நபித்தோழர்களின் கேள்விகளும் நபிகள் நாயகத்தின் பதில்களும்
கியாமத் நாள் வரை தோன்றக் கூடிய மனிதத் தலைமுறைகளிலேயே சிறந்த தலைமுறை நபி (ஸல்) அவர்களின் தலைமுறையாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இறைநம்பிக்கை கொண்ட சமுதாயத்திற்கு மிகச் சிறந்த வழிமுறைகளைக் கற்றுக் கொடுத்தார்கள். அவர்களும் அதனை உண்மையாக நம்பி பின்பற்றினார்கள். இதன் காரணமாகத்தான் அந்தத் தலைமுறை மிகச் சிறந்த தலைமுறையாக ஆனார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் வாழ்ந்த அருமை ஸஹாபாக்கள் மறுமையில் வெற்றி பெறும் வகையில் இவ்வுலக வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கத்தில் எண்ணற்ற கேள்விகளை நபியவர்களிடத்தில் கேட்டுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்களும் கேள்வி கேட்ட நபித்தோழர்களின் சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு மிகச் சிறந்த வழிகாட்டுதல்களை அவர்களுக்கு எடுத்துரைத்துள்ளார்கள்.
அருமை ஸஹாபாக்கள் நபிகள் நாயகத்திடம் கேட்ட கேள்விகளும் அதற்கு நாயகம் அளித்த பதில்களும் ஒவ்வொரு முஸ்லிமும் தம்முடைய வாழ்வில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளாகும். ஒரு சமூகத்தைச் சிறந்த சமூகமாக மாற்றக் கூடியதாகும். ஒழுக்க மாண்புள்ள, அறநெறிகளைப் பேணும் வகையில் மனித சமூகத்தை மாற்றியமைக்கக் கூடியதாகும்.
நபி (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் கேட்ட கேள்விகளையும், அதற்கு நபி (ஸல்) அவர்கள் அளித்த பதில்களையும் இங்கே நாம் சிலவற்றை இடம் பெறச் செய்துள்ளோம்.
நாம் இந்த தொகுப்பில் குறிப்பிட்டிருப்பது மிக மிகக் குறைவான ஒரு அளவாகும். இது போன்று இன்னும் பன்மடங்கு போதனைகள் வழிகாட்டுதல்கள் ஹதீஸ்களில் நிறைந்து காணப்படுகின்றன. எனவே சில செய்திகளை மட்டும் இப்போது பார்க்கலாம்.
நான் “அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாம் குறித்து எனக்கு ஒரு விளக்கம் அளியுங்கள். ‘தங்களுக்குப் பிறகு யாரிடமும்’ அல்லது ‘தங்களைத் தவிர வேறு யாரிடமும்’ அது குறித்து நான் கேட்க வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது’’ என்று வினவினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டேன்’ என்று கூறி, அதில் உறுதியாக நிலைத்து நிற்பீராக!’’ என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: சுப்யான் பின் அப்தில்லாஹ்(ரலி) நூல்: முஸ்லிம்-62
முஆத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னை சொர்க்கத்தில் நுழைவித்து, நரகத்தை விட்டும் தூரமாக்கும் ஒரு நற்காரியத்தை எனக்கு அறிவித்துத் தாருங்கள்” என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் வேண்டினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘நீ மிகப்பெரும் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்டுவிட்டாய். அல்லாஹ் யாருக்கு அதனை இலேசாக்குகின்றானோ அவருக்கு அது இலேசானதாகும்.
அல்லாஹ்விற்கு எந்த ஒன்றையும் இணை கற்பிக்காமல் அவனை நீ வணங்குவதும், தொழுகையை நிலைநாட்டுவதும், ஸகாத்தை நிறைவேற்றுவதும், (கஅபா எனும்) அந்த ஆலயத்திற்கு பயணம் செய்வதற்கு நீ சக்தி பெற்றால் அதனை நீ ஹஜ் செய்வதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள்.
பிறகு ‘‘நன்மையின் வாயில்களை உனக்கு நான் அறிவிக்கட்டுமா?
