லைலதுல் கத்ர் (لیلة القدر Night of Power)

லைலதுல் கத்ர் (لیلة القدر Night of Power)
———————————————

ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்.

(அல்குர்ஆன் 97:1-5)

முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி (35)

லைலத்துல் கத்ரு எந்த நாள்?

லைலதுல் கத்ரு இரவில் இவ்வளவு சிறப்பை இறைவன் வைத்திருந்தாலும் அது எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் தெரியாது. நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்ட அந்த இரவை அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்காக மறக்கடித்துள்ளான். நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ரு இரவைப் பற்றி அறிவிப்பதற்காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போது முஸ்லிம்களில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். லைலதுல் கத்ரு இரவு பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது. அதுவும் உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் ரமலான் மாதத்தின் இருபத்து ஏழு, இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயற்சி செய்யுங்கள் என்றார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி),
நூல்கள்: புகாரி (49), முஅத்தா (615)

நபி (ஸல்) அவர்களுக்கே தெரியாது என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுவதால் அது குறிப்பிட்ட இந்த இரவு தான் என்று இவ்வுலகத்தில் எந்த மனிதனும் கூற முடியாது. எனினும் லைலதுல் கத்ர் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப் படை இரவான 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஆதாரப்பூர்மான செய்திகள் உள்ளன.

ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:

ஆயிஷா (ரலி),
நூல்கள்: புகாரி 2017, முஸ்லிம் 1997

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலதுல் கத்ரு இரவைப் பற்றிச் சொல்லும் போது, அது ரமலான் மாதத்தில் தான் இருக்கிறது. எனவே அதை ரமலானில் கடைசிப் பத்தில் தேடுங்கள். அது ஒற்றைப்படை இரவான இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி மூன்று அல்லது இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஏழு அல்லது ரமலானின் கடைசி இரவில் (29) இருக்கும் என்று சொல்லி விட்டு, யார் அதில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி),
நூல்: அஹ்மத் (20700)

மேற்கூறிய ஹதீஸ்கள் ஐயத்திற்கு இடமின்றி லைலதுல் கத்ர், ரமலான் மாதத்தில் கடைசிப் பத்து இரவுகளில் 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான் இருக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.


ஏகத்துவம்