பாத்திஹா உணவு கூடுமா?
வரதட்சணை, பித்அத்தான திருமணங்களுக்குச் செல்லக் கூடாது என்றும், ஆனால் அவர்கள் நம் வீட்டுக்குக் கொடுத்து அனுப்பும் உணவைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை என்றும் கூறியுள்ளீர்கள். அவர்கள் நேர்ச்சை உணவை அனுப்பினால் அதையும் பெற்றுக் கொள்ளலாமா?
கூடாது
வரதட்சணைத் திருமணங்களைப் பொறுத்த வரை அங்கு வழங்கப்படும் உணவு ஹராம் என்ற அடிப்படையில் நாம் அதைப் புறக்கணிப்பதில்லை. உணவு ஹலால் என்றாலும் தீமை நடப்பதால் அங்கு செல்லாமல் புறக்கணிக்கின்றோம். அந்த உணவைக் கொடுத்து விடும் போது அன்பளிப்பு என்ற அடிப்படையில் அதை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை என்று கூறியிருந்தோம்.
ஆனால் மவ்லித் அல்லது இறந்தவர்களுக்காக பாத்திஹா ஓதி நேர்ச்சை செய்தால் அந்த உணவே தடுக்கப்பட்டதாகி விடுகின்றது. இந்த உணவை அந்த இடத்திற்குச் சென்றும் உண்ணக்கூடாது. யாரும் நமக்கு அன்பளிப்பாக வழங்கினாலும் உண்ணக் கூடாது.
அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்! அது குற்றம். உங்களுடன் தர்க்கம் செய்யுமாறு ஷைத்தான்கள் தமது தோழர்களுக்குக் கூறுகின்றனர். நீங்கள் அவர்களுக்குக் கட்டுப் பட்டால் நீங்கள் இணை கற்பிப்பவர்களே. (6:121)
இந்த வசனத்தின் அடிப்படையில் அல்லாஹ் அல்லாதவர்களுக்காகப் படைக்கப்படும் உணவுகளை உண்பது தடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த உணவுகளை அன்பளிப்பாக யாரும் வழங்கினாலும் அதை உண்ணக் கூடாது.