நான்கு இமாம்கள் பற்றிய அறிமுகம்

 

இஸ்லாமிய வரலாற்றில் எண்ணற்ற அறிஞர்கள் தோன்றி மார்க்கப்பணிகள் செய்துள்ளனர். நபித்தோழர்களில் மார்க்க அறிவு பெற்றவர்கள் அவர்களில் சிறந்தவர்களாவர்.

அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி) உள்ளிட்ட எண்ணற்ற நபித்தோழர்கள் மார்க்க அறிஞர்களாக இருந்தும் அவர்கள் பெயரால் மத்ஹபுகள் உருவாக்கப்படவில்லை. தாபியீன்களில் ஏராளமான மார்க்க அறிஞர்கள் இருந்துள்ளனர். அவர்கள் பெயராலும் மத்ஹபுகள் உருவாக்கப்படவில்லை. அவர்களுக்கு அடுத்த தலைமுறையில் ஏராளமான அறிஞர்கள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் ஒதுக்கி விட்டு அவர்களில் நான்கு இமாம்களின் பெயரால் மட்டும் மத்ஹபுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதற்குக் காரணம் அவர்கள் அன்றைக்குப் பெற்றிருந்த அரசியல் செல்வாக்குதானே தவிர நபித்தோழர்களையும், தாபியீன்களையும் விட இவர்கள் மாமேதைகள் என்பது காரணம் அல்ல. இவர்களை மதிக்கக் கூடியவர்கள் எவ்வளவு காலம் ஆட்சிக்கட்டிலில் இருந்தார்களோ அதற்கேற்ற அளவு அந்த மத்ஹபுகள் மக்களிடம் பரவியது என்பது தான் உண்மையாகும்.

நான்கு இமாம்களுக்கும், மத்ஹபுகளுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை

நான்கு இமாம்களின் பெயரால் மத்ஹபுகள் குறிப்பிடப்பட்டாலும் அந்த மத்ஹபுகளுக்கும், இமாம்களுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. இமாம்கள் பெயரைப் பயன்படுத்தி பிற்காலத்தில் வந்தவர்கள் தமது இஷ்டத்துக்கு எழுதிவைத்தவை தான் மத்ஹபுகளாகும்.

  • ஹனஃபி மத்ஹபின் நிறுவன இமாம் என அறியப்படும் அபூ ஹனீஃபா அவர்கள் ஹிஜ்ரி 80 ல் பிறந்து 150ல் மரணித்தார்கள்.
  • ஷாஃபி மத்ஹபின் நிறுவன இமாம் என அறியப்படும் ஷாஃபி அவர்கள் ஹிஜ்ரி 150 ல் பிறந்து 204ல் மரணித்தார்கள்.
  • மாலிக் மத்ஹபின் நிறுவன இமாம் என அறியப்படும் மாலிக் அவர்கள் ஹிஜ்ரி 93ல் பிறந்து 179ல் மரணித்தார்கள்.
  • ஹம்பலி மத்ஹபின் நிறுவன இமாமாக அறியப்படும் அஹ்மது பின் ஹம்பல் அவர்கள் ஹிஜ்ரி 164ல் பிறந்து ஹிஜ்ரி 241ல் மரணித்தார்கள்.

நமது நாட்டில் ஹம்பலி, மாலிக் மத்ஹபுகள் இல்லை. அதிகமாக ஹனஃபி மத்ஹபும், குறைவாக ஷாஃபி மத்ஹபும் உள்ளன. எனவே இவ்விரு மத்ஹபுகளை மட்டும் இங்கே ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

ஹனஃபி மத்ஹப் என்பது அபூ ஹனீஃபா அவர்களின் பெயரால் பரப்பப்பட்டாலும் ஹனஃபி மத்ஹபுக்கும், அபூ ஹனீஃபா அவர்களுக்கும் சம்மந்தம் உள்ளதா என்று பார்ப்போம்.