1. நோன்பு (அது பாவங்களிலிருந்து தடுக்கின்ற) கேடயமாகும்,
2. தர்மம், (அது) தண்ணீர் நெருப்பை அணைப்பது போன்று பாவங்களை அழித்துவிடும்,
3. மனிதன் நடுநிசியில் தொழுகின்ற தொழுகை’’
இதனை தொடந்து (பின்வரும் வசனத்தை) ஓதினார்கள்: “அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும். நாம் வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்’’ (அல்குர்ஆன் 32:16) என்று கூறிவிட்டு, பிறகு ‘‘இம்மார்க்கத்தின் தலையாயதையும், அதனுடைய தூணையும், அதனுடைய திமிழ் போன்ற உயர்ந்த பகுதியையும் உனக்கு அறிவிக்கட்டுமா?’’ என்று கேட்டார்கள்.
நான் ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஆம், அறிவியுங்கள்” என்று பதிலளித்தேன். அதற்கு நபியவர்கள் ‘‘இம்மார்க்கத்தின் தலையாயது இஸ்லாம் ஆகும். அதனுடைய தூண் தொழுகையாகும், அதனுடைய திமிழ் போன்ற உயர்ந்த பகுதி (அல்லாஹ்வின் பாதையில்) அறப்போர் புரிவதாகும்’’ என்று கூறினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் ‘‘இவை அனைத்தையும் அழிக்கக் கூடிய விஷயத்தை உனக்கு நான் அறிவிக்கட்டுமா?’’ என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஆம்’’ என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் தமது நாவினைப் பிடித்து “இதை நீ பாதுகாத்துக் கொள்’’ என்று கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! நாம் பேசுகின்றவைகளுக்காகவா நாம் தண்டிக்கப்படுவோம்?’’ என்று நான் கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘உனது தாய் உனக்கு பாரமாகட்டும். மக்களை முகம் குப்புற நரகத்தில் விழச் செய்வது அவர்கள் நாவுகள் செய்கின்ற அறுவடையைத் தவிர வேறு என்ன (இருக்கமுடியும்)?’’ என்று பதிலளித்தார்கள்.
நூல்: திர்மிதி-2541
அதற்கு ஸவ்பான் (ரலி) அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். பிறகு நான் மீண்டும் (அதே கேள்வியைக்) கேட்டேன். அப்போதும் அவர்கள் அமைதியாகவே இருந்தார்கள். நான் மூன்றாவது முறையாக அவர்களிடம் கேட்டபோது “இதுபற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வுக்கு நீ அதிகமாக ஸஜ்தா (சிரவணக்கம்) செய்வாயாக! ஏனெனில், நீ அவனுக்காக ஒரு ஸஜ்தா செய்தால் அதற்காக அவன் உனது ஒரு தகுதியை உயர்த்தி, உன் குற்றங்களில் ஒன்றை அவன் மன்னிக்காமல் இருப்பதில்லை’ என்று கூறினார்கள்’’ என்றார்கள். பின்னர் நான் அபுத்தர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தபோது இது குறித்துக் கேட்டேன். அவர்களும் ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதைப் போன்றே கூறினார்கள்.
அறிவிப்பவர்: மஅதான் பின் அபீதல்ஹா; நூல்: முஸ்லிம்-842
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குக் கூறுங்கள்’’ என்று கேட்டார். அப்போது மக்கள், இவருக்கென்ன நேர்ந்தது? இவருக்கென்ன நேர்ந்தது? என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவருக்கு ஏதேனும் தேவை இருக்கலாம்’’ என்று சொல்லிவிட்டு,
‘‘நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; (கடமையான) தொழுகையையும் (கடமையான) ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும். உறவைப் பேணி வாழ வேண்டும் என்று கூறிவிட்டு, உமது வாகனத்தை (உமது வீடு நோக்கி) செலுத்துவீராக’’ என்று சொன்னார்கள். அம்மனிதர் (அப்போது) தமது வாகனத்தில் அமர்ந்திருந்தார் போலும்.
