நபிமார்கள் தமக்கே உதவிக் கொள்ள முடியவில்லை

யூசுப் நபி அவர்களை அவர்களின் சகோதரர்கள் கிணற்றில் வீசிய போதும், அவர் அடிமையாக விற்கப்பட்ட போதும் அதை யாகூப் நபியால் அறியவும் முடியவில்லை; தடுக்கவும் முடியவில்லை. பல்லாண்டுகள் மகனின் பிரிவை எண்ணி கவலைப்படத்தான் முடிந்தது.

“அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமது உடல் மெலியும் வரை, அல்லது நீர் இறக்கும் வரை யூஸுஃபை நினைத்துக் கொண்டேயிருப்பீர் (போலும்)” என்று அவர்கள் கூறினர். “எனது துக்கத்தையும், கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். நீங்கள் அறியாததை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்” என்று அவர் கூறினார்.

(திருக்குர்ஆன்:12:85,86)

நினைத்ததை நினைத்த போது செய்யும் ஆற்றல் யாகூப் நபிக்கு இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? யூசுப் நபி அவர்கள் குற்றம் செய்யாத போதும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். பல்லாண்டுகள் சிறையில் கிடந்தார்கள். சிறைக்குச் செல்லாமல் யூஸுஃப் நபியால் தம்மைக் காப்பாற்ற முடியவில்லை.

(அவர் குற்றமற்றவர் என்பதற்கான) சான்றுகளைக் கண்ட பின்னரும், “குறிப்பிட்ட காலம் வரை அவரைச் சிறையிலடைக்க வேண்டும்” என்று அவர்களுக்குத் தோன்றியது.

(திருக்குர்ஆன்:12:35)

அவ்விருவரில் யார் விடுதலையாவார் என்று நினைத்தாரோ அவரிடம் “என்னைப் பற்றி உமது எஜமானனிடம் கூறு!” என்று யூஸுஃப் கூறினார். அவர் தமது எஜமானனிடம் கூறுவதை ஷைத்தான் மறக்கச் செய்து விட்டான். எனவே அவர் (யூஸுஃப்) சிறையில் பல வருடங்கள் தங்கினார்.

(திருக்குர்ஆன்:12:42)

நினைத்ததை நினைத்த போது செய்யும் ஆற்றல் யூசுப் நபிக்கு இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? அய்யூப் நபி அவர்கள் கடுமையான நோய்களுக்கும், துன்பங்களுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். இந்தத் துன்பம் தமக்கு வராமல் தடுத்துக் கொள்ள அய்யூப் நபியால் இயலவில்லை.

“எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்” என அய்யூப் தமது இறைவனை அழைத்தபோது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணக்கசாலிகளுக்கு இது அறிவுரை.

(திருக்குர்ஆன்:21:83,84)

நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! “ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான்” என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்தபோது, “உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்!” (எனக் கூறினோம்).

(திருக்குர்ஆன்:38:41,42)

இப்ராஹீம் நபியவர்கள் அல்லாஹ்வின் உற்ற தோழராக இருந்தும், தள்ளாத வயது வரை அவர்களுக்குக் குழந்தை இல்லை. எல்லா மனிதர்களும் எந்த வயதில் பிள்ளைக்கு ஏங்குவார்களோ அந்த வயதில் அவர்களுக்கு அல்லாஹ் குழந்தையைக் கொடுக்கவில்லை. தள்ளாத வயதை அடைந்த போதுதான் அவர்களுக்கு அல்லாஹ் குழந்தையைக் கொடுத்தான்.

இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் முதுமையில் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். என் இறைவன் பிரார்த்தனையை ஏற்பவன்.

(திருக்குர்ஆன்:14:39)

“நீர் பயப்படாதீர்! அறிவுடைய ஆண் குழந்தை பற்றி உமக்கு நாங்கள் நற்செய்தி கூறுகிறோம்” என்று அவர்கள் கூறினர். “எனக்கு முதுமை ஏற்பட்ட நிலையில் எனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா? எதனடிப்படையில் நற்செய்தி கூறுகிறீர்கள்?” என்று அவர் கேட்டார்.

(திருக்குர்ஆன்:15:53,54)

தனக்கு இனி பிள்ளை பிறக்காது என்று இப்ராஹீம் நபி அவர்கள் கருதிய தள்ளாத வயதில் தான் அல்லாஹ் அவர்களுக்குப் பிள்ளகளைக் கொடுக்கிறான். விருப்பமான நேரத்தில் குழந்தையை உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல் இப்ராஹீம் நபியவர்களுக்கு இருந்திருந்தால் எந்த வயதில் பிள்ளையைக் கொஞ்சி மகிழ மனிதன் ஆசைப்படுவானோ அந்த இளம் வயதில் தமக்குப் பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டிருக்க மாட்டார்களா?

ஸகரிய்யா நபி அவர்கள் தமக்கொரு வாரிசு வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருந்த போதும் அவர்கள் தளர்ந்து முதியவராக ஆனபிறகு தான் அல்லாஹ் அவருக்குக் குழந்தையைக் கொடுத்தான்.

