நான் ஒரு கிறிஸ்துவ பெண்ணை திருமணம் செய்யலாமா?
திருக்குர்ஆன் 5:5 வசனம், வேதம் கொடுக்கப்பட்ட பெண்களை மணக்கலாம் எனக் கூறுகிறது. எனவே, கிறித்தவப் பெண்களை அவர்கள் கிறித்தவர்களாக இருக்கும் நிலையில் திருமணம் செய்யலாமா?
தூய்மையானவை உங்களுக்கு இன்று அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. உங்கள் உணவு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை கொண்ட கணவனில்லாத பெண்களையும், உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்ட கணவனில்லாத பெண்களையும் வைப்பாட்டிகளாக்கிக் கொள்ளாமலும், விபச்சாரம் செய்யாமலும், கற்பு நெறி தவறாமலும் அவர்களுக்குரிய மணக் கொடைகளை வழங்கி மணமுடிப்பது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. தனது நம்பிக்கையை (இறை) மறுப்பாக ஆக்கிக் கொள்பவரின் நல்லறம் அழிந்து விட்டது. அவர் மறுமையில் இழப்பை அடைந்தவராக இருப்பார்.
அல்குர்ஆன் (5 : 5)
இவ்வசனம் (திருக்குர்ஆன் 5:5) வேதம் கொடுக்கப்பட்ட பெண்களை மணக்கலாம் எனக் கூறுகிறது. பொதுவாக யூத, கிறித்தவப் பெண்களை அவர்கள் யூத கிறித்தவர்களாக இருக்கும் நிலையில் திருமணம் செய்ய இவ்வசனம் அனுமதிப்பதாகப் பலரும் கருதுகின்றனர்.
இது தவறாகும். ஏனெனில் ஈஸா நபியவர்களும், யூதர்களுக்கு அனுப்பப்பட்ட நபிமார்களும் இஸ்ரவேல் சமுதாயத்துக்கு மட்டுமே அனுப்பப்பட்டார்கள். தவ்ராத், இஞ்ஜீல் ஆகிய வேதங்கள் இஸ்ரவேலர்களுக்காகவே வழங்கப்பட்டன. இஸ்ரவேலர் அல்லாத யூத கிறித்தவர்கள் வேதம் கொடுக்கப்பட்டோரில் சேர மாட்டார்கள்.
இஸ்ரவேல் சமுதாயப் பெண்களை மணக்கலாம் என்பதே இதன் பொருளாகும். இஸ்ரவேலர் அல்லாத யூத கிறித்தவப் பெண்களை மணக்க அனுமதி இல்லை.
வேதம் கொடுக்கப்பட்டோர் என்ற சொல் யாரைக் குறிக்கும் என்பதில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதன் தேரடிப் பொருள் வேதங்களை நம்பும் அனைவரையும் குறிக்கும் என்றாலும் திருக்குர்ஆன் யூதர்களையும், கிறித்தவர்களையும் மட்டுமே வேதக்காரர்கள் எனக் கூறுகிறது.
”எங்களுக்கு முன் இரண்டு சமுதாயங்களுக்கே வேதம் அருளப்பட்டது; நாங்கள் அதைப்படிக்கத் தெரியாமல் இருந்தோம்” என்றும், ”எங்களுக்கு வேதம் அருளப்பட்டிருந்தால் அவர்களை விட நேர் வழி பெற்றிருப்போம்” என்றும் நீங்கள் கூறாதிருப்பதற்காகவும் (இவ்வேதத்தை அருளினோம்). உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றும், நேர் வழியும் அருளும் வந்து விட்டன. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதிப் புறக்கணித்தவனை விட அநீதி இழைத்தவன் யார்? நமது வசனங்களைப் புறக்கணிப்போருக்கு அவர்கள் புறக்கணித்து வந்த காரணத்தினால் கடுமையான வேதனையை அளிப்போம்.
அல்குர்ஆன் (6 : 155)
யூதர்களும் கிரிஸ்தவர்களும் மட்டுமே வேதம் கொடுக்கப்பட்டவர்கள் என்பதை இவ்வசனம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
அனைத்து யூதர்களும், கிறித்தவர்களும் வேதம்கொடுக்கப்பட்டவர்கள் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. இது தவறாகும். ஏனெனில் ஈஸா நபியவர்களும், யூதர்களுக்கு அனுப்பப்பட்ட ஏனைய நபிமார்களும் இஸ்ரவேல் சமுதாயத்துக்கு மட்டுமே அனுப்பப்பட்டார்கள். தவ்ராத், இஞ்ஜீல் ஆகிய வேதங்கள் இஸ்ரவேலர்களுக்காகவே வழங்கப்பட்டன.
மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். ”என்னைத் தவிர பொறுப்பாளர்களை ஆக்கிக் கொள்ளாதீர்கள்!” என்று இஸ்ராயீலின் மக்களுக்கு நேர் வழிகாட்டக் கூடியதாகவும் அதை ஆக்கினோம்.
அல்குர்ஆன் (17 : 2)
மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். (முஹம்மதே!) அவரைச் சந்தித்ததில் நீர் சந்தேகம் கொள்ளாதீர். அவரை இஸ்ராயீன் மக்களுக்கு வழி காட்டியாக்கினோம்.
