பட்டால் தயாரிக்கப்பட்ட ஆடை அணியலாமா?
ஆண்கள் பட்டாடை அணிவதை மார்க்கம் தடை செய்துள்ளது.
பட்டாடையும், தங்கமும் என் சமுதாய ஆண்களுக்கு ஹராம் (தடை செய்யப்பட்டது) ஆகும். பெண்களுக்கு ஹலால் (ஆகுமாக்கப்பட்டது) ஆகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ முஸா (ரலி)
நூல் : திர்மிதி 1720
சாதரணப் பட்டையோ, அலங்காரப் பட்டையோ அணியாதீர்கள். தங்கம் மற்றும் வெள்ளித் தட்டுகளில் சாப்பிடாதீர்கள். அவை இம்மையில் இறை மறுப்பாளர்களாகிய அவர்களுக்கும் மறுமையில் நமக்கும் உரியதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் அபீலைலா (ரலி)
நூல் : புகாரி 5426
இம்மையில் (ஆண்கள்) பட்டாடை அணிந்தால் மறுமையில் அதிலிருந்து சிறிதளவும் அணியவே முடியாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உமர் (ரலி)
நூல் : புகாரி 5850
ஆடையில் ஓரிரு வரிகள் பட்டு இருந்தால் அதை ஆண்கள் அணிந்து கொள்ளலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பட்டு அணிவதை (ஆண்களுக்கு) தடை செய்தார்கள். இந்த அளவைத் தவிர. (இதைக் கூறிய போது) பெருவிரலை அடுத்துள்ள (சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய ) இரு விரல்களால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.
அறிவிப்பவர் : உமர் (ரலி)
நூல் : புகாரி 5828
ஆடையில் பட்டு சிறிதளவு இருந்தால் தவறில்லை என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. சிறிதளவு என்பது இருவிரல்கள் அளவு என இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. எனவே நீங்கள் அணியும் டையில் இந்த அளவிற்குப் பட்டு இருந்தால் தவறில்லை. டை முழுவதும் பட்டால் செய்யப்பட்டிருந்தால் அணியக் கூடாது.