அப்போது தான் ஸக்கரிய்யா “இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்” என்று தம் இறைவனிடம் வேண்டினார். அவர் தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருந்தபோது “யஹ்யாவைப் பற்றி அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான். அல்லாஹ்வின் வார்த்தையை அவர் உண்மைப்படுத்துவார். தலைவராகவும், ஒழுக்கக் கட்டுப்பாடு மிக்கவராகவும், நபியாகவும், நல்லவராகவும் இருப்பார்” என்று வானவர்கள் அவரை அழைத்துக் கூறினர். “என் இறைவா! எனக்கு முதுமை வந்து விட்ட நிலையிலும், என் மனைவி மலடியாகவுள்ள நிலையிலும் எனக்கு எவ்வாறு குழந்தை உருவாகும்?” என்று அவர் கேட்டார். “தான் நாடியதை அல்லாஹ் இப்படித்தான் செய்வான்” என்று (இறைவன்) கூறினான்.

(திருக்குர்ஆன்:3:38,39,40)

(இது) உமது இறைவன் தனது அடியார் ஸக்கரிய்யாவுக்குச் செய்த அருளைக் கூறுதல்! அவர் தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை. எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு உதவியாளனை உன்புறத்திலிருந்து நீ எனக்கு வழங்குவாயாக! அவர் எனக்கும், யாகூபின் குடும்பத்தாருக்கும் வாரிசாவார். என் இறைவா! அவரை (உன்னால்) பொருந்திக் கொள்ளப்பட்டவராக ஆக்குவாயாக! (என்றார்.)

(திருக்குர்ஆன்:19:2-6)

“என் இறைவா! என்னைத் தனியாளாக விட்டு விடாதே! நீ மிகச் சிறந்த உரிமையாளன்” என்று ஸக்கரிய்யா தமது இறைவனை அழைத்தபோது, அவருக்காக (அவரது பிரார்த்தனையை) ஏற்றோம். அவருக்கு யஹ்யாவை அன்பளிப்பாக அளித்தோம். அவரது மனைவியை அவருக்காக (குழந்தை பெறும்) தகுதியுடையவராக ஆக்கினோம். அவர்கள் நன்மைகளை நோக்கி விரைந்து செல்வோராகவும், ஆர்வத்துடனும் அச்சத்துடனும் நம்மிடம் பிரார்த்திப்போராகவும் இருந்தனர். நமக்குப் பணிவோராகவும் இருந்தனர்.

(திருக்குர்ஆன்:21:89,90)

நபிமார்களுக்கு அற்புதங்கள் கொடுக்கப்பட்டாலும் அவர்கள் நினைத்த போது தமக்கு ஒரு குழந்தையை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை என்று இதிலிருந்து அறிகிறோம். நபிமார்களுக்கு சில அற்புதம் வழங்கப்பட்டதால் அவர்களால் ஆகாதது எதுவும் இல்லை என்று இருந்தால் பல நபிமார்களும், அவர்களை ஏற்றுக் கொண்ட நன்மக்களும் வறுமையில் வாடியிருக்க மாட்டார்கள்.

இறைத்தூதர்கள் என்பதாலும் அவர்களுக்கு ஓரிரு அற்புதங்கள் வழங்கப்பட்டதாலும் அவர்களால் அனைத்தும் இயலும் மக்கள் நினைத்திடக் கூடாது என்பதற்காக பின்வருமாறு நபிமார்கள் வாயால் அல்லாஹ் சொல்ல வைக்கிறான்.

அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை” என்று (முஹம்மதே!) கூறுவீராக! “குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்பீராக!

(திருக்குர்ஆன்:6:50)

“என்னிடம் அல்லாஹ்வின் கருவூலங்கள் உள்ளன என்று உங்களிடம் கூற மாட்டேன். மறைவானவற்றையும் அறிய மாட்டேன். நான் வானவர் என்றும் கூற மாட்டேன். உங்கள் கண்கள் யாரை இழிவாகக் காண்கிறதோ அவர்களுக்கு அல்லாஹ் எந்த நன்மையும் அளிக்கவே மாட்டான் எனவும் கூற மாட்டேன். (அவ்வாறு கூறினால்) நான் அநீதி இழைத்தவனாகி விடுவேன். அவர்களின் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் மிக அறிபவன்” (எனவும் கூறினார்.)

(திருக்குர்ஆன்:11:31)

(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்.

(திருக்குர்ஆன்:3:128)

“அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(திருக்குர்ஆன்:7:188)

“அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ, நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை” என்று (முஹம்மதே!) கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக்கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும்போது சிறிது நேரம் அவர்கள் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.

(திருக்குர்ஆன்:10:49)

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(திருக்குர்ஆன்:10:107)

அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.

(திருக்குர்ஆன்:6:17)

“நான் என் இறைவனிடமிருந்து வந்த சான்றுடன் இருக்கிறேன். நீங்கள் அதைப் பொய்யெனக் கருதுகிறீர்கள். நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இல்லை. அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர (எவருக்கும்) இல்லை. அவன் உண்மையை உரைக்கிறான். தீர்ப்பளிப்போரில் அவன் மிகச் சிறந்தவன்” என்றும் கூறுவீராக!

(திருக்குர்ஆன்:6:57)

நபிமார்களுக்கு சில அற்புதங்கள் வழங்கப்பட்டு இருந்தன என்பது எந்த அளவுக்கு உண்மையோ அது போல் மற்ற விஷயங்களில் அவர்களுக்கு எந்த அற்புத சக்தியும் இருக்கவில்லை என்பதும் உண்மையாகும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *