பள்ளிவாசலில் ஜும்ஆ தொழ முடியாத நிலையில் வீடுகளில் ஜும்ஆ தொழுவது கூடுமா?

வீடுகளில்குடும்பம்சகிதம்ஜும்ஆவைநிறைவேற்றுவோம்

வெள்ளிக்கிழமை தினத்தில் வியாபரத்தை விட்டுவிட்டு ஜும்ஆவை நிறைவேற்ற வேண்டும் என்பது இறைவனின் கட்டளை.

“நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள் நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.”

(திருக்குர்ஆன் 62:09)

நாட்டில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசாங்கம் மக்கள் ஒன்று கூடுவதை தடைசெய்துள்ள அடிப்படையிலும், மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் பள்ளிகளில் தொழுகைக்காக மக்கள் ஒன்று கூடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு வீடுகளில் தமது மார்க்க கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

ஜும்ஆவுக்கு குறைந்தது 40 பேர் இருக்க வேண்டுமா?

வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை என்பது பள்ளிகளில் மட்டும் நிறைவேற்ற வேண்டிய வணக்கம் அல்ல. மாறாக கூட்டாக நிறைவேற்றுவதற்குரிய குறைந்த பட்ச நபர்களை உள்ளடக்கி பள்ளிகள் அல்லாத (நாம் இருக்கும்) இடத்திலும் ஜும்ஆ வணக்கத்தை நிறைவேற்றலாம்.

அப்துர் ரஹ்மான் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :


(எனது தந்தை) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் ஜும்ஆவுடைய பாங்கைச் செவியுறும் போது அஸ்அத் பின் ஸுராரா (ரலி) அவர்களுக்காக பிரார்த்தனை செய்வார்கள். நான் அவர்களிடம், “நீங்கள் ஜும்ஆவுடைய பாங்கைச் செவியுறும் போது அஸ்அத் பின் ஸுராராவுக்காக பிரார்த்தனை செய்கின்றீர்களே? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஹஸ்முன் நபீத்” என்ற இடத்தில் எங்களை ஜும்ஆவுக்காக திரட்டிய முதல் நபர் அவர்தான். அந்த இடம் பனூ பயாளா குலத்தாரின் கருங்கற்களைக் கொண்ட நிலத்தில் நகீவுல் கள்மாத் என்ற தண்ணீர் நிறைந்த பகுதியாகும்” என்று பதில் கூறினார்கள். “

அல்லாஹ்வின் தூதரின் காலத்தில் நபித்தோழர்கள் பள்ளிவாசல் அல்லாத இடத்தில் ஜும்ஆ வணக்கத்தை நிறைவேற்றியுள்ளார்கள் என்பதை மேற்கண்ட செய்தி தெளிவுபடுத்துகிறது.

அந்த அடிப்படையில் தற்போதைய சூழலில் உங்கள் இல்லங்களில் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து ஜும்ஆவை தொழுது கொள்ளுங்கள்.

ஜும்ஆ வணக்கத்திற்கு மக்கள் எண்ணிக்கையை நபி (ஸல்) அவர்கள் வரையறுத்து சொல்லவில்லை. மாறாக குறைந்த மக்கள் எண்ணிக்கையுடன் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ வணக்கத்தை நிறைவேற்றியுள்ளார்கள் என்பதை பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகிறது.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) கூறினார்கள் :


நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் (ஜும்ஆத்) தொழுது கொண்டிருந்தபோது உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒட்டகக் கூட்டம் ஒன்று வந்தது. அதை நோக்கி மக்கள் சென்று விட்டனர். பன்னிரண்டு நபர்களைத் தவிர வேறு எவரும் எஞ்சியிருக்கவில்லை. இந்த நேரத்தில் தான், “அவர்கள் வணிகப் பொருட்களையோ கவனத்தை ஈர்க்கக் கூடியதையோ கண்டால் உம்மை நிலையில் விட்டுவிட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர்.” (62:11) என்ற வசனம் இறங்கியது.
நூல் : புகாரி 936

ஜும்ஆ வணக்கம் என்பது உரையுடன் இரண்டு ரக்அத்களை கொண்ட தொழுகை என்பதால், உரை கட்டாயம் நிகழ்த்தப்பட்ட வேண்டும். எனவே திருக்குர்ஆனில் உங்களுக்கு தெரிந்த சில வசனங்களை எடுத்துக்கூறி அல்லது தெரிந்த ஒரு சில நபிமொழிகளை உள்ளடக்கி பிள்ளைகளுக்கும், குடும்பத்திற்கும் அறிவுரையாக உரையை அமைத்துக் கொள்ளுங்கள்!

என்னைத் தொட்டும் ஒரு செய்தி உங்களுக்கு கிடைத்தால் அதை பிறருக்கு எத்திவையுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி)

ஒரு செய்தி கிடைத்தாலும் எத்தி வைக்கும் பணியை செய்ய சொன்ன நபி அவர்களின் வழிகாட்டலின் அடிப்படையில் எமக்கு தெரிந்த நபி மொழிகளை எடுத்து சொல்லி ஜும்ஆ கடமையை நிறைவெற்றுவோம்.

குறிப்பு: வெளியிலிருக்கும் மக்கள் ஒன்று கூடுவதற்கான அறிவிப்பில்லை. வீட்டிலிருப்பவர்கள் மட்டும் சேர்ந்து ஜும்ஆ நடத்தவும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *