பத்ருப் போரும் அல்லாஹுவின் அற்புதங்களும்
இஸ்லாமிய எழுச்சிக்கு வித்திட்ட இப்போரில் இறைவன் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தி முஸ்லிம்களுக்கு வெற்றியை வழங்கினான்.
* ஆயிரம் வானவர்களை இறைவன் களத்தில் இறக்கினான் (8:9)
* சுறுசுறுப்புடன் போரிடுவதற்காக சிறிய தூக்கத்தை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தி அவர்களின் உள்ளங்களில் அமைதி ஏற்படுத்தினான். (8:11)
* அன்றிரவு மழையை இறக்கி அவர்களைத் தூய்மைப்படுத்தியதுடன் அவர்களின் பாதங்களையும் உறுதிப்படுத்தினான் (8:11)
* வானவர்களும் களத்தில் இறங்கிப் போரிட்டனர் (8:12)
* எதிரிகளின் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்தினான் (8:12)
* அவர்களை நீங்கள் கொல்லவில்லை. மாறாக அல்லாஹ்வே அவர்களைக் கொன்றான். (முஹம்மதே!) நீர் எறிந்த போது (உண்மையில்) நீர் எறியவில்லை. மாறாக அல்லாஹ்வே எறிந்தான். நம்பிக்கை கொண்டோருக்கு அழகிய முறையில் பரிசளிப்பதற்காக இவ்வாறு செய்தான். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 8:17)
இந்த அற்புதங்களுடன் சேர்த்து நிகழ்த்திய மற்றொரு அற்புதத்தைத் தான் இவ்வசனத்தில் (8:17) அல்லாஹ் கூறுகிறான்.
“பொடிக் கற்களில் ஒரு கைப்பிடியை எனக்கு எடுத்து வா” என்று நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலிலி) அவர்களிடம் கூறினார்கள். அவர் எடுத்துக் கொடுத்தார். அதை எதிரிகளின் முகங்களை நோக்கி நபி (ஸல்) எறிந்தனர். எதிரிக் கூட்டத்தின் ஒவ்வொருவர் கண்களிலும் அவை பட்டன. அந்தச் சந்தர்ப்பத்தில் தான் “நீர் எறிந்த போது நீர் எறியவில்லை. எனினும், அல்லாஹ் தான் எறிந்தான்” என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான். (நூல்: தப்ரானி 5426)