பத்து வயதுச் சிறுவன் தொழுகை நடத்தலாமா?
இமாமாக நின்று தொழுவிப்பதற்கு நன்றாகக் குர்ஆன் ஓதத் தெரிந்திருந்தால் போதுமானது. வயது வரம்பு ஏதுமில்லை. பின்னால் நின்று தொழுபவர்களை விட வயது குறைந்தவர் குர்ஆனை நன்றாக ஓதுபவராக இருந்தால் அவர் தாராளமாக இமாமத் செய்யலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சிறு வயதையுடையவர்கள் இமாமத் செய்ததற்கு ஆதாரம் உள்ளது.
எனது தந்தை (இஸ்லாத்தை ஏற்று ஊருக்கு) வந்ததும் ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து வந்துள்ளேன். இன்னின்ன நேரத்தில் இந்த இந்த தொழுகைகளைத் தொழுங்கள். தொழுகை நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் தொழுகைக்கு அழைக்கட்டும். மேலும் உங்களில் குர்ஆனை அதிகம் ஓதத் தெரிந்தவர் தொழுகை நடத்தட்டும்’ என்று கூறினார்கள்.
அப்போது அவர்கள் (அத்தகுதியுடைய ஒருவரை தேடிப் பார்த்தார்கள்) நான் ஒட்டக வியாபாரக் கூட்டத்தாரிடமிருந்து தெரிந்து கொண்டிருந்ததால் என்னை விட அதிகமாகக் குர்ஆன் ஓதத் தெரிந்தவர் யாருமிக்கவில்லை. எனவே தொழுகை நடத்த என்னை முன்னிறுத்தினர். அப்போது நான் ஆறு அல்லது ஏழு வயதுடையவனாக இருந்தேன்.
என் மீது ஒரு போர்வை இருந்தது. நான் ஸஜ்தாச் செய்யும் போது அது என்னை விட்டு விலகி (எனது பின்புறம் தெரிந்து) விடும்.
அப்போது கூட்டத்தில் உள்ள ஒரு பெண், ‘உங்கள் இமாமின் பின்புறத்தை மூட (ஒரு துணி கொடுக்க) வேண்டாமா?’ என்று கேட்டார்.
உடனே அவர்கள் எனக்கு ஒரு சட்டையை அளித்தனர். அந்தச் சட்டையைக் கொண்டு நான் அடைந்த சந்தோஷத்தைப் போன்று வேறு எதைக் கொண்டும் சந்தோஷம் அடைந்ததில்லை.
அறிவிப்பவர்: அம்ரு பின் ஸலமா (ரலி)
நூல்: புகாரி 4302