நபியின் முன் குரலை உயர்த்திய போது
இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நல்லவர்களான அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அழிவில் சிக்கிக் கொள்ள இருந்தார்கள். பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த பயணக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரியவர்களாக) வந்த போது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் அவர்கள் இருவரும் குரலை உயர்த்திப் பேசினார்கள்.
அந்த இருவரில் ஒருவர் (உமர்), பனூ முஜாஷிஉ குலத்தவரான அக்ரஃ பின் ஹாபிஸ் அவர்களை நோக்கி (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார். மற்றொருவர் (அபூபக்ர்), இன்னொருவரை (கஅகாஉ பின் மஅபத்) நோக்கி, (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார். அந்த இன்னொருவருடைய பெயர் எனக்குத் தெரியாது என்று அறிவிப்பாளர் களில் ஒருவரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.- அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், எனக்கு மாறுசெய்யவே நீங்கள் விரும்புகிறீர்கள் என்று கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்கள், தங்களுக்கு மாறுசெய்வது என் விருப்பமன்று என்று சொன்னார்கள். இந்த விவகாரத்தில் அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்தன.
அப்போது, இறை நம்பிக்கை கொண்டவர் களே! உங்கள் குரலை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்! எனும் (49:2ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.2
இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
இந்த வசனம் அருளப்பெற்ற பின் உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இந்த அளவுக்கு மெதுவாகப் பேசுவார்கள்; (அவர் என்ன கூறினார் என்பதை) நபி (ஸல்) அவர்கள் அவரிடம் (திரும்ப) விசாரித்தே தெரிந்து கொள்வார்கள்.
(புகாரி 4845)
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(49:2 ஆவது வசனம் அருளப்பெற்ற நாளிலிருந்து) நபி (ஸல்) அவர்கள் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களைக் காணவில்லை என்று தேடினார்கள்.
அப்போது ஒரு மனிதர் அவரைக் குறித்த செய்தியை தங்களுக்காக நான் அறிந்து வருகிறேன், அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார். அவரிடம் அந்த மனிதர் சென்றார். அப்போது அவர் தமது தலையைக் கவிழ்த்தபடி (கவலையோடு) தமது வீட்டில் அமர்ந்து கொண்டிருக்கக் கண்டார். அந்த மனிதர் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களிடம், உங்களுக்கு என்ன ஆயிற்று? என்று கேட்டார்.
அதற்கு ஸாபித் (ரலி) அவர்கள், (எனது நிலை) மோசம்தான். நான் நபி (ஸல்) அவர்களின் குரலுக்கு மேல் எனது குரலை உயர்த்தி(ப் பேசி) வந்தேன். நான் நரக வாசிகளில் ஒருவன்தான் என்று கூறினார். (செய்தியறிந்த) அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஸாபித் பின் கைஸ் இப்படி இப்படிச் சொன்னார் என்று தெரிவித்தார்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான மூசா பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அந்த மனிதர் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களிடம், (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து,) மகத்தான நற்செய்தியை வாங்கிக் கொண்டு மீண்டும் ஒருமுறை சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஸாபித் பின் கைஸ் அவர்களிடம் சென்று நிச்சயம் நீர் நரகவாசிகளில் ஒருவரல்லர். சொர்க்கவாசிகளில் ஒருவரே என்று சொல்! என்று கூறினார்கள்.
(புகாரி 4846)