நான் சவூதி அரேபியாவில் பணி புரிந்து வருகிறேன். இங்கு பல முஸ்லிம் நண்பர்களுடனும், முஸ்லி மல்லாத நண்பர்களுடனும் ஒரே அறையில் தங்கி, ஒன்றாக இணைந்து சாப்பிடும் சூழ்நிலை இருக்கிறது. நான் இந்து நண்பருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதைக் கண்ட சிலர் இதை ஹராம் என்று சொல்கிறார்கள். வேதக்காரர்களுடன் அமர்ந்து சாப்பிடலாம் என்பதற்குக் குர்ஆனில் ஆதாரம் இருப்பதாகவும், மற்றவர் களுடன் சேர்ந்து சாப்பிடுவது ஹராம் என்றும் கூறுகிறார்கள். இது சரியா?

சாப்பிடலாம்

வேதக்காரர்களுடனோ, அல்லது மற்ற மதத்தினருடனோ ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதைத் தடை செய்யும் எந்த ஆதாரமும் குர்ஆன், ஹதீஸில் இல்லை.

“அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் வேதம் வழங்கப் பெற்ற ஒரு சமுதாயத்தவரின் நாட்டில் இருக்கிறோம். அவர்களுடைய பாத்திரத்தில் நாங்கள் சாப்பிடலாமா? மேலும் வேட்டைப் பிராணிகள் உள்ள ஒரு நாட்டில் இருக்கிறோம். நான் எனது வில்லிலும், பயிற்சியளிக்கப்படாத மற்றும் பயிற்சியளிக்கப்பட்ட எனது நாயையும் ஏவி வேட்டையாடுவேன். (இவற்றில்) எது எனக்கு ஆகுமானதாகும்?” என்று நான் கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வேதக்காரர்களின் விஷயம் எப்படியெனில், அவர்களின் பாத்திரம் அல்லாத வேறு பாத்திரம் உங்களுக்குக் கிடைத்தால் அவர்களின் பாத்திரத்தில் நீங்கள் சாப்பிடாதீர்கள். வேறு பாத்திரம் கிடைக்காவிட்டால் கழுவி விட்டு அவர்களின் பாத்திரத்தில் உண்ணுங்கள். அல்லாஹ்வின் பெயர் கூறி உங்கள் வில்லால் வேட்டையாடிய பிராணியை உண்ணுங்கள். பயிற்சி அளிக்கப்பட்ட உங்கள் நாயை அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்பி வேட்டையாடிய பிராணியையும் சாப்பிடுங்கள். பயிற்சியளிக்கப்படாத உங்கள் நாயை நீங்கள் அனுப்பி நீங்கள் வேட்டையாடிய பிராணியை (அது இறப்பதற்கு முன்பாக) நீங்கள் (அல்லாஹ்வின் பெயர் கூறி) அறுக்க முடிந்தால் சாப்பிடுங்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூஸஃலபா அல்ஹுசனிய்யி (ரலி)

நூல்: புகாரி 5478, 5488

இந்த ஹதீஸில் வேதக்காரர்களின் பாத்திரங்களில் சாப்பிட வேண்டாம் என்று கூறப்படுவதை வைத்து, “மாற்று மதத்தவர்களுடன் சாப்பிடக்கூடாது’ என்று உங்கள் நண்பர்கள் கூறியிருக்கலாம். ஆனால் இந்த ஹதீஸ் அந்தக் கருத்தைக் கூறவில்லை.

“வேறு பாத்திரம் இருந்தால் வேதக்காரர்களின் பாத்திரங்களில் சாப்பிட வேண்டாம்’ என்று இந்த ஹதீஸ் பொதுவாகக் கூறினாலும், அபூதாவூதில் இடம் பெற்றுள்ள மற்றொரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறியதற்கான காரணம் இடம் பெற்றுள்ளது.

“நாங்கள் வேதக்காரர்களைக் கடந்து செல்கிறோம். அவர்கள் தங்களுடைய பாத்திரத்தில் பன்றி இறைச்சியைச் சமைக்கிறார்கள். தங்களது பாத்திரத்தில் மதுவையும் குடிக்கிறார்கள்” என்று அபூஸஃலபா அல் ஹுஸனிய்யி (ரலி) கேட்டார். “அதுவல்லாத வேறு பாத்திரம் உங்களுக்குக் கிடைத்தால் அதிலேயே நீங்கள் சாப்பிடுங்கள்; குடியுங்கள். வேறு பாத்திரம் இல்லாவிட்டால் அதை நீங்கள் தண்ணீரால் கழுவி அதில் சாப்பிடுங்கள்; குடியுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸஃலபா (ரலி)

நூல்: அபூதாவூத் 3342

முஸ்லிம்களுக்குத் தடை செய்யப்பட்ட பொருட்களான பன்றி இறைச்சியையும், மதுவையும் வேதக்காரர்கள் சாப்பிடுவதைக் குறிப்பிட்டு நபித்தோழர் கேட்கும் போது தான் நபி (ஸல்) அவர்கள் இந்தப் பதிலை அளிக்கிறார்கள். எனவே இது பொதுவான தடை அல்ல என்பதை விளங்கலாம். தடுக்கப்பட்ட உணவை அவர்கள் சாப்பிட்டால் அந்தப் பாத்திரத்தை நாம் பயன்படுத்தக் கூடாது; வேறு பாத்திரம் இல்லாவிட்டால் அதைக் கழுவிப் பயன்படுத்த வேண்டும். மற்றபடி முஸ்லிமல்லாதவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவதற்குத் தடையேதும் இல்லை.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *