பள்ளிவாசலில் விற்பதும் வாங்குவதும்
பள்ளிவாசலில் கவிதைகள் இயற்றுவதையும், விற்பதையும் வாங்குவதையும் நபிகள் நாயகம் ஸல அவர்கள் தடை செய்தார்கள்
நூல் திர்மிதி 296
ஆனாலும் பொது நலன் சார்ந்த பள்ளிவாசல் நிர்வாகம் சார்ந்த பொருட்களை விற்பதையும் வாங்குவதையும் இது கட்டுப்படுத்தாது.
2097 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் (பங்கு கொண்டு விட்டுத் திரும்பி வந்து கொண்டு) இருந்தேன்; அப்போது எனது ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின் தங்க வைத்துவிட்டது. நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ஜாபிரா? என்று கேட்டார்கள்.
நான், ஆம்!என்றேன். என்ன விஷயம்(ஏன் பின்தங்கிவிட்டீர்)? என்று கேட்டார்கள். என் ஒட்டகம் களைத்து பலமிழந்துபோனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது; அதனால் நான் பின்தங்கிவிட்டேன்!என்றேன். நபி (ஸல்) அவர்கள் கீழே இறங்கிதலைப் பகுதி வளைந்த ஒரு கைத்தடியால் எனது ஒட்டகத்தைத் தட்டி(எழுப்பி)னார்கள்.
பிறகு (உமது வாகனத்தில்) ஏறுவீராக! என்றார்கள். நான் (வாகனத்தில்) ஏறினேன். நபி (ஸல்) அவர்களைவிட எனது ஒட்டகம் முந்தாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், நீர் மணமுடித்துவிட்டீரா? என்று கேட்டார்கள்.
நான் ஆம்!என்றேன். கன்னியையா? கன்னிகழிந்த பெண்ணையா? என்று கேட்டார்கள்.
கன்னிகழிந்த பெண்ணைத்தான்!என்று நான் கூறினேன். நபி (ஸல்) அவர்கள், கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? அவள் உம்முடனும் நீர் அவளுடனும் கூடிக்குலாவி மகிழலாமேமே!என்று கூறினார்கள்.
நான், எனக்குச் (சிறிய வயதுடைய) சகோதரிகள் உள்ளனர்! அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி, அவர்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன்!என்றேன்.
நபி (ஸல்) அவர்கள், இப்போது ஊருக்கு செல்லப் போகிறீர்! ஊர் சென்றதும் நிதானத்துடன் நடந்து கொள்வீராக! நிதானத்துடன் நடந்து கொள்வீராக! என்று கூறிவிட்டு
பின்னர், உமது ஒட்டகத்தை எனக்கு விற்றுவிடுகிறீரா? என்று கேட்டார்கள். நான், சரி (விற்று விடுகிறேன்!) என்றேன். அவர்கள் என்னிடமிருந்து, ஒரு ஊக்கியா எடை (தங்கத்து)க்குப் பகரமாக அதை வாங்கிக் கொண்டார்கள்.
பிறகு, எனக்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) சென்றுவிட்டார்கள். நான் மறுநாள் சென்றடைந்தேன். நாங்கள் பள்ளிவாசலுக்கு வந்த போது அதன் நுழைவாயிலில் நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். இப்போது தான் வருகிறீரா? என்று அவர்கள் (என்னைப் பார்த்துக்) கேட்டார்கள். நான் ஆம்!என்றேன். உமது ஒட்டகத்தை விட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!
என்று சொன்னார்கள். அவ்வாறே, நான் உள்ளே சென்று தொழுதேன். நபி (ஸல்) அவர்கள் எனக்காக ஒரு ஊக்கியா (தங்கத்தை) எடை போடுமாறு பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனக்காக பிலால் (ரலி) அவர்கள் எடை போட்டுச்சற்று தாரளமாகவே நிறுத்தார்கள். பிறகு நான் திரும்பிச்சென்றுவிட்டேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், ஜாபிரை என்னிடம் அழைத்து வாரும்! என்றார்கள். நான் (மனத்திற்குள்) இப்போது என் ஒட்டகம் திருப்பித் தரப்பட்டுவிடும்; அதைவிட எனக்கு வெறுப்பானது வேறொன்றுமில்லை என்று கூறிக் கொண்டேன். நபி (ஸல்) அவர்கள், உமது ஒட்டகத்தை எடுத்துக்கொள்வீராக! அதனுடைய விலையையும் நீரே வைத்துக்கொள்வீராக! என்று சொன்னார்கள்.
நூல் புகாரி 2097
பைத்துல் மால் பொது நிதியில் இருந்து ஒட்டகத்தை வாங்கியுள்ளதால் ஜமாஅத் நன்மை சமுதாய நன்மை சார்ந்த் வியாபாரம் பள்ளிவாசலில் செய்ய தடை இல்லை.