நற்செயல்களின் காரணமாக வாழ்நாள் அதிகமாகுமா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அந்த வழியே செல்லும் ஒரு மனிதரைப் பார்த்து இந்த மனிதர் திரும்பி வர மாட்டார். அதாவது மரணித்து விடுவார் என்று சொன்னார்கள், ஆனால் சில தினங்களுக்குப் பின் அந்த வழியாக மீண்டும் அந்த மனிதர் வந்தார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை அழைத்து நீங்கள் சில தினங்களுக்கு முன் ஏதாவது செய்தீர்களா என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் சில ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தேன் என்று கூறினார். அவர் சென்ற பின் அவர் செய்த நற்செயல் காரணமாக அவர் வாழ்நாளை அல்லாஹ் அதிகரித்திருக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) சொன்னார்கள்,
இது போன்று எந்தச் செய்தியையும் நாம் ஹதீஸ் நூற்களில் காணவில்லை. இது போன்று பலவீனமான செய்தி கூட ஹதீஸ்களில் எதுவும் இல்லை.
எனினும், கீழ்காணும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது.
ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தமது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல்: புகாரி 2067