நபிவழியும் இறைச் செய்தியே!
அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை. அழகிய தோற்றமுடைய வலிமை மிக்கவர் (ஜிப்ரீல்) அதைக் கற்றுக் கொடுக்கிறார்.
திருக்குர்ஆன் 53:3-7
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அவர் பேசுவதெல்லாம் வஹி என்னும் இறைச் செய்தி தவிர வேறில்லை என்று இவ்வசனம் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது.
குர்ஆன் மட்டும் போதும் என்று கூறக்கூடியவர்கள் இவ்வசனம் குர்ஆனையே குறிக்கிறது. குர்ஆன் வஹி என்பது தான் இதற்கு விளக்கம் என்று கூறுகின்றனர். குர்ஆன் வஹியாக உள்ளது என்பதை மட்டும் கூறும் வகையில் இவ்வாசக அமைப்பு அமையவில்லை. “இவர் மனோ இச்சைப் படி பேச மாட்டார்’’ என்பது பொதுவாக அவர் பேசும் எல்லாப் பேச்சையும் தான் எடுத்துக் கொள்ளும். மனோ இச்சைப் படி பேசமாட்டார் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவர் பேசுவதெல்லாம் வஹி தவிர வேறில்லை என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.
குர்ஆன் மட்டும் போதும் என்று கூறுவோர் குர்ஆன் கூறுவதைத் தான் ஆதாரமாகக் காட்ட வேண்டுமே தவிர குர்ஆன் கூறாத ஒன்றை இதற்கு விளக்கம் என்று இவர்களாகக் கற்பனை செய்து வாதிப்பது இவர்கள் குர்ஆனைப் பின்பற்றும் போர்வையில் தங்கள் மனோ இச்சையைத் தான் பின்பற்றுகிறார்கள் என்பது தெளிவாகிறது.
உள்ளத்தில் எந்த அபிப்பிராயத்தையும் வைத்துக் கொள்ளாமல் – முன் கூட்டியே தீர்மானித்துக் கொள்ளாமல் – விளக்கம் என்ற பெயரில் நாமாக எதையும் சேர்க்காமல் இந்த வசனத்தைப் படித்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசிய அனைத்தும் அவர்களது மனோ இச்சையின் உந்துதலால் பேசப் பட்டவையல்ல. மாறாக அது இறைவனால் அறிவிக்கப்பட்ட வஹி எனும் இறைச் செய்திதான் என்பதைப் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது.
குர்ஆன் எப்படி வஹியாக அமைந்துள்ளதோ அது போலவே நபிகள் நாயகத்தின் பேச்சுக்களும் வஹியாக உள்ளன என்று திருக்குர்ஆனே கூறிய பிறகு யாரேனும் நபிகள் நாயகத்தின் பேச்சுக்கள் தேவையில்லை என வாதித்தால் – அந்தப் பேச்சுக்கள் வஹி இல்லை என வாதித்தால் அவர் மேலே நாம் எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனத்தை நிராகரித்தவர் ஆகி விடுகிறார்.
மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.
அல்குர்ஆன் 16:44