அறிவிப்பவர்: அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) ; நூல்: புகாரி-5983
அறிவிப்பவர்: நுஃமான் பின் அல்கவ்கல் (ரலி); நூல்: முஸ்லிம்-16
‘‘அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் தங்களின் பரிந்துரைக்கு பாக்கியம் பெறும் மனிதர் யார்?’’ என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அப்போது, ‘‘அபூஹுரைரா! என்னைப் பற்றிய செய்திகள் மீது உமக்கிருக்கும் பேராவல் எனக்குத் தெரியும். ஆதலால், இந்தச் செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் யாரும் என்னிடம் கேட்க மாட்டார்கள் என நான் எண்ணினேன்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு,
‘‘மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரைக்குத் தகுதிபெறும் பாக்கியமுடையவர் யார் எனில், தூய எண்ணத்துடன் யார் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை’ (லாயிலாஹ இல்லல்லாஹ்) என்று சொன்னாரோ அவர்தாம்’’ என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி); நூல்: புகாரி-99
நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் எது?’’ என்று கேட்டேன். அவர்கள், ‘‘உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது என்றார்கள். பிறகு எது? என்று கேட்டேன். ‘‘தாய் தந்தையருக்கு நன்மை புரிவது’’ என்றார்கள்.
பிறகு எது? என்றேன். அவர்கள், ‘‘அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது’’ என்று பதிலளித்தார்கள். இவற்றை மட்டுமே என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். இன்னும் அதிகமாக (இது குறித்து) நான் கேட்டிருந்தால் எனக்கு இன்னும் அதிகமாகப் பதிலளித்திருப்பார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி); நூல்: புகாரி-527
மக்கள், ‘‘இஸ்லாத்தில் சிறந்தது எது, அல்லாஹ்வின் தூதரே?’’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘எவரது நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கின்றார்களோ அவரே (சிறந்தவர்; அவரது செயலே சிறந்தது)’’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி); நூல்: புகாரி-11
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி); நூல்: புகாரி-12
நான் “அல்லாஹ்வின் தூதரே! (நற்)செயல்களில் சிறந்தது எது?’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதும் அவனது பாதையில் அறப்போர் புரிவதும் ஆகும்’’ என்று பதிலளித்தார்கள். “(விடுதலை செய்வதற்கு) எந்த அடிமை சிறந்தவர்?’’ என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், “தன் எஜமானர்களிடம் பெறுமதி மிக்க, அதிக விலை கொண்ட அடிமைதான் (சிறந்தவன்)’’ என்று பதிலளித்தார்கள். “அ(த்தகைய அடிமையை விடுதலை செய்வ)து என்னால் இயலவில்லையென்றால்…?’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “தொழில் செய்பவருக்கு உதவி செய்க; அல்லது வேலை இல்லாதவருக்கு வேலை தருக’’ என்று சொன்னார்கள்.
நான், “அல்லாஹ்வின் தூதரே! செயல்களில் சிலவற்றைக் கூட என்னால் செய்ய இயலவில்லையென்றால் (நான் என்ன செய்வது?) கூறுங்கள்!’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இருங்கள்! ஏனெனில், அதுவும் நீங்கள் உங்களுக்குச் செய்து கொள்ளும் ஒரு நல்லறம்தான்’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி); நூல்: முஸ்லிம்-136
நபி (ஸல்) அவர்களிடம் இரண்டு கிராமவாசிகள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் ‘‘முஹம்மது அவர்களே! மனிதர்களில் மிகச் சிறந்தவர் யார்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘யாருடைய ஆயுட்காலம் நீடித்து, அவருடைய செயல்களும் மிக நல்லதாகி விட்டதோ அவர்தான்” எனப் பதிலளித்தார்கள்.
மற்றொருவர் ‘‘இஸ்லாத்தின் (சுன்னத்தான) சட்டங்கள் எங்களுக்கு அதிகமாக இருக்கிறது. எனவே (அனைத்து நன்மைகளும்) ஒருங்கிணைந்த, தொடர்ச்சியாக நாங்கள் செய்யும் வகையிலான (எளிமையான) ஒரு நற்காரியத்தைக் கூறுங்கள்!” எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘மிகைத்தவனும் கண்ணியமிக்கவனுமாகிய அல்லாஹ்வின் நினைவில் நனைந்ததாக (திளைத்ததாக) உனது நாவு இருந்து கொண்டே இருக்கட்டும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி); நூல்: அஹ்மத்-17716
நபி (ஸல்) அவர்களிடம் “கடமையாக்கப் பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை எது? ரமளான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு எது?’’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “கடமையான தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, நடுநிசியில் தொழுவதாகும். ரமளான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாத நோன்பாகும்‘’ என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்-2158
எனவே உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை (தர்மம் செய்வதை) தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு; இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உமது பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே!’’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி-1419
‘‘செயல்களில் மிகச் சிறந்தது எது?’’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. “சந்தேகமில்லாத இறைநம்பிக்கை, மோசடி இல்லாத உயிர்தியாகம், பாவம் கலவாத ஹஜ்’’ என்று கூறினார்கள். மிகச் சிறந்த தொழுகை எது? என்று கேட்கப்பட்டது. “நீண்ட நேரம் நின்று வணங்குவது” என்று கூறினார்கள்.
