நபிமார்கள் கப்ரில் தொழுகிறார்களா?
நபிமார்கள் கப்ரில் தொழுது கொண்டு இருக்கிறார்கள் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றை ஆதாரமாகக் கொண்டு நபிமார்கள் நம்மைப் போலவே உயிருடன் உள்ளனர் என்று தீய கொள்கையுடையோர் வாதிடுகின்றனர்.
நபிமார்கள் கப்ரில் தொழுது கொண்டு இருக்கிறார்கள் என்ற கருத்தில் அறிவிக்கப்படும் செய்திகளில் மூஸா நபி தொடர்பான செய்தியைத் தவிர மற்ற அனைத்தும் தவறான அறிவிப்புகளாகும்.
மூஸா நபி அவர்கள் கப்ரில் தொழுததைப் பார்த்தேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் ஹதீஸ் மட்டுமே ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் வரிசையுடன் அமைந்துள்ளது.
மிஃராஜின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூஸா நபியை கப்ரில் தொழுவதாகவும் பார்த்தார்கள். மறுவினாடி பைத்துல் முகத்தஸிலும் பார்த்தார்கள். அதற்கு அடுத்த வினாடி விண்ணுலகிலும் பார்த்தார்கள்.
எனவே இது எடுத்துக்காட்டுவதில் அடங்கும். எடுத்துக் காட்டுதல் என்றால் என்ன என்று பின்னர் விளக்கப்பட்டுள்ளது.
மெய்யாகவே மூஸா நபி கப்ரில் தொழுது கொண்டு இருக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும் இறந்தவர்கள் இவ்வுலகுக்கு வருவார்கள் என்பதற்கோ, இவ்வுலக மக்களின் கோரிக்கைகளைச் செவிமடுக்கிறார்கள் என்பதற்கோ ஆதாரமாகாது. கப்ரில் அவர்கள் தொழுகிறார்கள் என்பதற்கு மட்டுமே அது ஆதாரமாகும்.
மற்ற ஹதீஸ்களைப் பார்ப்போம்.
ஹதீஸ்: 1
நபிமார்கள் நாற்பது நாட்களுக்கு மேல் தங்கள் கப்ருகளில் விட்டு வைக்கப்பட மாட்டார்கள். எனினும் அல்லாஹ்வின் சூர் ஊதப்படும் வரை தொழுவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல்: ஹயாதுல் அன்பியா
ஹதீஸ்: 2
நபிமார்கள் தங்கள் கப்ருகளில் உயிரோடும், தொழுது கொண்டும் இருக்கிறார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: ஹயாதுல் அன்பியா, பஸ்ஸார், ஃபவாயித்
இது போல் இன்னும் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் ஒன்று கூட ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல.
பலமான அறிவிப்பாளர்களைக் கொண்டு அறிவிக்கப்பட்டதாக வைத்துக் கொண்டாலும் இது சமாதி வழிபாட்டுக்காரர்களுக்கு எதிரான ஆதாரமாகவே உள்ளது.
ஆன்மாக்களின் உலகில் நபிமார்கள் உயிருடன் தொழுது கொண்டு இருக்கிறார்கள் என்ற கருத்தைத் தான் இவை தருகின்றன. அவர்கள் சூர் ஊதப்படும் வரை அதாவது உலகம் அழிக்கப்படும் வரை தொழுது கொண்டே இருப்பார்கள் என்றால் அவர்களுக்கும், இவ்வுலகுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது தான் பொருள்.
தொழுகையில் ஈடுபட்டிருப்பவர்களை அழைப்பதும் கூடாது. அந்த அழைப்புக்கு அவர்கள் பதில் சொல்வதும் கூடாது. எனவே அவர்கள் இவ்வுலகிற்கு வர மாட்டார்கள் என்பது உறுதியாகிறது.
மேலும் இதை ஆதாரப்பூர்வமான செய்தி என்று எடுத்துக் கொண்டால் நபிமார்கள் அல்லாத மற்றவர்களுக்கு இந்த நிலை கூட இல்லை என்பது தெரிகிறது.
மிஃராஜின் போது இறந்தவர்களைப் பார்த்தது எப்படி?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் சென்ற போது பல நபிமார்களைச் சந்தித்தார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. தீய கொள்கையுடைவர்கள் இதை ஆதாரமாகக் காட்டி மரணித்து விட்ட நபிமார்கள் உயிருடன் தான் உள்ளனர் என்று வாதிடுகின்றனர்.
இதில் இரண்டு விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். மரணித்து விட்ட நபிமார்கள் மட்டுமின்றி இதர நல்லடியார்களும், கெட்டவர்களும் கூட ஆன்மாக்களின் உலகில் உயிருடன் உள்ளனர் என்பதை நாம் மறுக்கவில்லை.
அவர்களால் இவ்வுலகுக்கு வரமுடியுமா? இவ்வுலகில் தொடர்பு கொள்ள முடியுமா என்பது தான் பிரச்சனை.
மிஃராஜில் பல நபிமார்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்தது தீய கொள்கையுடையவர்களுக்கு ஆதாரமாக ஆகாது. இவ்வுலகை விட்டு வேறு உலகத்துக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் அழைத்துச் சென்றதாலேயே அவர்களால் பல நபிமார்களைக் காண முடிந்தது. நபிகள் நாயகத்துக்குப் பின்னர் எந்த முஸ்லிமும் விண்ணுலகம் அழைத்துச் செல்லப்பட மாட்டார். எனவே அவர் எந்த நபியையும் காண மாட்டார் என்பதற்குத் தான் இது ஆதாரமாக உள்ளது.
அடுத்து அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் விண்ணுலகில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்தவை அனைத்தும் அல்லாஹ்வால் எடுத்துக் காட்டப்பட்டவையாகும்.
நேரடிச் சந்திப்புக்கும், எடுத்துக் காட்டப்படுவதற்கும் வித்தியாசம் உள்ளது.
இதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
நமது வீட்டில் நம்மோடு வசிக்கும் உறவினரை நாம் கனவில் காண்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அவரைக் கனவில் நாம் காண்பதால் அவர் நம்மைக் கண்டார் என்று ஆகாது. காலையில் எழுந்து அவரை நாம் சந்தித்தால் உங்கள் கனவில் நான் நேற்று வந்தேனே என்று அவர் கூற மாட்டார். உங்களைக் கனவில் நான் கண்டேன் என்று நாம் கூறினால் தான் அவருக்கே அது தெரியும். ஏனெனில் கனவில் அவர் நமக்கு எடுத்துக் காட்டப்பட்டாரே தவிர அவரையே நாம் சந்திக்கவில்லை.
மிஃராஜ் என்பது கனவல்ல என்றாலும் அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டவை அவர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டவை தான் என்பதை மிஃராஜ் சம்மந்தமான ஹதீஸ்களில் இருந்து அறியலாம்.