பாதிக்கப்பட்டோர், சிரமப்படுவோர், பலவீனமானவர்களுக்கு உதவுதல்

நாம் நலமாக இருக்கிறோம்; நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதால் சமுதாயத்தைப் பற்றிக் கொஞ்சமும் கவலை இல்லாமல் இருந்துவிடக் கூடாது. பாதிக்கப்பட்டோர், சிரமப்படுவோர், பலவீனமானவர்கள் போன்று பல்வேறு மக்கள் நமக்கு மத்தியில் இருக்கிறார்கள். அவர்களின் துயர் துடைப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அவர்களின் சிரமங்கள் நீங்குவதற்குத் துணை நிற்க வேண்டும். அவர்கள் இன்னல்கள் நீங்கி நலமாக வாழ அதரவு அளிக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் ஏழு செயல்களைச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்; ஏழு செயல்களிலிருந்து எங்களைத் தடுத்தார்கள். அவை (செய்யும்படிக் கட்டளையிட்ட ஏழு செயல்கள்) இவை தாம்:

1. நோயாளிகளை நலம் விசாரிப்பது

2. ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்வது

3. தும்மியவருக்கு அவர், “அல்ஹம்துலில்லாஹ்” (“அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்று) சொன்னால், “யர்ஹமுக் கல்லாஹ்” – (அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக!) என்று துஆ செய்வது

4. சலாமுக்கு (முகமனுக்கு) பதிலுரைப்பது

5. அக்கிரமத்திற்கு உள்ளானவருக்கு உதவுவது

6. விருந்துக்காக அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்வது

7. சத்தியம் செய்தவரின் சத்தியத்தை நிறைவேற்ற உதவுவது.

அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி),

நூல்: புஹாரி (2445)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் கைப்பற்றி, அவரிடம் “நீர் ஏதேனும் நல்லது செய்திருக்கிறீரா?” எனக் கேட்டனர். அதற்கு அம்மனிதர், “வசதியானவருக்கு அவகாசம் அளிக்கும்படியும் (அவர் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதம் செய்வதை) கண்டு கொள்ளாமல் விட்டுவிடும்படியும் நான் எனது ஊழியர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன்!” என்று கூறினார். உடனே, “அவரது தவறுகளைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள்!” என்று அல்லாஹ் வானவர்களுக்குக் கட்டளையிட்டான்!

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி),

நூல்: புஹாரி (2077)

நான் நபி (ஸல்) அவர்களிடம், “எந்த நற்செயல் சிறந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஈமான் (நம்பிக்கை) கொள்வதும் அவனது பாதையில் ஜிஹாத் செய்வதும் (போராடுவதும்) ஆகும்” என்று பதிலளித்தார்கள். நான், “எந்த அடிமை(யை விடுதலை செய்வது) சிறந்தது” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அவர்களில் அதிக விலை கொண்ட அடிமையும் தன் எஜமானர்களிடம் பெறுமதி மிக்க அடிமையும் (தான் சிறந்தவர்கள்)” என்று பதிலளித்தார்கள்.

நான், “என்னால் அது (அடிமையை விடுதலை செய்வது) இயலவில்லையென்றால்?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “பலவீனருக்கு உதவி செய்; அல்லது உழைத்துச் சம்பாதிக்க இயலாதவனுக்கு நன்மை செய்” என்று கூறினார்கள். நான், “இதுவும் என்னால் இயலவில்லையென்றால்….?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இரு. ஏனெனில், அதுவும் நீ உனக்குச் செய்து கொள்ளும் ஒரு தர்மம் ஆகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி),

நூல்: புஹாரி (2518)

ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *