அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம்
(நீங்கள் இணைகற்பித்தவை சிறந்தவையா? அல்லது)
வானங்களையும், பூமியையும் படைத்து வானத்திலிருந்து தண்ணீரை உங்களுக்காக இறக்கி வைத்தவனா?
அதன் மூலம் செழிப்பான தோட்டங்களை முளைக்கச் செய்கிறோம். அதில் ஒரு மரத்தைக் கூட உங்களால் முளைக்கச் செய்ய இயலாது.
அல்லாஹ்வுடன் வேறு கடவுளா?
இல்லை.
அவர்கள் (இறைவனுக்கு மற்றவர்களை) சமமாக்கும் கூட்டமாகவே உள்ளனர்.
(நீங்கள் இணைகற்பித்தவை சிறந்தவையா? அல்லது)
பூமியை வசிப்பிடமாக்கி, அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி, அவற்றுக்கு முளைகளையும் அமைத்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா?
அல்லாஹ்வுடன் வேறு கடவுளா?
இல்லை!
அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை.
(நீங்கள் இணைகற்பித்தவை சிறந்தவையா? அல்லது)
நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும்போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித்தோன்றல்களாக ஆக்கியவனா?
அல்லாஹ்வுடன் வேறு கடவுளா?
குறைவாகவே சிந்திக்கிறீர்கள்!
(நீங்கள் இணைகற்பித்தவை சிறந்தவையா? அல்லது)
தரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் உங்களுக்கு வழிகாட்டியவனா?
தனது அருளுக்கு முன் நற்செய்தி கூறிட காற்றை அனுப்பியவனா?
அல்லாஹ்வுடன் வேறு கடவுளா?
அவர்கள் இணைகற்பிப்பதை விட்டும் அல்லாஹ் உயர்ந்தவன்.
(நீங்கள் இணைகற்பித்தவை சிறந்தவையா? அல்லது)
படைப்பினங்களை முதலில் படைத்து பின்னர் மறுபடியும் படைப்பவனா?
வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவனா?
அல்லாஹ்வுடன் வேறு கடவுளா?
“நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள்!” என்று கேட்பீராக!
“வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள்.
தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக!
மறுமையைப் பற்றிய அவர்களின் அறிவு சுருங்கி விட்டது.
இல்லை!
அது குறித்து அவர்கள் சந்தேகத்தில் உள்ளனர்.
இல்லை!
அதைப் பொறுத்த வரை அவர்கள் குருடர்களாகவே உள்ளனர்.
“நாங்களும், எங்கள் முன்னோர்களும் மண்ணாக ஆகிவிட்டால் வெளிக்கொண்டு வரப்படுவோமா?” என்று (ஏக இறைவனை) மறுப்போர் கேட்கின்றனர்.
“நாங்களும், இதற்கு முன் எங்கள் முன்னோர்களும் இது குறித்து எச்சரிக்கப்பட்டிருந்தோம். இது முன்னோர்களின் கட்டுக்கதைகள் தவிர வேறில்லை” (என்றும் கூறுகின்றனர்).
“பூமியில் பயணம் செய்யுங்கள்!
குற்றவாளிகளின் முடிவு எப்படி அமைந்தது என்று பாருங்கள்!” எனக் கூறுவீராக!
அவர்களுக்காகக் கவலைப்படாதீர்! அவர்கள் சூழ்ச்சி செய்வதால் மன நெருக்கடிக்கும் ஆளாகாதீர்! “
நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த எச்சரிக்கை எப்போது (நிறைவேறும்?)” என்று அவர்கள் கேட்கின்றனர்.
“நீங்கள் அவசரமாகத் தேடுபவற்றில் ஒரு பகுதி உங்களை வந்தடையும்” என்று கூறுவீராக!
உமது இறைவன் மனிதர்கள் மீது அருளுடையவன்; எனினும் அவர்களில் அதிகமானோர் நன்றி செலுத்துவதில்லை.
அவர்களின் உள்ளங்கள் மறைப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் உமது இறைவன் அறிவான்.
பூமியிலோ, வானத்திலோ மறைவான எதுவானாலும் அது தெளிவான பதிவேட்டில் இருக்கிறது.
📚அல்குர்ஆன்: [27:60-75]