அபூஹனீஃபாவின் மத்ஹப் என்று சொல்வதாக இருந்தால் அந்த மத்ஹபு சட்டங்கள் அனைத்தும் அபூஹனீபா அவர்களால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அபூஹனீஃபா எழுதிய நூல்களை அந்த மத்ஹபின் சட்ட நூல்களாக வைத்திருக்க வேண்டும். அவரது நூல்களில் உள்ள சட்டத்தை எடுத்துக் காட்டி ஃபத்வா எனும் மார்க்கத் தீர்ப்பு வழங்க வேண்டும்.

ஆனால் ஹனஃபி மத்ஹபின் சட்ட நூல்களாக அபுஹனீஃபாவின் நூல்களை ஹனஃபி மத்ஹபினர் வைத்திருக்கவில்லை. அபூஹனீஃபா எழுதிய நூல்கள் எங்கே என்று நாம் மத்ஹப்வாதிகளைக் கேட்டால் அவர் எழுதிய நூல்களை எதிரிகள் அழித்து விட்டார்கள். அவரது நூல்கள் எதுவும் தற்போது உலகில் இல்லை என்கிறார்கள். தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் தலைவராக இருந்த கலீல் ரஹ்மான் ரியாஜி அவர்கள் ரஹ்மத் என்ற தனது மாத இதழில் இந்தப் பதிலை அளித்து இருந்தார்.

அபூஹனீஃபாவின் ஒரு நூல் கூட உலகில் இல்லை என்றால் ஹனஃபி மத்ஹப் என்பது யார் வகுத்த சட்டம்? இக்கேள்விக்கு நேர்மையான பதில் மத்ஹப்வாதிகளிடம் இல்லை.

அபூஹனீஃபா அவர்கள் ஹிஜ்ரி 150ல் மரணித்து விட்டார்கள் என்பதை முன்னர் நாம் குறிப்பிட்டுள்ளோம். ஹிஜ்ரி 150க்கு உட்பட்ட காலத்திலோ, அல்லது ஹிஜ்ரி இருநூறு வரை உள்ள காலத்திலோ எழுதப்பட்ட நூல்களை ஹனஃபி மத்ஹபினர் சட்ட நூல்களாக வைத்திருந்தால் அபூஹனீஃபாவுக்கு காலத்தில் நெருக்கமான நூல்கள் என்பதால் அதை ஏற்கலாம். ஆனால் ஹனஃபி மத்ஹபின் சட்ட நூல்களின் காலம் என்ன என்று பாருங்கள்!

ஹனஃபி மத்ஹபின் முக்கியமான சட்ட நூலாகிய துர்ருல் முக்தார் என்ற நூலின் ஆசிரியர் முஹம்மத் அலி பின் முஹம்மத் என்பார் ஹிஜ்ரி 1088ல் மரணித்தார். அபீஹனீஃபாவின் காலத்துக்கு ஒன்பது நூற்றாண்டுகளுக்குப் பின் எழுதப்பட்ட இந்த நூலுக்கும், அபூஹனீஃபாவுக்கும் என்ன சம்மந்தம் இருக்க முடியும்?

கன்ஸுத் தகாயிக் எனும் ஹனஃபி மத்ஹப் சட்டநூலை எழுதிய அபுல் பரகாத் அப்துல்லாஹ் பின் அஹ்மத் அன்னஸஃபீ என்பார் ஹிஜ்ரி 710ல் மரணித்தார். அபூஹனீஃபா மரணித்து ஐநூறு ஆண்டுகளுக்குப் பின்னால் எழுதப்பட்ட இந்த நூலுக்கும், அபூஹனீஃபாவுக்கும் என்ன சம்மந்தம்?

ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய ஹிதாயா எனும் நூலாசிரியர் அலீ பின் அபீபக்ர் என்பாரின் மரணம் ஹிஜ்ரி 593 ஆகும். அதன் விரிவுரையான இனாயா என்ற நூலாசிரியர் முஹம்மத் பின் முஹம்மத் என்பாரின் மரணம் ஹிஜ்ரி 786 ஆகும். மராகில் ஃபலாஹ் எனும் நூலாசிரியர் ஹஸன் பின் அம்மார் என்பாரின் மரணம் ஹிஜ்ரி 1069 ஆகும். பதாயிவுஸ் ஸனாயிவு எனும் நூலாசிரியர் அபூபக்ர் பின் மஸ்வூத் என்பாரின் மரணம் ஹிஜ்ரி 587 ஆகும். பஹ்ருர் ராயிக் எனும் நூலாசிரியர் ஜைனுத்தீன் பின் இப்ராஹீம் என்பாரின் மரணம் ஹிஜ்ரி 970 ஆகும்.

அல்லுபாப் ஆசிரியர் அப்துல்கனி பின் தாலிப் 686ல் மரணம். முல்தகல் அப்ஹுர் ஆசிரியர் இப்ராஹீம் பின் முஹம்மத் 956ல் மரணம். லிசானுல் ஹுக்காம் ஆசிரியர் அஹ்மத் பின் முஹம்மத் 882ல் மரணம். துஹ்ஃபதுல் முலூக் ஆசிரியர் ஜைனுத்தீன் அபூ அப்துல்லாஹ் 666ல் மரணம். பிதாயதுல் முப்ததீ ஆசிரியர் அலீ பின் அபீபக்ர் 593ல் மரணம்.

அல்ஜவ்ஹரதுன் நய்யிரா ஆசிரியர் அபூபக்ர் பின் அலீ 800ல் மரணம். தப்யீனுல் ஹகாயிக் ஆசிரியர் உஸ்மான் பின் அலீ 743ல் மரணம். அன்னுகத் ஆசிரியர் அஹ்மத் பின் முஹம்மத் 586ல் மரணம். மஜ்மவுல் அன்ஹர் ஆசிரியர் அப்துர்ரஹ்மான் பின் முஹம்மத் 1078ல் மரணம். அல்முஹீத் ஆசிரியர் மஹ்மூத் பின் அஹ்மத் 616ல் மரணம். துரருல் ஹுக்காம் ஆசிரியர் முஹம்மத் பின் ஃபராமூஸ் 885ல் மரணம். ஹாஷியா தஹ்தாவி ஆசிரியர் அஹ்மத் பின் முஹம்மத் 1231ல் மரணம். நூருல் ஈலாஹ் ஆசிரியர் ஹஸன் பின் அம்மார் 1069ல் மரணம். அன்னஹ்ருல் ஃபாயிக் ஆசிரியர் உமர் பின் இப்ரஹீம் 1055ல் மரணம். உயூனுல் மஸாயில் ஆசிரியர்  நஸ்ர் பின் முஹம்மத் 373ல் மரணம். குதூரி ஆசிரியர் அஹ்மத் பின் முஹம்மத் 428ல் மரணம்.

ஹனஃபி மத்ஹபின் சட்ட நூல்களை எழுதியவர்களுக்கும், அபூஹனீஃபா அவர்களுக்கும் நீண்டகால இடைவெளி உள்ளதைக் கவனியுங்கள்! ஒரு மனிதர் மரணித்து ஐனூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் பெயரால் எழுதப்படும் நூலை அறிவுடைய மக்கள் அவருடன் சம்மந்தப்படுத்த மாட்டார்கள். அவர் பெயரால் இட்டுக்கட்டப்பட்டதாகவே கருதுவார்கள்.

ஹனஃபி மத்ஹபைச் சேர்ந்த ஷைபானி என்பார் எழுதிய மப்சூத் எனும் நூல் 189ல் எழுதப்பட்டதாகும். இவர் அபூஹனீஃபா வழியாக கிடைத்த சட்டங்களை எழுதியுள்ளார். இவர் அபூஹனீஃபாவின் மாணவர் என்பதால் இதை அபூஹனீஃபாவுடன் சம்மந்தப்படுத்துவதை நாம் ஓரளவுக்கு நம்பலாம்.

