❌ இட்டுக்கட்டப்பட்ட செய்தி ❌
ஒரு தடவை மூஸா அலை அல்லாஹ்விடம் கேட்டார்; யா அல்லாஹ்! நீ என்னை உன்னுடன் நேரடியாக பேசவைப்பதன் மூலம் கெளரவப்படுத்தினாய்..இது போன்ற பாக்கியத்தை வேறு எவருக்கேனும் கொடுத்ததுண்டா? என கேட்டார்.அதற்கு அல்லாஹு தஆலா ; மூஸாவே! இறுதி காலப்பகுதியில் நான் முஹம்மத் (ஸல்) இன் கூட்டத்தினரை அனுப்புவேன்.அவர்கள் காய்ந்த உதடுகளுடனும்; வரண்ட நாவுடனும், மெலிந்து கண்கள் குழிவிழுந்த தோற்றத்துடனும் இருப்பதோடு; வயிற்றில் பசியுடன் –என்னை அழைப்பர்(துஆ மூலம்).அவர்கள் தான் அதிகம் அதிகம் எனக்கு நெருக்கமானவர்கள். மூஸாவே! உங்களுக்கும் எனக்கும் மத்தியில் 70000 தடுப்புக்கள் இருந்தன . ..ஆயினும் இஃப்தார் நேரத்தில் எந்த ஒரு தடுப்பும் எனக்கும் நபி முஹம்மதின் உம்மத்திற்கும் இருக்காது.மூஸாவே! இஃப்தார் நேரத்தில் நோன்பாளியின் துஆ நிராகரிக்கப்படாது .அதற்கான பொருப்பை நானே ஏற்கிறேன்.என்றான்..
இது ஆதாரபூர்வமானதா❓
இச்செய்தி இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். இவ்வாறு ஒரு செய்தியை அறிவிப்பாளர் தொடருடன் எந்த ஹதீஸ் கலை வல்லுனரும் தமது கிரந்தத்தில் பதிவு செய்ததில்லை. இச்செய்தியை நபியின் பெயரால் பரப்பியவர் ஹிஜ்ரி 890 கால கட்டத்தில் ஜோர்தானில் வாழ்ந்த அப்துர் ரஹ்மான் பின் அப்துஸ் ஸலாம் எனும் வரலாற்று ஆசிரியரே! இவர் எழுதிய நுஸ்ஹதுல் மஜாலிஸ் வமுந்தகபுந் நபாயிஸ் எனும் நூலில் இச்செய்தியைக் காணலாம்.
அறிவிப்பாளர் தொடரற்ற இச்செய்தியை ரூஹுல் பயான் எனும் கட்டுக்கதைகள் நிறைந்த குர்ஆன் விரிவுரை நூலில் இஸ்மாயீல் ஹக்கீ என்பவர் எடுத்தெழுதினார். பொய்களும், புராணங்களும் நிறைந்த ரூஹுல் பயானை வாசித்த உலமாப் பெருந்தகைகள் இந்தக் கட்டுக்கதையை ஸஹீஹான ஹதீஸைப் போன்று எடுத்துச் சொல்லிப் பரப்பியதால் அது நபியின் கூற்றாகவே மக்கள் மத்தியில் இடம் பிடித்து விட்டது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயரால் பொய்கள் பரவுவதற்கு அடிப்படைக் காரணம், உலமாக்கள் தாம் சொல்லும் செய்திகளுக்கான மூல நூற்களை எடுத்துப் பார்த்து, அச்செய்தியையும் அதன் அறிவிப்பாளர் தொடரையும் உறுதி செய்து கொள்ளாமல் யாரோ எழுதிய புத்தகத் தகவல்களை நம்பி பயான் செய்வது தான்!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் மீது பொய் சொல்லாதீர்கள்! என் மீது பொய் சொன்னவன் நரகத்தில் நுழையட்டும்!’
அறிவிப்பவர் : அலி (ரலி),
ஆதாரம்: ஸஹீஹுல் புஹாரி 106.