நாம் மறுமைக்காக வாழும் சமுதாயம்
ஆடம்பர வாழ்க்கையில் ஆட்பட்டு கிடக்கும் இன்றைய சூழலில் பொருளாதராத்தை ஈட்ட வேண்டிய நிர்பந்தத்தில் அனைத்து மக்களும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமிய மக்களின் நிலையோ இதில் சற்று மாறுபட்டு உள்ளது.
பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இஸ்லாமியர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை நிலை நிறுத்த கடுமையாக உழைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. தங்கள் வாழ்க்கை மேம்படுத்த கடுமையாக உழைக்கிறார்கள். இதை யாரும் குறை சொல்ல முடியாது. அதே நேரத்தில் இவ்வுலுக வாழ்க்கையைவிட மேலான ஒரு வாழ்க்கைக்காக எவ்வளவு நேரம் ஒதுக்கி உள்ளார்கள் என்பதை நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். மறுமை வாழ்க்கையோடு ஒப்பிடும்போது இவ்வுலுக வாழ்க்கை ஒன்றுமே இல்லை.
“விளையாட்டும், வீணும், கவர்ச்சியும், உங்களுக்கிடையே பெருமையடித்தலும், பொருள் செல்வத்தையும், மக்கள் செல்வத்தையும் அதிகமாக்கிக் கொள்வதும் ஆகியவையே இவ்வுலக வாழ்க்கை.” என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (இவ்வுலகின் நிலை) மழையைப் போன்றது. அதன் (காரணமாக முளைத்த) பயிர்கள் (ஏக இறைவனை) மறுப்போருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பின்னர் அது காய்ந்து விடுகிறது. அது மஞ்சள் நிறமாக மாறுவதைக் காண்பீர். பின்னர் கூளமாக ஆகிறது. மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.
(அல்குர்ஆன் 57:20)
இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?
(அல்குர்ஆன் 6:32)
இவ்வுலுக வாழ்க்கையில் முழுமையாக மூழ்கிப் போனவர்கள் மறுமை நாளில் பெரும் நஷ்டத்தைத்தான் அடைவார்கள். இவ்வுலுக வாழ்க்கை நம்மை ஈர்க்கும் போதைப் பொருளைப் போன்றது. அது நிரந்தரமானது அல்ல. உண்மையான இன்பத்தை தருவதும் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
உலகை நோக்கி சாய்ந்தால்
சுயநல அரசியலும், சுகபோக வாழ்க்கையும் போதையாக தலைக்கேறி இருக்கின்ற காரணத்தினால்தான் 51 முஸ்லிம் நாடுகளும் ஒன்றுபட்டு உலக முஸ்லிம்களின் அவலங்களுக்குக் குரல் கொடுத்து அவர்களது உரிமைகளை வென்றெடுக்க முடியாமல் இருக்கிறோம்!
‘பசியோடு இருக்கும் மிருகங்கள் உணவுத் தட்டை நோக்கிப் பாய்ந்து செல்வதைப் போன்று, (எதிரி) சமூகங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து உங்களுக்கெதிராகச் செயற்பட முற்படுவார்கள்.
அப்போது ஒருவர், ‘அந்நேரம் நாங்கள் எண்ணிக்கை குறைந்தவர்களாக இருப்போமா?’ எனக் கேட்டார். அதற்கு நபியவர்கள் ‘இல்லை, அந்நேரம் நீங்கள் எண்ணிக்கை கூடியவர்களாக இருப்பீர்கள். எனினும் நீங்கள் வெள்ளத்தில் அடிபட்டுச் செல்லும் சருகுகளைப் போன்று இருப்பீர்கள். இன்னும், உங்களைப் பற்றிய பயத்தை உங்கள் எதிரிகளின் உள்ளங்களிலிருந்து அல்லாஹ் கழற்றி எடுத்துவிட்டு, உங்கள் உள்ளங்களிலே ‘வஹ்ன்’ எனும் சிந்தனையைப் போட்டு விடுவான்’ எனக் கூறினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! ‘வஹ்ன்’ என்றால் என்ன?’ என ஒரு மனிதர் கேட்க, ‘உலகத்தை நேசிப்பதும், மரணத்தை வெறுப்பதும், என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’
அறிவிப்பவர் : தௌபான்(ரழி),
நூல் : அபூதாவுத் 4288
நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது? “அல்லாஹ்வின் பாதையில் புறப்படுங்கள்!” என்று உங்களிடம் கூறப்படும்போது இவ்வுலகை நோக்கிச் சாய்ந்து விடுகிறீர்கள்! மறுமையைவிட இவ்வுலக வாழ்வில் திருப்தி அடைகிறீர்களா? மறுமைக்கு முன்னால் இவ்வுலக வசதி அற்பமானது.
