பலதார மணம் பற்றி இஸ்லாம்
ஆண்கள் நான்கு மனைவியர் வரை திருமணம் செய்யலாம் என்று இஸ்லாத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதை முஸ்லிமல்லாதார் அதிகமாக விமர்சிக்கின்றனர். பெண்களிடம் இஸ்லாம் பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்று கூறுவோருக்கு இது தான் முக்கியமான ஆதாரமாக அமைந்துள்ளது.
பலதார மணத்தை இஸ்லாம் மட்டும் ஆதரிக்கவில்லை.
இஸ்லாம் மட்டுமே பலதார மணத்தை ஆதரிக்கிறது; மற்ற மதங்கள் ஆதரிக்கவில்லை என்ற கருத்து பரவலாக இருக்கிறது.
இக்கருத்து பிரச்சாரமும் செய்யப்படுகிறது. எனவே பலதார மணத்தை இஸ்லாம் ஏன் அனுமதித்தது என்பதை ஆராய்வதற்கு முன் இந்தக் குற்றச்சாட்டை ஆராய வேண்டியது அவசியமாகும்.
நபிகள் நாயகத்துக்கு முன்பே உலகின் பல பாகங்களிலும் பலதார மணம் நடந்தே வந்துள்ளது. அது பெருமைக்குரியதாகவும் கருதப்பட்டு வந்தது. இதற்கு உலக வரலாற்றில் அனேக சான்றுகள் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த முஸ்லிமல்லாத அரபியர்கள் கணக்கு வழக்கின்றிப் பல பெண்களைச் சர்வ சாதாரணமாக மணந்து வந்திருக்கின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னால் உலக மாந்தர் அனைவரும் ஏக பத்தினி விரதத்தை மேற் கொண்டிருந்ததைப் போன்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து தான் முதன் முதலில் பலதார மணத்தை அனுமதித்தது போன்றும் ஒரு தோற்றத்தைச் சிலர் ஏற்படுத்த முயல்கின்றனர். இது முற்றிலும் தவறாகும்.
ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இஸ்லாத்தை ஏற்காத அரபியர் பல பெண்களை மணந்து வாழ்ந்திருக்கிறார்கள். அதற்கென்று விதி முறைகளோ, வரம்புகளோ அவர்களிடம் இருந்ததில்லை.
அரபுலகில் மட்டுமின்றி உலகின் பல பாகங்களிலும் பலதார மணம் இருந்திருக்கின்றது. பல மதங்களும் இதனை அங்கீகரித்திருந்தன.
வள்ளி, தெய்வானை எனும் இரண்டு மனைவியருடன் வாழ்ந்த முருகன் நமது நாட்டில் கடவுளாகக் கருதப்பட்டு இன்றளவும் வணங்கப்பட்டு வருவதைக் காண்கிறோம்.
ஏக பத்தினி விரதம் கடைப்பிடித்ததாகக் கூறப்படும் இராமனின் தந்தை தசரதனுக்கு அறுபது ஆயிரம் மனைவியர் இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
கிருஷ்ணனுக்கு பாமா, ருக்மணி எனும் இரு மனைவியர் இருந்ததாகவும் புராணங்களிலிருந்து அறிய முடிகின்றது. அவரும் நமது நாட்டில் கடவுளாகக் கருதப்பட்டு இன்றளவும் வணங்கப்பட்டு வருகிறார்.
எத்தனையோ மன்னர்களும், மற்றவர்களும் இந்த மண்ணில் பல மனைவியரை மணந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. அது போல் கிறித்தவர்களும், யூதர்களும் பெரிதும் போற்றும் தாவீது ராஜா, ஆப்ரகாம், யாக்கோபு மற்றும் ஏராளமான தீர்க்கதரிசிகள் பல மனைவியருடன் வாழ்ந்ததாக பைபிளிலும், யூத வேதங்களிலும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக யூத கிறித்தவ சமுதாயத்தினர் அவர்களை வெறுக்கவில்லை.
இஸ்லாம் தான் பலதார மணத்தை முதன் முதலில் உலகுக்கு அறிமுகம் செய்தது போல் பிரச்சாரம் செய்யப்படுவது அடிப்படையில்லாதது என்பதை இதன் மூலம் அறியலாம்.
பலதார மணத்தை இஸ்லாம் ஏன் அனுமதிக்கின்றது? அனுமதிக்கக் கூடாது என்போரின் வாதங்கள் எந்த அளவு நியாயமானவை என்பதை இனி ஆராய்வோம்.