அபூஹனீஃபா சொன்னதாக இவர் எழுதிய சட்டங்கள் அனைத்தும் நாற்பது பக்கத்தில் அடங்கிவிடும். உதாரணமாக முதல் பாடமாகிய உளூ என்ற பாடத்தில் அபூ ஹனீஃபா சொன்னதாக ஒரே ஒரு சட்டத்தைத் தான் இவர் எழுதியுள்ளார்.

உளூச் செய்யும் போது இரு கைகளையும் மூன்று தடவை கழுவ வேண்டும். பின்னர் வாயை மூன்று முறை கொப்புளிக்க வேண்டும். பின்னர் மூன்று முறை மூக்கைச் சிந்த வேண்டும். பின்னர் மூன்று முறை முகத்தைக் கழுவ வேண்டும். பின்னர் கைகளை மூன்று தடவை கழுவ வேண்டும். பின்னர் தலைக்கும், காதுகளுக்கும் சேர்த்து ஒருதடவை மஸஹ் செய்ய வேண்டும். பின்னர் கால்களை மூன்று தடவைகள் கழுவ வேண்டும் என்று அபூஹனீஃபா சொன்னார்கள். இரண்டு தடவை கழுவினால் போதுமா என்று கேட்டேன். அதற்கவர்கள் அதுவும் போதுமானது தான் என்றார்கள். ஒரு தடவை நிறைவாக செய்தால் போதுமா என்று நான் கேட்டேன். அதற்கவர்கள் அதுவும் போதுமானதே என்றார்கள்.

உளூ பற்றி இந்த ஒரு சட்டத்தை மட்டும் தான் அபூஹனீஃபா சொன்னதாக இவர் எழுதியுள்ளார். அடுத்து தொழுகையில் நுழைதல் என்ற பாடத்துக்குப் போய்விடுகிறார்.

ஆனால் மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹனஃபி மத்ஹபின் சட்ட நூல்களில் உளூ பற்றிய சட்டங்களை வால்யூம் கணக்கில் எழுதி வைத்துள்ளனர். இவை யாவும் அபூஹனீஃபா சொல்லாமல் இவர்களாக இட்டுக்கட்டி எழுதியவை என்று இதன் மூலம் அறியலாம்.

ஹனஃபி மத்ஹபின் சட்டங்கள் என்று இந்த நூல்களில் எழுதப்பட்டவைகளில் ஓரிரு சதவிகிதம் அளவுக்குத் தான் அபூஹனீஃபா சொன்னதாக மேற்கோள் காட்டி எழுதியுள்ளனர். மற்ற சட்டங்களை அபூஹனீஃபா கூறியதாக அந்த நூல்களில் கூறப்படவில்லை. அந்த அறிஞர் கூறினார்; இந்த அறிஞர் கூறினார் என்றுதான் குறிப்பிட்டுள்ளனர்.

அபூஹனீஃபாவுக்கும், ஹனஃபி மத்ஹப் நூல்களுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்பதை இது மேலும் உறுதிப்படுத்துகிறது.

இது போல் ஷாஃபி இமாம் பெயருடன் சேர்த்து ஷாஃபி மத்ஹப் என்று சொல்வதாக இருந்தால் ஷாஃபி இமாம் எழுதிய நூல்களை சட்டநூலாக வைத்திருந்தால் தான் அதை ஷாஃபி இமாம் பெயருடன் சேர்ப்பதில் நியாயம் இருக்கும்.

ஆனால் ஷாஃபி இமாம் அவர்கள் சில நூல்களை எழுதி இருந்தும் அவற்றைத் தூக்கி பரணில் போட்டு விட்டு பிற்காலத்தில் இட்டுக்கட்டி எழுதிய நூல்களை அந்த இமாமின் சட்டம் எனக் கூறி மக்களை ஷாஃபி மத்ஹபினரும் ஏமாற்றி வருகிறார்கள்.

ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய இஆனா எனும் நூலை எழுதிய உஸ்மான் பின் முஹம்மத் என்பார் ஹிஜ்ரி 1310ல் மரணித்தார். ஹாஷியா புஜைரமி எனும் நூலை எழுதிய சுலைமான் பின் முஹம்மத் என்பார் ஹிஜ்ரி 1221ல் மரணித்தார். மஹல்லி எனும் நூலை எழுதிய அஹ்மத் என்பார் ஹிஜ்ரி 1069ல் மரணித்தார். முக்னி எனும் நூலை எழுதிய முஹம்மத் பின் அஹ்மத் என்பார் ஹிஜ்ரி 977ல் மரணித்தார். மின்ஹாஜ் எனும் நூலை எழுதிய இப்னுஹஜர் ஹைத்தமி என்பார் ஹிஜ்ரி 974ல் மரணித்தார். துஹ்ஃபா எனும் நூலை எழுதிய இப்னு ஹஜர் ஹைத்தமி என்பார் ஹிஜ்ரி 974ல் மரணித்தார்.

பத்ஹுல் முயீன் எனும் நூலை எழுதிய ஜைனுத்தீன் மலபாரி என்பார் ஹிஜ்ரி 987ல் மரணித்தார். ரவ்லா எனும் நூலை எழுதிய நவவி அவர்கள் ஹிஜ்ரி 676ல் மரணித்தார். மஜ்மூவு எனும் நூலை எழுதிய நவவி அவர்கள் ஹிஜ்ரி 676ல் மரணித்தார். வசீத் எனும் நூலை எழுதிய முஹம்மத் பின் முஹம்மத் கஸ்ஸாலி என்பார் ஹிஜ்ரி 505ல் மரணித்தார். நிஹாயா எனும் நூலை எழுதிய முஹம்மத் பின் அபில் அப்பாஸ் என்பார் ஹிஜ்ரி 478ல் மரணித்தார். முஹத்தப் எனும் நூலை எழுதிய இப்ராஹீம் பின் அலி என்பார் ஹிஜ்ரி 476ல் மரணித்தார்.

ஷாஃபி இமாம் மரணித்து முன்னூறு முதல் ஆயிரம் ஆண்டுகள் கழித்து வந்தவர்கள் எழுதிய நூல்களைத் தான் ஷாஃபி மத்ஹபின் சட்ட நூல்களாக வைத்துள்ளனர். இவை எப்படி ஷாஃபி இமாம் சம்மந்தப்பட்டதாக ஆகும்?

மேலும் மேற்கண்ட ஷாஃபி மத்ஹபின் சட்ட நூல்களில் எழுதப்பட்ட ஒவ்வொரு சட்டத்தையும் ஷாஃபி இமாம் கூறினார் என்று இந்நூல்களில் குறிப்பிடப்படவில்லை. இரண்டு, மூன்று சதவிகிதச் சட்டங்கள் தான் ஷாஃபி இமாம் சொன்னதாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. மற்றவை அவர் சொன்னார்; இவர் சொன்னார் என்றுதான் மேற்கண்ட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஷாஃபி இமாமுக்கும், ஷாஃபி மத்ஹப் சட்ட நூல்களுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்பதை இது மேலும் உறுதிப்படுத்துகிறது.

மத்ஹபுகளை நான்கு இமாம்கள் உருவாக்கவில்லை

எங்கள் பெயரில் மத்ஹபுகளை உருவாக்காதீர்கள். நாங்கள் ஆய்வு செய்து சட்டங்களைக் கூறுகிறோம். அவை திருக்குர்ஆனுக்கும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கும் ஏற்ப இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அவ்வாறு இல்லாவிட்டால் எங்கள் கூற்றைத் தூக்கி எறிந்து விட்டு திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்றுங்கள் என்பது தான் நான்கு இமாம்களும் கூறிய அறிவுரையாகும்.

அபூஹனீஃபா அவர்கள் கூறியதைக் கேளுங்கள்!

