*நற்குணங்களே ஓர் இஸ்லாமியனின் மறுமைச் சேமிப்பு*
இஸ்லாம் வணக்க வழிபாடுகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைப் போலவே, மனிதர்களுடனான உறவுகளிலும், ஒருவருடைய குணநலன்களிலும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.
\\ *மறுமைத் தராசில் நற்குணங்களே கனமானது* \\
(இறைநம்பிக்கையாளனின்) தாரசில் *நற்குணங்களைவிட அதிக எடையுடையது வேறு எதுவும் இருக்காது*. (அபூதாவூத்: 4799)
மேற்கண்ட ஹதீஸில் ஒரு முஸ்லிமின் வாழ்வில் நற்குணங்கள் வகிக்கும் மகத்தான பங்கைத் தெளிவாக உணர்த்துகின்றன.
மறுமை நாளில் ஒரு இறைநம்பிக்கையாளரின் நற்செயல்கள் நிறுக்கப்படும்போது, அவரது *தராசில் (மீஸான்) நற்குணங்களைவிட அதிக எடையுடையது வேறு எதுவும் இருக்காது* என்று குறிப்பிடுகிறது.
*தொழுகை, நோன்பு, ஹஜ்* போன்ற முக்கியமான கடமைகள் இருந்தாலும், ஒரு முஸ்லிமின் வெற்றியைத் தீர்மானிப்பதில் *அழகிய குணமே* மிகக் கனமான செயலாக இருக்கும் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
இதன் பொருள் என்னவெனில், *வணக்க வழிபாடுகளால் தூய்மையடைந்த மனம், மனிதர்களிடம் எரிச்சலின்றியும், பொறுமையுடனும், கனிவுடனும் நடந்துகொள்வதே அல்லாஹ்விடம் மிக விருப்பமானதாகப் பார்க்கப்படுகிறது.
*பிறரை மதித்தல், மன்னிக்கும் மனப்பான்மை, மென்மையான பேச்சு, நீதியை நிலைநாட்டுதல்* ஆகிய பண்புகளே அல்லாஹ்வுடைய திருப்தியை அதிகமாகப் பெற்றுத்தரும் ஆற்றல் கொண்டவை.
\\ *நற்குணமே ஈமானின் முழுமை* \\
*இறைநம்பிக்கையில் முழுமை பெற்றவர் அழகிய குணமுடையவரே. உங்களில் சிறந்தவர் அவர்கள் மனைவியிடம் சிறந்தவராக இருப்பவரே* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ: 1082)
மேற்கொண்ட ஹதீஸில் நற்குணங்களை *இறைநம்பிக்கையின் (ஈமான்) முழுமைக்குரிய* அடையாளமாக அறிவிக்கிறது.
வெறுமனே வாயால் நம்புவது மட்டும் ஈமான் அல்ல; அந்த நம்பிக்கை வாழ்க்கையில் *அழகிய குணங்களாக* வெளிப்பட வேண்டும். ஒரு முஸ்லிம் தனது நம்பிக்கையில் முழுமை பெற்றவராக இருக்க வேண்டுமென்றால், அவர் நற்குணங்களால் அலங்கரிக்கப்பட்டவராக இருக்க வேண்டும்.
மேலும், இந்த ஹதீஸ் நற்குணம் வெளிப்பட வேண்டிய மிக முக்கியமான களத்தை வரையறுக்கிறது: *உங்களில் சிறந்தவர் அவர்கள் மனைவியிடம் சிறந்தவராக இருப்பவரே* என்று நபியவர்கள் கூறுகிறார்கள்.
ஒருவரின் உண்மையான குணம் அவரது *குடும்பத்தினரிடமே* வெளிப்படும். வெளியில் நல்லவராகவும், வீட்டில் கடினமானவராகவும் நடப்பவர் உண்மையான அழகிய குணமுடையவர் அல்ல.
*ஒருவன் தன் மனைவியிடமும், குடும்பத்தினரிடமும் பொறுமை, அன்பு, கனிவு, மற்றும் நீதியுடன் நடந்துகொள்வதே இஸ்லாமிய பார்வையில் உண்மையான சிறப்பு* ஆகும்.
ஒரு முஸ்லிமின் தலைமைப் பண்பும், பொறுமையும் முதலில் சோதிக்கப்படுவது அவரது இல்லற வாழ்வில்தான்.
இந்த இரண்டு ஹதீஸ்களும் ஒரு முஸ்லிம் தன் வாழ்வில் *நற்குணங்களைப் பேணுவது* என்பது ஏதோ விருப்பமான செயல் அல்ல, அது *மறுமையில் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாகவும், இவ்வுலகில் ஈமானின் முழுமைக்குரிய அடையாளமாகவும்* இருக்கிறது என்பதை அழுத்தமாகப் பறைசாற்றுகின்றன.
வணக்க வழிபாடுகள் ஒருவனது செயல்களைச் சீர்படுத்துவதுபோல, நற்குணங்கள் அவனது வாழ்க்கைப் பாதையைச் சீர்படுத்துகின்றன.
ஏகத்துவம்