மரணத்தின் அறிகுறிகளைக் காணும் சிலர் சீக்கிரம் நாம் மரணித்து விட்டால் நல்லது என்று சில வேளை நினைப்பார்கள். முதுமையின் காரணமாக மற்றவர்களுக்குப் பாரமாகி, சொந்த பந்தங்கள் கூட அலட்சியப்படுத்துவதைக் காணும் போது ஏன் இவ்வுலகில் நாம் வாழ வேண்டும் என்று எண்ணுவார்கள். இறைவா! சீக்கிரம் என்னை மரணிக்கச் செய்து விடு! என்று பிரார்த்தனை செய்து விடுவார்கள்.
எந்த நிலையிலும் யாரும் மரணத்தை இறைவனிடம் கேட்கவும் கூடாது; மனதால் அதற்கு ஆசைப்படவும் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
தனக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக உங்களில் யாரும் மரணிக்க ஆசைப்படக் கூடாது. அப்படிச் செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டால் இறைவா! நான் வாழ்வது எனக்குச் சிறந்ததாக இருக்கும் வரை என்னை வாழ வை! நான் மரணிப்பது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை மரணிக்கச் செய் என்று கூறட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 5671, 6351
இறை நம்பிக்கையுடைய ஆணும், இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்கள்: திர்மிதீ 2323, அஹ்மத் 7521, 9435
எனவே நோய் நொடி, முதுமை, குடும்பத்தாரின் அலட்சியம், உடல் உபாதை மற்றும் மன உளைச்சலின் காரணமாக நாம் மரணத்திற்கு ஆசைப்படக் கூடாது. மறுமையில் நமக்குக் கிடைக்கவுள்ள தண்டனையைக் குறைக்க இறைவன் நமக்குத் தந்துள்ள பரிகாரம் என்று துன்பங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.