ஹதீஸ் ஆதாரப்பூர்வமாக இருக்கும் போது அதுதான் எனது மத்ஹப் என்று அபூஹனீஃபா கூறியுள்ளது ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

நீங்கள் கூறிய கருத்து அல்லாஹ்வின் வேதத்திற்கு மாற்றமாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? என அபூ ஹனீஃபாவிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் அல்லாஹ்வின் வேதத்திற்காக என்னுடைய கருத்தை விட்டுவிடுங்கள் எனக் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதருடைய கருத்திற்கு மாற்றமாக உங்கள் கருத்து இருந்தால் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள் அல்லாஹ்வின் தூதருடைய செய்திக்காக என்னுடைய கருத்தை விட்டுவிடுங்கள் எனக் கூறினார்கள்

நூல் : ஈகாளுல் ஹிமம்

அல்லாஹ்வின் வேதத்திற்கோ, இறைத்தூதரின் செய்திக்கோ மாற்றமாக ஏதேனும் ஒரு கருத்தை நான் கூறியிருந்தால் என்னுடைய கருத்தை விட்டுவிடுங்கள் என்று அபூஹனீஃபாவும் அவரது மாணவர் முஹம்மதும் கூறியுள்ளனர்.

நூல் : ஈகாளுல் ஹிமம்

நாங்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் எடுத்தோம் என்பதை அறியாமல் எங்கள் கருத்தை ஏற்பது யாருக்கும் ஹலால் இல்லை என்று அபூஹனீஃபாவும், அவரது மாணவர் அபூ யூஸுஃபும் கூறியுள்ளனர்.

நூல் :ஈகாளுல் ஹிமம்

மாலிக் இமாம் கூறுவதைக் கேளுங்கள்!

நான் தவறாகவும், சரியாகவும் கூறக்கூடிய ஒரு மனிதன் தான். எனவே என்னுடைய கருத்தை ஆய்வுசெய்து பாருங்கள்! குர்ஆனுக்கும் நபிவழிக்கும், ஏற்ப அது அமைந்திருந்தால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். குர்ஆனுக்கும் நபிவழிக்கும் ஏற்ப அது அமையாவிட்டால் அதை விட்டுவிடுங்கள் என்று மாலிக் இமாம் கூறினார்கள்.

நூல் : மவாஹிபுல் ஜலீல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர எவருடைய கூற்றாக இருந்தாலும் அவற்றில் எடுத்துக் கொள்ள வேண்டியவையும், விட்டுவிட வேண்டியவையும் உள்ளன என்று மாலிக் இமாம் கூறினார்கள்.

நூல் : அல் ஹுஜஜ் ஸலஃபிய்யா

அஹ்மத் இமாம் கூறுவதைக் கேளுங்கள்!

அவ்ஸாயீயின் கருத்து, மாலிக்கின் கருத்து, அபூ ஹனீஃபாவின் கருத்து எல்லாமே அவர்களின் கருத்துதான். என்னிடத்தில் அனைத்தும் சமம்தான். ஆதாரம் என்பது ஹதீஸ்களில்தான் இருக்கிறது என்று அஹ்மத் இமாம் கூறினார்கள்.

நூல் : ஜாமிவு பயானில் இல்ம்

என்னைப் பின்பற்றாதே. மாலிக்கையும் பின்பற்றாதே. ஸவ்ரியையும் பின்பற்றாதே. அவ்ஸாயியையும் பின்பற்றாதே. அவர்கள் எங்கிருந்து எடுத்தார்களோ அங்கிருந்தே நீயும் எடு என்று இமாம் அஹ்மத் கூறினார்கள்.

நூல் இஃலாமுல் முவக்கிஈன்

ஷாஃபி இமாம் கூறுவதைக் கேளுங்கள்!

