நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் ஒரு தனி நபரைப் பற்றி நரகவாசி என்ற முன்னறிவிப்பு
நியாயத்திற்காகக் களம் இறங்கிப் போராடுவதற்கு நிகரான நன்மை வேறு எதிலும் கிடைக்காது. இவ்வாறு தன் உயிரைத் தியாகம் செய்ய போர்க்களத்திற்கு வந்த ஒருவரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நரகவாசி என்று குறிப்பிட்டார்கள். அவர்கள் நரகவாசி என்று அடையாளம் காட்டிய அந்த நபர் கடைசியாக நரகில் செல்வதற்குரிய வழியைத் தேர்வு செய்து கொண்டார். இது பற்றிய நிகழ்ச்சி பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், இணை வைப்பவர்களும் போர்க்களத்தில் மோதினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது படையினரைச் சார்ந்து போரிட்டார்கள். இணை வைப்பவர்கள் தமது படையினரைச் சார்ந்து போரிட்டனர்.
நபித் தோழர்களில் ஒரு மனிதர் மட்டும் தனது படையினரைச் சாராமல் விரட்டிச் சென்று போரிட்டார்.
‘இவரைப் போல் நம்மில் யாரும் வீரமிக்கவர் இல்லை’ என்று நபித்தோழர்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இவர் நரகவாசியாவார்’ என்று அவரைப் பற்றிக் கூறினார்கள்.
அங்கே சபையில் இருந்த ஒருவர் ‘நான் இவருடன் சேர்ந்து இவரைக் கண்கானிக்கிறேன்’ என்று புறப்பட்டார். அவர் ஓடினால் இவரும் ஓடுவார். இந்த நிலையில் அந்த அந்த மனிதருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது.
(வேதனை தாள முடியாமல்) தனது வாளைத் தரையில் ஊன்றி அதன் மீது தனது மார்பை அழுத்தி தற்கொலை செய்து விட்டார். அவரைக் கண்காணிக்க முன் வந்த அந்த மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ‘நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் உறுதி கூறுகிறேன்’ எனக் கூறி நடந்ததை விளக்கினர்.
நூல் : புகாரி 2898)
தற்கொலை செய்பவர்கள் என்றென்றும் நரகில் கிடப்பார்கள் என்பது இஸ்லாத்தின் கொள்கை. இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் எச்சரிக்கை செய்திருந்தனர். இதன் அடிப்படையில் அந்த மனிதர் தற்கொலை செய்து கொண்டதன் மூலம் நரகவாசியாக மரணித்தார்.
போர்க்களத்தில் வீரதீரமாகப் போரிடும் ஒருவரைப் பற்றி நரகவாசி என்று எந்த மனிதராலும் கூற முடியாது. கடைசியில் அவர் தற்கொலை செய்து கொள்வார் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக இருந்ததால் இதை இறைவன் முன்பே அறிவித்துக் கொடுத்திருக்கிறான் என்பதால் தான் இவ்வாறு அறிவிக்க முடிந்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்பதற்கு இதுவும் ஓர் ஆதாரமாக அமைந்துள்ளது.