பகைவருக்கும் நிதி உதவி செய்த அபூபக்ர் (ரலி)
அபூபக்ர் (ரலி) அவர்கள் இயற்கையிலேயே கொடை வள்ளல் தன்மை கொண்டவர்களாக இருந்தார்கள். இஸ்லாத்திற்குப் பிறகு இன்னும் சிறப்பாக அக்காரியத்தைச் செய்து வந்தார்கள்.
பொதுவாக, எவ்வளவு பெரிய கொடை வள்ளலாக இருப்பினும், தன் மூலம் உதவி பெறும் ஒருவர், தனக்கோ தனது குடும்பத்திற்கோ கேடு விளைவிக்கிறார் எனில் அவர் மீது கடும் கோபம் கொள்வார்; தனது உதவிகளை நிறுத்திக்கொள்வார்.
அதே போன்றுதான் அபூபக்ர் (ரலி) அவர்கள், தனது அன்பு மகளாரும் முஃமின்களின் தாயாருமான ஆயிஷா (ரலி) அவர்களின் கற்பொழுக்கத்தைக் கேள்விக்குறியாக்கும் அவதூறு பரப்பப்பட்ட போது அந்த அவதூறைப் பரப்பியவர்களில் தன்னிடம் உதவிபெறும் மிஸ்தஹ் என்பாரும் ஒருவர் என்று அறிந்து, அவருக்குச் செய்து வந்த உதவிகளை நிறுத்திக் கொண்டார்கள்.
உடனே இறைவன் திருக்குர்ஆனில், ‘உதவிகளை நிறுத்த வேண்டாம்’ என்று கட்டளை பிறப்பித்ததும், தனிப்பட்ட கோபம் எவ்வளவு இருப்பினும் இறை வசனத்துக்குப் பணிந்தார்கள். உள்ளத்தில் குடிகொண்ட குரோதமும், பகைமையும் அகன்றது.
அல்லாஹ், “அவதூறு பரப்பியவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தான்’’ என்று தொடங்கும் (24:11) வசனங்களை அருளியிருந்தான். என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளியபோது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷாவைப் பற்றி (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் மிஸ்தஹுக்காக நான் செலவிட மாட்டேன்’’ என்று கூறினார்கள்… மிஸ்தஹ் பின் உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் செலவிட்டு வந்தார்கள்……
உடனே அல்லாஹ், “உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்’’ என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். ‘அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்’ என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’’ என்னும் (24:22) இறைவசனத்தை அருஜனான். அதன் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள், “ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’’ என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் (ரலி) அவர்களுக்கு ஏற்கனவே தாம் செய்து வந்த (பொருள்) உதவியைத் தொடரலானார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2661 (ஹதீஸின் சுருக்கம்)