அல்குர்ஆன் (32 : 23)
மூஸாவுக்கு நேர் வழியைக் கொடுத்தோம். அவ்வேதத்தை இஸ்ராயீலின் மக்களுக்கு உடமையாக்கினோம்.
அல்குர்ஆன் (40 : 53)
(பார்க்க திருக்குர்ஆன் 3:49, 5:72, 7:105, 7:134, 7:138, 10:90, 17:101, 20*47, 20:94, 26:17, 32:23, 40:53, 43:59, 61:6)
இஸ்ரவேலர்களுக்குத் தான் நான் அனுப்பப்பட்டேன் என்று ஈஸா நபி கூறியதாக திருக்குர்ஆன் கூறுகிறது.
وَرَسُولًا إِلَى بَنِي إِسْرَائِيلَ أَنِّي قَدْ جِئْتُكُمْ بِآيَةٍ مِنْ رَبِّكُمْ (49)3
இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (நான் அனுப்பப்பட்டுள்ளேன்)
அல்குர்ஆன் (3 : 49)
إِنْ هُوَ إِلَّا عَبْدٌ أَنْعَمْنَا عَلَيْهِ وَجَعَلْنَاهُ مَثَلًا لِبَنِي إِسْرَائِيلَ(59)43
நாம் அருள் புரிந்த அடியாரைத் தவிர அவர் வேறில்லை. இஸ்ராயீலின் மக்களுக்கு அவரை முன்னுதாரணமாக ஆக்கினோம்.
அல்குர்ஆன் (43 : 59)
”இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதர். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்” என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக!
அல்குர்ஆன் (61 : 6)
இஸ்ரவேலர் அல்லாதவர்கள் கிறித்தவர்களாக மாறியிருந்தாலும் அவர்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்களாக முடியாது. ஏனெனில் இஞ்ஜீல் அவர்களுக்காகக் கொடுக்கப்படவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் தான் உலக மக்கள் அனைவருக்கும் தூதராக அனுப்பப்பட்டார்கள். மற்ற நபிமாஞகள் குறிப்பிட்ட மக்களுக்கும், சமுதாயத்துக்கும் மட்டுமே அனுப்பப்பட்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு முன்னர் (வாழ்ந்த இறைத் தூதர்கள்) எவருக்கும் வழங்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்கு வழங்கப்ட்டுள்ளது.
1. (எதிரிகளுக்கும் எனக்குமிடையில்) ஒரு மாத காலப் பயணத் தொலைவிருந்தாலும் அவர்களுடைய உள்ளங்கüல் என்னைப் பற்றிய அச்சம் ஏற்படுவதன் மூலம் எனக்கு உதவி செய்யப்பட்டுள்ளது.
2. தரை முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என் சமுதாயத்தாரில் யாருக்காவது தொழுகையின் நேரம் வந்துவிட்டால் (அவருக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்தில் தயம்மும் செய்துகொள்ளட்டும்.) தொழுதுகொள்ளட்டும்.
3. போரில் கிடைக்கும் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளது. எனக்கு முன்னர் (வாழ்ந்த இறைத்தூதர்கள்) எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை.
4. (மறுமையில் என் சமுதாயத்தாருக்காக) பரிந்துரை செய்யும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளேன்.
5. ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமூகத்திற்கு மட்டுமே தூதராக (நியமித்து) அனுப்பப்பட்டார்கள். ஆனால் நான், மனித இனம் முழுவதற்கும் இறைத்தூதராக (நியமித்து) அனுப்பப் பட்டுள்ளேன்.
புகாரி (335)
இஸ்ரவேல் அல்லாத கிறித்தவர்களுக்காக அந்த வேதங்கள் அருளப்படாததால் அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் வேதக்காரர்களாக முடியாது.
யூதர்களைப் பொறுத்தவரை புதிதாக ஒருவர் தங்கள் மதத்தைத் தழுவினால் அவரை தங்களுடைய மதத்தில் இணைத்துக் கொள்ள மாட்டார்கள். யூதன் என்றால் அவன் இஸ்ரவேலனாகத் தான் இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றார்கள்.
எனவே இன்றைக்கு உள்ள யூதர்கள் இஸ்ரவேலர்களின் பரம்பையில் வருபவர்கள் என்பதால் அவர்களது பெண்களை மணமுடிக்க அனுமதியுள்ளது.
கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை யார் தங்களது மதத்திற்கு வந்தாலும் அவர்களை கிறிஸ்தவர்கள் என்று ஏற்றுக் கொள்வார்கள். எனவே இன்றைக்கு கிறிஸ்தவ மதத்தைக் கடைபிடிப்பவர்களில் இஸ்ரவேலர்களின் வம்சாவழியில் வந்தவர்கள் யார்? வேறு மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்தைத் தழுவியவர் யார்? என வித்தியாசப்படுத்த முடியாது.
குறிப்பாக நமது நாட்டில் உள்ள கிறிஸ்தவர்களில் அநேகமானவர்கள் இஸ்ரவேலர்களாக இருக்க வாய்ப்பே இல்லை. எனவே கிறிஸ்தவர்களில் யார் இஸ்ரவேலர் என்பது உறுதியாகத் தெரிகின்றதோ அவர்களை மட்டுமே தற்போது மணமுடித்துக் கொள்ளலாம்.