நாம் உமக்கு அருளியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முந்திய வேதத்தை ஓதுவோரிடம் கேட்பீராக! உமது இறைவனிடமிருந்தே இவ்வுண்மை உம்மிடம் வந்துள்ளது. சந்தேகிப்போரில் நீர் ஆகிவிடாதீர் என்று இவ்வசனத்தில் (10:94) கூறப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சந்தேகம் ஏற்படும் என்றும், அதை வேதமுடைய சமுதாயத்தினர் தீர்த்து வைப்பார்கள் என்றும் இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.
மேலோட்டமாகப் பார்க்கும்போது குர்ஆனில் ஏதும் சந்தேகம் வந்தால் வேதம் கொடுக்கப்பட்ட சமுதாயத்திடம் அதற்கான விளக்கத்தை நபியவர்கள் பெற வேண்டும் என்ற கருத்தைத் தருவது போல் தோன்றும்.
ஆனால் இந்தக் கருத்தில் இவ்வசனம் அருளப்படவில்லை. எந்த ஒரு வசனத்தைப் பற்றியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சந்தேகம் வரவுமில்லை. அது பற்றி யாரிடமும் அவர்கள் விளக்கம் கேட்கவுமில்லை.
அப்படியானால் இந்த வசனத்தின் கருத்து என்ன? அது இந்த வசனத்திலேயே சொல்லப்பட்டு உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒரே ஒரு சந்தேகம் ஆரம்பத்தில் இருந்தது. இறைத்தூதராக அவர்கள் நியமிக்கப்பட்ட உடன் உண்மையில் இறைவனிடமிருந்து தான் நமக்குச் செய்தி வருகிறதா? அல்லது நமக்கு ஏதும் ஆகிவிட்டதா? என்பது தான் அந்தச் சந்தேகம். (பார்க்க : புகாரி 4வது ஹதீஸ்)
மனிதர்களுக்கு இறைவனிடமிருந்து வேதம் வருமா? என்பது தான் ஆரம்பத்தில் அவர்களுக்கு இருந்த சந்தேகம். முன்னர் வேதம் வழங்கப்பட்ட மக்களிடம் கேட்டால் இதுபோல் இறைவனிடமிருந்து வேதம் வரும் என்று உறுதிப்படுத்துவார்கள். இதைத்தான் இவ்வசனம் கூறுகிறது.
இவ்வசனத்தில் இடம்பெற்றுள்ள “உமது இறைவனிடமிருந்தே இவ்வுண்மை உம்மிடம் வந்துள்ளது. சந்தேகிப்போரில் நீர் ஆகிவிடாதீர்” என்ற வாக்கியத்தில் இருந்து இதை அறிந்து கொள்ளலாம்.
இதனடிப்படையில் தான் வரகா என்ற வேத பண்டிதரிடம் சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் கேட்டார்கள். மூஸாவிடம் வந்த அதே வானவர்தான் உங்களிடமும் வந்துள்ளார் என்று கூறி சந்தேகத்தை வரகா தீர்த்து வைத்தார். (பார்க்க : புகாரி 4வது ஹதீஸ்)
இந்த வசனத்துக்கு முன்னால் உள்ள வசனங்களுடன் இணைத்துப் பார்க்கும்போது இன்னொரு கருத்துக்கும் இந்த வசனம் இடமளிக்கிறது.
இதற்கு முந்தைய வசனத்தில் யூதர்களுக்கு இறைவன் செய்து கொடுத்திருந்த சிறப்புக்கள் கூறப்படுகின்றன. அவர்கள் வாழ்ந்த நிலப்பரப்பு மிகச்சிறந்த நிலப்பரப்பு எனவும், அவர்களுக்குத் தூய்மையான உணவுகள் தாராளமாக வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதைக் கூறி விட்டுத்தான் சந்தேகம் இருந்தால் வேதம் அருளப்பட்ட அவர்களிடமே கேட்டுப்பார் என்று அல்லாஹ் அடுத்த வசனத்தில் கூறுகிறான்.
இதைப் பற்றிக் கேட்டால் அவர்கள் உண்மையைத்தான் சொல்வார்கள். அவர்களின் பெருமை சம்மந்தப்பட்ட விஷயமாக இருப்பதால் மற்ற விஷயங்களை மறைப்பது போல் இதை அவர்கள் மறைக்க முடியாது. இதனால் தான் அவர்களிடம் கேட்குமாறு அல்லாஹ் இவ்வசனத்தில் (10:94) கூறுகிறான்.
குர்ஆனில் கூறப்படும் செய்திகளுக்கு வேதபண்டிதரிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.