எந்த தர்மம் சிறந்தது? என்று கேட்கப்பட்டது. ‘‘செல்வம் குறைவாக இருக்கும் போதும் தர்மம் செய்தலாகும்” என்று கூறினார்கள். ‘‘எந்த ஹிஜ்ரத் மிகச் சிறந்தது?” என்று கேட்கப்பட்டது. ‘‘யார் அல்லாஹ் தடைசெய்தவற்றை வெறுக்கிறாரோ அவர்தான் (சிறந்த ஹிஜ்ரத் செய்தவர்)” என்று கூறினார்கள்.
எந்த அறப்போர் மிகச் சிறந்தது? என்று கேட்கப்பட்டது. ‘‘யார் தனது பொருளாலும், உயிராலும் இணைவைப்பாளர்ளுடன் போரிடுகிறாரோ அவர் செய்வதுதான் மிகச்சிறந்த அறப்போர்” எனக் கூறினார்கள். ‘‘யார் மிகச்சிறந்த உயிர் தியாகி” என்று கேட்கப்பட்டது. ‘‘யாருடைய போர்க்குதிரையின் கால்கள் வெட்டப்பட்டு அவருடைய இரத்தம் ஓட்டப்படுகிறதோ அவர் தான்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு ஹபஷீ(ரலி); நூல்: அஹ்மத்-15437
அறிவிப்பவர்: அபூ சயீத் அல் குத்ரி (ரலி)நூல்: புகாரி-2786;
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?’’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், உன் தாய் என்றார்கள். அவர், பிறகு யார்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், உன் தாய் என்றார்கள். அவர், பிறகு யார்? என்றார். உன் தாய் என்றார்கள். அவர், பிறகு யார்? என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், பிறகு, உன் தந்தை என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ; நூல்: புகாரி-5971
‘உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது’’ என்று சொன்னார்கள். நான், பிறகு எது? என்று கேட்க, அவர்கள், ‘‘உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது’’ என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி); நூல்: புகாரி-4477;
பயனளிக்கும் நற்செயல் எது?
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (இறந்து) போய்விட்ட பின்னரும் நான் வாழக் கூடிய நிலை ஏற்படுமா என்பது எனக்குத் தெரியாது. ஆகவே, எனக்கு அல்லாஹ் பயனளிக்கக்கூடிய (நற்செயல்) சிலவற்றை முன்கூட்டியே சொல்லித்தாருங்கள்?’’ என்று கேட்டேன். “தொல்லை தரும் பொருட்களைப் பாதையிலிருந்து அப்புறப்படுத்துவீராக’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ பர்ஸா (ரலி) நூல்: முஸ்லிம்-5110
நபி (ஸல்) அவர்கள், ‘‘உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு உதவி செய்’’ என்று கூறினார்கள். மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அக்கிரமத்துக்குள்ளானவனுக்கு நாங்கள் உதவி செய்வோம். அக்கிரமக்காரனுக்கு நாங்கள் எப்படி உதவி செய்வோம்?’’ என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவனது கைகளைப் பிடித்து (அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து)க் கொள்வாய் (இதுவே, நீ அவனுக்குச் செய்யும் உதவி)’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) ; நூல்: புகாரி-2444
அல்லாஹ்வின் தூதரே! ஏன் (எங்களுக்கு இந்த நிலை)? எனப் பெண்கள் கேட்டதும், ‘‘நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; மனக் கட்டுப்பாடுமிக்க கூரிய அறிவுடைய ஆண்களின் புத்தியை, அறிவிலும் மார்க்கத்தி(ன் கடமையி)லும் குறையுடையவர்களான நீங்கள் போக்கி விடுவதையே நான் காண்கின்றேன்’’ என்று கூறினார்கள்.
