நபியே ஏன் ஹராமாக்கினீர்?
நபியே உம்முடைய மனைவியரின் திருப்திகளை நீர் நாடி அல்லாஹ் உமக்கு ஹலாலாக்கியதை நீர் ஏன் ஹராமாக்கிக் கொண்டீர்? அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன் மிகக் கிருபையுடையவன்.
(அத்தஹ்ரீம், வசனம் 1)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம், (அவர்களது அறையில்) தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் (அதிக நேரம்) தங்கிவிடுவார்கள். (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் இவ்வாறு கூடிப் பேசி முடிவு செய்து கொண்டோம்:
(தேன் சாப்பிட்ட பின்,) நம்மவரில் எவரிடம் நபி (ஸல்) அவர்கள் முதலில் வருவார்களோ அவர், நபி (ஸல்) அவர்களிடம் கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? உங்களிடமிருந்து, பிசினின் துர்வாடை வருகிறதே என்று கூறிட வேண்டும்.
(வழக்கம் போல் ஸைனபின் வீட்டிலிருந்து தேன் சாப்பிட்டுவிட்டு நபி (ஸல்) அவர்கள் வந்த போது நாங்கள் பேசி வைத்திருந்த பிரகாரம் கூறியதற்கு) அவர்கள், இல்லை (நான் பிசின் சாப்பிடவில்லை). ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரது அறையில்) தேன் குடித்து வந்தேன்.
(இனிமேல்,) நான் ஒரு போதும் அதைக் குடிக்க மாட்டேன்; நான் சத்தியமும் செய்து விட்டேன் என்று கூறிவிட்டு, இது குறித்து எவரிடமும் தெரிவித்து விடாதே! என்றும் கூறினார்கள். (இது குறித்தே 66:1ஆவது இறைவசனம் அருளப்பெற்றது.)
(புகாரி 4912)