்ளது. அதே போல் உளு செய்வதற்கும், முடிப்பதற்கும் பிஸ்மில்லாஹ்வும் இன்ன பிற வாசகங்களும் உள்ளன. கழிவறை, உலூ செய்யுமிடம் போன்றவை ஒரே இடத்தில் இருந்தால் பாத்ரூமிலே எல்லா துவாக்களையும் ஓதலாமா?
இயற்கைக் கடனை நிறைவேற்றுபவர் கழிப்பிடத்திற்கு வெளியே தான் துஆக்களை கூற வேண்டும் என்று பலர் கருதுகின்றனர். இவ்வாறு கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
கழிவறைக்குள் எக்காரியங்களைச் செய்யக்கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு விவரித்துள்ளார்கள். கழிப்பிடத்திற்குள் துஆக்களைக் கூறக் கூடாது என்றால் இதையும் நபியவர்கள் குறிப்பிட்டிருப்பார்கள். ஆனால் நபியவர்கள் இது கூடாது என்று கூறியதாக எந்தச் செய்தியும் இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழைந்தவுடன் துஆ ஓதுவார்கள் என்று புகாரியில் இடம்பெற்ற செய்தி கூறுகின்றது.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கழிவறைக்குள் நுழைந்தால் “அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் குப்ஸி வல் கபாயிஸி” என்று கூறுவார்கள்.
பொருள்: இறைவா! ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்கிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.
நூல் : புகாரி 6322
எனவே ஒருவர் கழிப்பிடத்திற்குள் நுழைந்து கூற வேண்டியதைக் கூறிவிட்டு மலம் கழித்தால் அதில் தவறேதுமில்லை.
துஆக்களைக் கூற வேண்டும் என்றே நபிமொழி கூறுகின்றது. அவற்றைக் கழிப்பிடத்திற்கு உள்ளே அல்லது வெளியே கூறுவதில் எந்தத் தடையும் பிறப்பிக்கவில்லை.
கழிவறையில் இருப்பவர் எதையும் மொழியக் கூடாது என்று கூறுபவர்கள் பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த போது அவர்களைக் கடந்து சென்ற மனிதர் ஒருவர் சலாம் சொன்னார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதில் சலாம் சொல்லவில்லை.
நூல் : முஸ்லிம் 606
இது கழிவறையில் துஆ ஓதக்கூடாது என்பதற்கு ஆதாரமாக ஆகாது. கழிவறையில் இருக்கும்போது என்பதற்கும் மலஜலம் கழித்துக் கொண்டிருக்கும் போது என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸலாம் கூறவில்லை என்று தான் இந்த ஹதீஸ் கூறுகிறது. கழிவறைக்குள் நுழைந்தவுடன் ஓத வேண்டியதை ஓதி விட்டு அதன் பின்னர் மலஜலம் கழிப்பதற்கு இதில் எந்தத் தடையும் இல்லை.
மலஜலம் கழித்துக் கொண்டே துஆ ஓதக் கூடாது என்று தான் இதிலிருந்து சட்டம் எடுக்க முடியும். கழிவறைக்குள் மலஜலம் கழிப்பதற்கு முன் அல்லது கழித்த பின் துஆ ஓதக் கூடாது என்பதற்கு இது ஆதாரமாக ஆகாது.
About Author
Sadhiq
அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.
[அல்குர்ஆன் 112:1]