நோன்புப் பெருநாள் தர்மம்
———————————————
நோன்புப் பெருநாளை ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதற்காக இஸ்லாம் செய்துள்ள ஏற்பாடு தான் (சதகதுல் பித்ர் எனும்) நோன்புப் பெருநாள் தர்மம் ஆகும்.
\கட்டாயக் கடமை\
நோன்புப் பெருநாள் தர்மம் கட்டாயமான ஒரு கடமையாகும்.
அடிமைகள், அடிமைகள் அல்லாத மற்றவர்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர், பெரியோர் ஆகிய அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்.
பேரீச்சம் பழம், தீட்டப்படாத கோதுமை ஆகியவற்றிலிருந்து ஒரு ஸாவு எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்.
மேலும் (பெருநாள்) தொழுகைக்கு மக்கள் புறப்படுவதற்கு முன்பே அதை வழங்கிவிட வேண்டும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1503
இந்த ஹதீஸில் ஃபரள (கடமையாக்கினார்கள்) என்ற வாசகம் தெவாக இடம் பெற்றுள்ளதால் இது ஒரு கட்டாயமான கடமை என்பதை அறிந்து கொள்ளலாம்.
//நிறைவேற்றும் நேரம்///
நோன்புப் பெருநாள் தர்மத்தை எப்போதிலிருந்து நிறைவேற்றலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலக்கெடு எதனையும் நிர்ணயிக்கவில்லை. ஆயினும் நோன்புப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன்பாகக் கொடுத்து விட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். இந்தக் கட்டளை மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.
இந்தக் கட்டளையை முஸ்லிம் அறிஞர்கள் இரண்டு விதமாகப் புரிந்து கொண்டுள்ளனர்.
1) பெருநாள் பிறை தென்பட்டது முதல் பெருநாள் தொழுகை தொழுவதற்கு முன் கொடுத்து விட வேண்டும்.
2) ரமலான் மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் வழங்கலாம். வழங்கப்படுவதற்கான கடைசி நேரம் தான் அந்தக் கட்டளையில் கூறப்பட்டுள்ளது. ஆரம்ப நேரம் பற்றி கூறப்படவில்லை.
இவ்வாறு இரு கருத்துக்கள் நிலவுகின்றன. இதில் இரண்டாவது கருத்துத் தான் ஏற்புடையதாக உள்ளது.
நபித்தோழர்கள் நோன்புப் பெருநாளைக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாக அதைக் கொடுத்து வந்தனர்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1511
பெருநாள் பிறையைக் கண்ட பிறகு தான் இதைக் கொடுக்க வேண்டும் என்றிருந்தால் இரண்டு நாட்களுக்கு முன்பே நபித்தோழர்கள் கொடுத்திருக்க மாட்டார்கள்.
மேலும் பெருநாள் தர்மத்தின் நோக்கம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதும் இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கிறது.
நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்.
யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பு அதை நிறைவேற்றுகிறாரோ அது ஏற்கப்பட்ட கடமையான ஸகாத்தாக அமையும். யார் பெருநாள் தொழுகைக்குப் பின் வழங்குகிறாரோ அது சாதாரண தர்மங்களில் ஒரு தர்மம் போல் அமையும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: அபூதாவூத் 1371
ஏழைகள் மகிழ்வுடன் பெருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதற்காகத் தான் பெருநாள் தொழுகைக்கு முன்பே கொடுப்பதையும், பின்னால் கொடுப்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறார்கள். பெருநாள் தொழுகைக்குப் பின்னால் கொடுப்பது ஏழைகள் பெருநாள் கொண்டாட உதவாது என்பதால் அதைச் சாதாரண தர்மம் எனக் கூறுகிறார்கள்.
பெருநாள் தினத்தை ஏழைகள் மகிழ்ச்சியுடன் கொண்டாட இந்த தர்மம் உதவ வேண்டும் என்பது தான் இதன் முக்கியமான நோக்கம்.
இன்றைய காலத்தில் மற்றவர்களைப் போல் ஏழைகளும் பெருநாளைக் கொண்டாட வேண்டுமென்றால் பெருநாளைக்குச் சில நாட்களுக்கு முன்பே இந்தத் தர்மத்தைக் கொடுத்தால் தான் சாத்தியமாகும்.
ஏழைகள் மகிழ்வுடன் பெருநாள் கொண்டாட உதவுகிறதா என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட்டு அதற்கு உதவுகிற வகையில் ரமளானில் எப்போது கொடுத்தாலும் அதைக் குறை கூற முடியாது.
———————
ஏகத்துவம்