நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 10
உம்மு ஹபீபா (ரலி) அவர்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி ஏழாம் ஆண்டில் (அல்லது ஆறாம் ஆண்டில்) அதாவது தமது 59வது வயதில் உம்மு ஹபீபா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள் இத்திருமணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒன்பதாவது திருமணமாகும். உம்மு ஹபீபா அவர்களின் இயற் பெயர் ரம்ழா என்பதாகும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஆரம்பம் முதல் கடுமையாக எதிர்த்து வந்தவரும், அபூ ஜஹ்ல் பத்ருப் போரில் கொல்லப்பட்ட பின் காஃபிர்களின் தலைவராகத் திகழ்ந்தவருமான அபூ சுப்யான் அவர்களின் மகளே உம்மு ஹபீபா(ரலி)அவர்கள். முஆவியா (ரலி) அவர்களின் சகோதரியுமாவார்.
இவரது தந்தை இஸ்லாத்தை ஒழித்திட தீவிரமாக முயன்று கொண்டிருந்த காலத்திலேயே உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள். இவரது கணவர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் என்பவரும் அப்போதே இஸ்லாத்தைத் தழுவினார்.
தந்தையின் கொடுமை தாள முடியாத அளவுக்குச் சென்ற போது ஹபஷா (அபீஸீனியா) வுக்கு தம் கணவருடன் ஹிஜ்ரத் (தியாகப் பயணம்) செய்தார்கள். அபீஸீனியா சென்றதும் சிறிது காலத்தில் இவரது கணவர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் இஸ்லாத்தை விட்டு வெளியேறி கிருத்தவராக மதம் மாறினார். கணவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய பின்னரும் கூட இவர்கள் இஸ்லாத்தில் உறுதியாக நின்றார்கள்.
சரித்திரத்தில் இத்தனை கொள்கைப் பிடிப்புள்ள பெண்களை அரிதாகவே காண முடியும். தந்தையை விடவும் கணவரை விடவும் கொண்ட கொள்கையே பிரதானம் என்று வாழ்ந்தவர்கள் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள். அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் மூலம் ஹபீபா என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததால் உம்மு ஹபீபா (ஹபீபாவின் தாய்) என்றும் அழைக்கப்பட்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபியாக ஆவதற்கு 17ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் பிறந்தார்கள். (அல் இஸாபா)இவர்களை நபிகள் நயகம் (ஸல்)அவர்கள் தமது 59ம் வயதில் திருமணம் செய்த போது இவர்களுக்கு 37 வயதாக இருந்தது.
கணவர் மதம் மாறியதால் அயல் நாட்டில் இவர்கள் நிர்க்கதியாக கணவரைப் பிரிந்து கொள்கைக்காகப் போராடிக் கொண்டிருந்த போது தான், இதனைக் கேள்விப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமே உம்மு ஹபீபா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள்.
அபீஸீனியாவின் மன்னர் நஜ்ஜாஷி (ரலி) அவர்களுக்கு அவரது நாட்டில் நிர்க்கதியாக இருந்த உம்மு ஹபீபா (ரலி) அவர்களை தாம் திருமணம் செய்து கொள்வதாக தூதுச் செய்தி அனுப்பினார்கள்.
இதன் பிறகு நஜ்ஜாஷி (ரலி) அவர்கள் உம்மு ஹபீபா (ரலி) அவர்களை மிகவும் மரியாதை செய்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சார்பில் நானூரு தீனார்கள் (தங்கக் காசுகள்) மஹராகக் கொடுத்து மதீனாவுக்கு அனுப்பி வைத்தார்கள். இதன் பிறகே உம்மு ஹபீபா (ரலி) யைத் திருமணம் செய்தார்கள். இது சுருக்கமான விபரம்.
இந்தத் திருமணத்திற்கும் நிச்சயமாக காம உணர்வு காரணமாக இருக்க முடியாது என்பதை நடுநிலையாளர்கள் ஒப்புக் கொள்வார்கள்.
இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவர் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள். ஆரம்பக் காலத்திலேயே தம் கணவருடன் அபீஸீனியாவுக்கு தியாகப் பயணம் மேற்கொண்டவர்கள். சுமார் 15 ஆண்டுகள் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அபீஸீனியாவிலேயே தங்கிவிட்டார்கள். உம்மு ஹபீபா (ரலி) அவர்களை இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் பார்த்ததைத் தவிர, இந்தப் பதினைந்து ஆண்டுகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்ததே இல்லை.
இந்தப் பதினைந்து ஆண்டுகள் இடைவெளியில் இன்னொரு நாட்டில் அடைக்கலம் புகுந்தவர் – கணவரையும் பிரிந்து விட்டவர்,ஒரு குழந்தையையும் பெற்று விட்டவர் எத்தகைய அமைப்பில் இருப்பார் என்று கற்பனை கூட செய்ய முடியாது.
அவர்களின் நிரமும்,அவர்களின் பருமனும்,அழகும் இந்தப் பதினைந்து ஆண்டுகளில் எப்படி மாறியிருக்கும் என்பதையும் தீர்மானிக்க இயலாது. காம உணர்வு தான் இதற்குக் காரணம் என்றிருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்மு ஹபீபாவைப் பார்த்து அவர்களின் அழகில் மயங்கியிருக்க வேண்டும். ஒரு பெண்ணை அறவே பார்க்காது திருமணம் செய்தால் அதற்கு காம உணர்வைக் காரணமாகச் சொல்ல முடியுமா?
20 வயது உம்மு ஹபீபாவைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்திருக்கிறார்கள். அந்த வயதில் வேண்டுமானால் அவர்கள் அழகாக இருந்திருக்கலாம். அழகானவர்களைக் கூட அகோரமாக மாற்றிவிடும் அபீஸீனிய நாட்டில் 15 ஆண்டுகளைக் கழித்த ஒரு பெண்,ஒரு குழந்தையையும் பெற்றுவிட்ட பெண், கணவனால் கைவிடப்பட்டு கவலைக்கு ஆளான ஒரு பெண் – வெளியில் சென்று தானே உழைத்து உண்ணக் கூடிய ஒரு பெண் 20 வயதில் இருந்த அதே அழகுடன் இப்போதும் இருப்பார்கள் என்று எந்த அறிவாளியாவது கூறத் துணிவாரா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்மு ஹபீபாவைப் பார்க்காமல் அவர்களுடைய கோலம் இப்போது எப்படி இருக்கும் என்பதைக் கூட அறியாமல் உம்மு ஹபிபாவின் நிர்க்கதியான நிலையைக் கேள்விப்பட்ட மாத்திரத்தில் தான் அவரை மணந்து கொள்ளப் போவதாக நஜ்ஜாஷிக்கு தூது அனுப்புகிறார்கள். இந்தத் திருமணத்தைப் பற்றி முடிவுக்கு வந்து விட்ட நேரத்திலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்மு ஹபீபாவை நேரில் சந்திக்கவில்லை. அவர்களது நிராதரவான நிலையை அறிந்தவுடனேயே அவரைத் திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள்.
நியாய உணர்வு படைத்தவர்களே! இந்தத் திருமணத்திற்கு காம உணர்வு தான் காரணம் என்று சொல்லப்படுவதை இதன் பிறகும் உங்கள் உள்ளம் ஏற்கிறதா?
25வயதில் இல்லாத காம உணர்வு மரணத்தை நெருங்கி விட்ட 59வது வயதில் தானா திடீரென்று ஏற்பட்டு விடும்? அதுவும் எப்படி இருப்பார் என்று தெரியாத ஒரு பெண்ணின் மீதா காம உணர்வு ஏற்படும்? ஒரு குழந்தைக்குத் தாயாகிவிட்ட – உடலுறவுக்குரிய தகுதியை இழப்பதற்குரிய கட்டத்தை நெருங்கி விட்ட – அழகையும், இளமையையும் பிரயாணங்களிலும் கவலையிலும் முற்றுமாக இழந்து விட்ட ஒரு பெண் மீது தானா —-உணர்வு ஏற்படும்? ஒருக்காலும் ஏற்படாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஏனைய திருமணங்களுக்கு காம உணர்வு எப்படி காரணமாக இருக்கவில்லையோ அது போல் இந்தத் திருமணத்திற்கும் அது காரணமில்லை