(அல்குர்ஆன் 9:38)
மறுமை வாழ்க்கையோடு ஒப்பிடும்போது இவ்வுலக வாழ்வின் ஒட்டு மொத்த இன்பமும் மிக மிக சொற்மானதே! இதை அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தெளிவாக கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் மீதாணையாக! மறுமையோடு ஒப்பிடும்போது இவ்வுலகின் நிலையானது, உங்களில் ஒருவர் தமது இந்த – அதாவது சுட்டு – விரலை (அறிவிப்பாளர் யஹ்யா சுட்டு விரலால் சைகை செய்கிறார்) கடல் வைப்பதைப் போன்றுதான். அதில் எந்த அளவு தண்ணீர் ஒட்டிக்கொள்கிறது என்று அவர் பார்க்கட்டும். (அந்த அளவு குறைவானதேயாகும்.)
அறிவிப்பவர் : முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் (ரலி)
நூல் :முஸ்லிம் (5490)
மறுமையின் இன்பம் கடலைப் போன்றது. இவ்வுலுக இன்பம், கடல் நீரில் ஒரு விரலில் ஒட்டிக் கொள்ளும் அளவுக்குரியது. எந்த இன்பத்தை நாம் தேர்வு செய்வது என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.
மரணம் வந்துவிட்டால்
நிலையற்ற இவ்வுலுக வாழ்க்கைக்காக நிலையான நிகரற்ற இன்பங்களை கொண்ட மறுமை வாழ்க்கைக்கான ஏற்பாடுகளை செய்யாமல் அலட்சியம் காட்டுகின்றனர். ஆனால் இந்த உலகம்தான் மறுமை நாளுக்காக சம்பாதிக்கும் வியாபாரத்தளம். இங்கே மறுமை நாளுக்காக உழைத்தால் மட்டும்தான் மறுமையில் நன்மையை அடைய முடியும். மரணம் வந்து விட்டால் அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டுவிடும். மரணம் வரும்போதுதான் உண்மை நிலை அவனுக்கு புரியும் அப்போது அவன் போடும் கூப்பாட்டிற்கு எந்த மதிப்பும் இல்லாமல் போய் விடும்.
முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும்போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தைதான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள்வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.
(அல்குர்ஆன் 23: 99,100)
மேலும் எனக்கு சில காலங்கள் அவகாசம் அளி. எங்களை மீண்டும் உலகத்திற்கு அனுப்பு நாங்கள் நல்லறங்கள் செய்கிறோம் என்று கூறுவார்கள். ஆனால் அதனால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.
உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கிய வற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுங்கள்! “இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே” என்று அப்போது (மனிதன்) கூறுவான்.
(அல்குர்ஆன் 63:10)
மனிதனுக்கு அவன் மரணித்த பின் அவனுடைய நல்லறங்கள் தவிர வேறு எதுவும் பயனளிக்காது. ஆனால் மனிதனே தனக்கு பயனளிப்பது செல்வங்களே என்று எண்ணி அதை தேடுவதிலேயே அதிகம் ஆர்வம் காட்டுகின்றான்.
இறந்துபோனவரை மூன்று பொருட்கள் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) இரண்டு திரும்பிவிடுகின்றன. ஒன்று மட்டுமே அவருடன் தங்கி விடுகிறது. அவரை அவருடைய குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவருடைய குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவருடைய செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல் : புகாரி (6514)
மறுமையில் கடும் வேதனையிலிருந்து காப்பாற்றி சொர்க்கத்தில் கொண்டு போய் சேர்ப்பது நாம் இவ்வுலுகில் செய்யும் நல்லறங்களே!
அவர்கள் செய்த நல்லறங்களுக்காக அல்லாஹ் கூலி கொடுப்பான்; அவன் தனது அருளை அவர்களுக்கு அதிகப்படுத்துவான். தான் நாடியோ ருக்கு அல்லாஹ் கணக்கின்றி வழங்குவான்.
(அல்குர்ஆன் 24:38)
எனவே நாம் இவ்வுலுகில் இன்பங்களுக்கு அடிமையாகிவிடாமல் மறுமை நாளுக்காக நம் நேரங்களை ஒதுக்கி நல்லறங்கள் புரிந்து மறுமை வெற்றிக்கு இவ்வுலுகிலேயே வித்திடுவோம்.