அப்போதும் அப்பெண்கள், மார்க்கத்திலும் அறிவிலும் எங்களுடைய குறைபாடு என்ன, அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். ‘‘பெண்களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத்தில் பாதியளவு அல்லவா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அப்பெண்கள், ஆம் (பாதியளவுதான்) என்று பதிலளித்தார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அது தான் அவளது அறிவின் குறைபாடாகும்’’ என்று கூறிவிட்டு ‘‘ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (தூய்மையாகும் வரை) அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா?’’ என்று கேட்க, மீண்டும் அப்பெண்கள் ஆம் என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘அது தான் அவளது மார்க்கத்தி(ன் கடமையி)லுள்ள குறைபாடாகும்’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரி (ரலி) நூல்: புகாரி-304
நபியிடம் கற்றுத் தருமாறு ஸஹாபாக்கள்
கேட்ட சில துஆக்கள்
ஷகல் இப்னு ஹுமைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கொரு துஆவைக் கற்றுத் தாருங்கள்!’’ என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் வேண்டினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘அல்லாஹூம்ம இன்னீ அவூது பிக்க மின் ஷர்ரி ஸம்யீ, வமின் ஷர்ரி பஸரீ, வமின் ஷர்ரி லிசானீ, வமின் ஷர்ரி கல்பீ, வமின் ஷர்ரி மனிய்யீ” என்று நீ கூறு’’ என பதிலளித்தார்கள்.
(பொருள்: அல்லாஹ்வே! என்னுடைய செவிப்புலனின் தீங்கிலிருந்தும், என்னுடைய பார்வையின் தீங்கிலிருந்தும், என்னுடைய நாவின் தீங்கிலிருந்தும், என்னுடைய உள்ளத்தின் தீங்கிலிருந்தும், என்னுடைய மறைவுறுப்பின் தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் கோருகிறேன்)
நூற்கள்: அபூதாவூத்-1327, திர்மிதி (3414)
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ர் இரவை நான் அடைந்தால் அதில் என்ன கூறவேண்டும் என தாங்கள் கூறுகிறீர்கள்?’’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ பஃபு அன்னீ (இறைவா நீயே மன்னிப்பவன். மன்னிப்பை விரும்புபவன். எனவே என்னை மன்னிப்பாயாக)’’ என்று சொல்லுமாறு என்னிடம் கூறினார்கள்.
நூல்: திர்மிதி-3435
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் அமர்ந்தார். அந்நேரத்தில் நாங்கள் நபிகளாரிடம் இருந்தோம். அப்போது, ‘அல்லாஹ்வின் தூதரே! உங்களின் மீது ஸலாம் எவ்வாறு சொல்வது என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் எங்களின் தொழுகையில் எவ்வாறு உங்கள் மீது ஸலவாத் சொல்வது?’ என்று கேட்டார். ‘இந்த மனிதர் இக்கேள்வியைக் கேட்காமல் இருந்திருக்கலாமே’ என்று நாங்கள் நினைக்கும் அளவு நபி (ஸல்) அவர்கள் மவுனமாக இருந்தார்கள். (பின்னர்) ‘நீங்கள் என் மீது ஸலவாத் சொல்வதாக இருந்தால்,
‘‘அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் நபிய்யில் உம்மிய்யி வலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம வபாரிக் அலா முஹம்மதின் நபிய்யில் உம்மிய்யி கமா பாரக்(த்)த அலா இப்ராஹீம வலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்” என்று கூறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பொருள்: இறைவா! இப்ராஹீம் நபியின் மீதும், இப்ராஹீம் நபியின் குடும்பத்தினர் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மத் நபியின் மீது உன் அருளைப் பொழிவாயாக! இப்ராஹீம் நபியின் மீதும் இப்ராஹீம் நபியின் குடும்பத்தினர் மீதும் நீ அபிவிருத்தி செய்ததைப் போல் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மத் நபியின் மீது நீ அபிவிருத்தி செய்வாயாக!
அறிவிப்பவர்: உக்பா பின் அம்ர் (ரலி); நூல்: அஹ்மத்-16455
நாம் இங்கே கேட்ட செய்திகளை நம்முடைய வாழ்கையில் கடைபிடிப்போமாக! வல்ல அல்லாஹ் அதற்கு அருள் செய்வானாக!
வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.