ஹதீஸ் ஆதாரப்பூர்வமாக இருக்கும் போது அதுதான் எனது மத்ஹப் என்று ஷாஃபி அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல் : அல்மஜ்மூவு

ஷாஃபி அவர்கள் ஒரு ஹதீஸை அறிவித்தார்கள். அப்போது ஒருவர் ஷாஃபி அவர்களிடம் நீங்கள் இதனை ஆதாரமாக எடுப்பீர்களா? என்று கேட்டார். அதற்கு இமாம் அவர்கள் ”நீ என்னை இணைவைப்பாளன் என்று நினைக்கிறாயா? அல்லது என்னுடைய இடுப்பில் (நெருப்பு வணங்கிகளுக்குரிய) இடுப்பு வாரைப் பார்க்கிறாயா? அல்லது தேவாலாயத்தில் வழிபாடு செய்துவிட்டு வெளியே வந்தவன் என்று நினைக்கிறாயா? என்று கேட்டு விட்டு ஆம். நான் அதைப் பற்றிப் பிடிப்பேன். அதைப் பற்றிப் பிடிப்பேன். அதைப் பற்றிப் பிடிப்பேன். இது அனைத்து முஸ்லிம்களின் மீதும் கட்டாயக் கடமையாகும் என்று கூறினார்கள்.

நூல் : முக்தஸர் அல் முஅம்மல்

ஷாஃபி அவர்கள் ஒரு ஹதீஸை அறிவித்தார்கள். அப்போது ஒருவர் ஷாஃபி அவர்களிடம் நீங்கள் இதனை ஆதாரமாக எடுப்பீர்களா? என்று கேட்டார். அதற்கு இமாம் ஷாஃபி அவர்கள் ”எப்போது நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸ் அறிவிக்கப்பட்டு நான் அதை பற்றிப் பிடிக்கவில்லையோ (அப்போது) என்னுடைய அறிவு மழுங்கிவிட்டது என்று நான் உங்களிடம் சான்று பகர்கிறேன்” என்று கூறி தன்னுடைய கரத்தால் தம்முடைய தலையை நோக்கி சுட்டிக் காட்டினார்கள்.

நூல் : முக்தஸர் அல் முஅம்மல்

என்னுடைய சொல்லுக்கு மாற்றமாக நீங்கள் நபியின் வழிகாட்டுதலைக் கண்டால் நபியவர்களின் வழிகாட்டுதலை எடுத்துக் கொள்ளுங்கள். என்னுடைய சொல்லை விட்டு விடுங்கள். நிச்சயமாக நான் நபியுடைய வழிகாட்டுதலைக் கொண்டு கூறுபவன்தான்.

நூல் : முக்தஸர் அல் முஅம்மல்

நபிவழிக்கு மாற்றமாக நான் கூறிய ஒவ்வொரு சட்டத்திலிருந்தும் நான் வாழும் போதும், என் மரணத்திற்குப் பின்பும் நான் விலகிக் கொண்டேன் என்று ஷாஃபி இமாம் கூறினார்கள்.

நூல் : முக்தஸர் அல் முஅம்மல்

நான் கூறியதற்கு மாற்றமாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இருந்தால் நபியவர்களுடைய ஹதீஸ்தான் ஏற்கத் தக்கதாகும். என்னைப் பின்பற்றாதீர்கள் என்று ஷாஃபி இமாம் கூறினார்கள்.

நூல் : முக்தஸர் அல் முஅம்மல்

என் உழைப்பில் குறை வைக்காமல் நான் இந்த நூல்களை இயற்றியுள்ளேன். ஆனால் இதில் கட்டாயம் தவறுகள் இருந்தாக வேண்டும். ஏனென்றால் திருக்குர்ஆன் அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் அதில் அதிகமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே என்னுடைய இந்த நூல்களில் திருக்குஆனுக்கும், நபிவழிக்கும் மாற்றமானதை நீங்கள் கண்டால் நிச்சயமாக நான் அதை நான் திரும்பப் பெற்றுவிட்டேன் என்று ஷாஃபி இமாம் கூறினார்கள்.

நூல் : முக்தஸர் அல் முஅம்மல்

நபியவர்களின் வழிமுறை ஒருவருக்குத் தெரிந்து விட்டால் எந்த மனிதரின் சொல்லுக்காகவும் அதை விடக் கூடாது என்று ஷாஃபி இமாம் கூறினார்கள்.

நூல் : இஃலாமுல் முவக்கிஈன்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *