|| *நிச்சயிக்கப்பட்ட மரணம்!* ||
ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே! “ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை” (அல்(அல்குர்ஆன்: 3:185) ➚
“(பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே!” (அல்(அல்குர்ஆன்: 55:26) ➚
நபி (ஸல்) அவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறும் போது, “நிச்சயமாக நீரும் மரிப்பவர்! நிச்சயமாக அவர்களும் மரிப்பவர்களே!” (அல்குர்ஆன்: 39:30) ➚
இவ்வுலகில் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக்கொண்டு செல்வம் சேர்ப்பதிலும் அதனைக் கொண்டு பெருமிதம் அடைகின்ற நாம் இவ்வுலக வாழ்வு என்பது நிரந்தரமற்ற தற்காலிக வாழ்வு என்பதை ஏனோ மறந்து விடுகிறோம். இவ்வுலகில் எந்த மனிதருக்கும் நிரந்தர வாழ்வு என்பது கிடையாது.
அல்லாஹ் கூறுகிறான்: “(நபியே!) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் (அவன்) என்றென்னும் இருக்கக்கூடிய நித்திய வாழ்வை நாம் (இங்கு) கொடுக்கவில்லை” (அல்(அல்குர்ஆன்:21:34) ➚
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஐந்து நிலைமைகளட ஏற்படுவதற்கு முன் ஐந்து நிலைமைகளைப் பேணிக்கொள். மரணத்திற்கு முன் வாழ்வையும், நோய்வருமுன் ஆரோக்கியத்தையும், வேலை வருமுன் ஓய்வையும், வயோகிகத்திற்கு முன் வாலிபத்தையும், ஏழ்மைக்கு முன் செல்வ நிலையையும் பேணிக்கொள்’ ஆதாரம் : அஹ்மத்.
மரணம் என்பது ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும், எந்த இடத்திலும், எந்த வயதிலும் ஏற்படலாம். எனவே மரணம் வந்துவிட்டால் அதை தடுக்கவோ அல்லது அதை பிற்படுத்தவோ அல்லது அதை விட்டு தப்பிக்கவோ இயலாது. அல்லாஹ் கூறுகிறான்: “ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்” (அல்(அல்குர்ஆன்: 7:34) ➚
இறைக் கட்டளைகளைப் பேணி வாழ்ந்து வரும் ஒரு முஃமினுக்கு மரணவேளை வந்துவிட்டால் அவருடைய உயிரை வானவர்கள் கைப்பற்றும் போது நிகழ்கின்ற நிகழ்வை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்: “நிச்சயமாக எவர்கள்: ‘எங்கள் இறைவன் அல்லாஹ்தான்’ என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, ‘நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் – உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்’ (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்” (அல்(அல்குர்ஆன்: 41:30) ➚
ஆனால், “அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, ‘எனக்கு வஹீ வந்தது’ என்று கூறுபவன்; அல்லது ‘அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்’ என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) ‘உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்’ (என்று கூறுவதை நீர் காண்பீர்)” (அல்(அல்குர்ஆன்: 6:93)➚
எனவே மேற்கண்ட வசனங்களிலிருந்து ஒருவருடைய மரண வேளையில் அவருக்கு உண்மை நிலை வெளிப்பட்டுவிடும் என்பது தெளிவாகிறது. உண்மையை உணர்ந்தபின் தாம் வாழும் போது செய்யாமல் விட்டுவந்த நல்ல காரியங்களைச் செய்வதற்காக அவன் தமக்கு சிறிது அவகாசம் அளிக்குமாறு வேண்டுவான். ஆனால் காலம் கடந்து கைசேதப்பட்டு என்னபயன்? அல்லாஹ் கூறுகிறான்:
‘இன்னும் எவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அதற்குப்பின் அவனுக்குப் பாதுகாவலர் எவருமில்லை, அநியாயம் செய்தவர்கள் வேதனையைக் காணும் போது, (இதிலிருந்து) தப்பித்து மீள்வதற்கு ஏதாகிலும் வழியுண்டா?’ என்று கூறும் நிலையை நீர் காண்பீர்” (அல்(அல்குர்ஆன்:42:44) ➚
“அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: ‘என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!’ என்று கூறுவான். ‘நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக’ (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது” (அல்(அல்குர்ஆன்: 23:99-100) ➚
எனவே நாம் நிரந்தரமற்ற இவ்வுலக வாழ்க்கை என்பது ஒரு சோதனை என்பதை உணர்ந்து அழியக்கூடிய பொருள்களின் மீது பேராசைக் கொள்வதை விட்டு விட்டு நிரந்தரமான மறுமை வாழ்விற்கு தேவையான நல்லறங்களின் மீது நாட்டம் கொண்டவர்களாக அதிகமதிகம் நற்காரியங்களைச் செய்வோமாக! வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அதற்கு அருள் புரிவானாகவும்.