நபிகள் நாயகத்தின் ஏழ்மை

ஒரு மனிதன் வாழ்வதற்கு உணவு மிகவும் அவசியமானதாகும். அந்த உணவிற்கு வழியில்லாத நிலையில்தான் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை இருந்தது.

‘மாமன்னர்கள் உண்ட உணவுகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்களால் கூட கண்டதில்லை; சராசரி மனிதன் உண்ணுகின்ற உணவைக் கூட அவர்கள் உண்டதில்லை’ என்பதற்கு அவர்களின் வரலாற்றில் ஏராளமான சான்றுகள் உள்ளன.

எங்கள் வீடுகளில் மூன்று மாதங்கள் அடுப்புப் பற்ற வைக்கப்படாமலே கழிந்திருக்கிறது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார். ‘என் சிறிய தாயாரே! அப்படியானால் உயிர் வாழ எதை உண்பீர்கள்?’ என்று நான் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) ‘பேரீச்சம் பழமும், தண்ணீரும் தான் எங்கள் உணவாக இருந்தன. சில நேரங்களில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தோழர்கள் கறந்த பாலை அன்பளிப்பாகத் தருவார்கள். அதை அருந்துவோம்‘ என விடையளித்தார்.

அறிவிப்பவர் : உர்வா

நூல் : புகாரி 2567, 6459

நபிகள் நாயகத்தின் குடும்பத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை மூன்று நாட்கள் தொடர்ந்து எந்த உணவையும் வயிறார உண்டதில்லை’ என நபிகள் நாயகத்தின் நெருங்கிய தோழர் அபூ ஹுரைரா (ரலி) கூறுகிறார்.

நூல் : புகாரி 5374

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பசியோடு இருந்ததை அறிந்து) ‘எனது வீட்டிலிருந்து கோதுமை ரொட்டியையும், வாசனை கெட்ட கொழுப்பையும் கொண்டு சென்றேன். அவர்களின் வீட்டில் ஒரு சந்தர்ப்பத்திலும் ஒரு மரக்கால் கோதுமையோ, அல்லது வேறு ஏதேனும் தானியமோ இருந்ததில்லை’ என்று நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ் (ரலி) கூறுகிறார்.

நூல் : புகாரி 2069, 2508

மாமன்னராக இருந்த நபி (ஸல்) அவர்களும், அவர்களுடைய குடும்பத்தாரும் சரியான சாப்பாடு இல்லாமல் கஷ்டப்பட்டுள்ளார்கள். மேலும், தமது ஊழியர் கொண்டு வந்து கொடுக்கும் உணவை உண்ணுகிற நிலையில் தான் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை இருந்துள்ளது என்பதிலிருந்து அவர்களது ஊழலற்ற நேர்மையான ஆட்சியை விளங்கலாம்.

நபிகள் நாயகத்தின் ஆடை

அரசியல்வாதிகள் என்றாலே ஆடை முறையில் தங்களுக்கென்ற தனி அடையாளத்தை வைத்துள்ளார்கள்.

ஒரு ஆடைக்காக பல லட்சக்கணக்கான ரூபாய்களைச் செலவிடுபவர்களாக இருக்கிறார்கள்.

ஆனால், நபி (ஸல்) அவர்கள் அணிந்திருந்த ஆடைகள், இன்றைக்குப் பரம ஏழை கூட அணிவதற்கு வெட்கப்படக் கூடியதாகத் தான் இருந்தன.

மேலே போர்த்திக் கொள்ளும் ஒரு போர்வை, கீழே அணிந்து கொள்ளும் முரட்டு வேட்டி ஆகிய இரண்டையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) எடுத்துக் காட்டி ‘இவ்விரு ஆடைகளை அணிந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்’ என்று குறிப்பிட்டார்.

நூல் : புகாரி 3108, 5818

நபிகள் நாயகத்தின் வீடும் உபயோகப் பொருட்களும்

இன்று சாதரணமான வார்டு பதவியில் வகிப்பவர்கள் கூட பதவிக்கு வந்த பிறகு மாளிகையைப் போன்ற வீடுகளை வசப்படுத்திக் கொள்கின்றனர்.. ஆடம்பரத்தில் அவரும் அவரது குடும்பத்தாரும் திளைக்கின்றனர்.

ஆனால், நபிகள் நாயகத்தின் வீடு, ஒருவர் தொழுதால் மற்றவர் கால் நீட்டி படுக்க முடியாத அளவுக்கு ஒடுக்கமாகவும், ஒரு அறையை விட சிறியதாகவுமே இருந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நள்ளிரவில் எழுந்து அல்லாஹ்வைத் தொழும் வழக்கமுடையவர்களாக இருந்தனர். முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் போது தமது நெற்றியை நிலத்தில் வைத்து வணங்குவதை பலரும் பார்த்திருப்பீர்கள். இதை ஸஜ்தா என்று கூறுவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) தமது வீட்டில் ஸஜ்தா செய்வதற்குக் கூட அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டுள்ளார்கள் என்பதை அறியும் போது அவர்களின் வீடு எவ்வளவு பரப்பளவு கொண்டதாக இருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னே உறங்கிக் கொண்டிருப்பேன். எனது இரு கால்களையும் அவர்கள் ஸஜ்தாச் செய்யும் இடத்தில் நீட்டிக் கொண்டிருப்பேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது தமது விரலால் எனது காலில் குத்துவார்கள். உடனே நான் எனது காலை மடக்கிக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாச் செய்து விட்டு எழுந்து நின்று வணங்கும் போது மீண்டும் காலை நீட்டிக் கொள்வேன். இவ்வாறு நடந்ததற்குக் காரணம் அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்.

நூல் : புகாரி 382, 513, 1209

ஒருவர் படுத்துறங்கும் போது அவருக்கு இடைஞ்சல் இல்லாமல் இன்னொருவர் தொழுவது என்றால் 5’ ஜ் 5’ இடம் போதுமானதாகும். ஆனால், இந்த மாமனிதரின் வீடு அதை விடவும் சிறியதாக இருந்துள்ளது. மனைவி படுத்திருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தொழுவதற்கு இடம் போதவில்லை. மனைவி கால்களை மடக்கிக் கொண்ட பிறகே அவர்களால் தொழ முடிந்துள்ளது என்றால் என்ன ஒரு அற்புதமான வாழ்க்கை என்று பாருங்கள்!

மேலும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களின் தன்மைகளைப் பாருங்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் தட்டில் வைத்து உணவைச் சாப்பிட்டதில்லை. ரொட்டியைத் துணி விரிப்பின் மீது வைத்துத் தான் சாப்பிடுவார்கள்’’ என்று நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ் (ரலி) கூறுகிறார்.

நூல் : புகாரி 5386, 5415

கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணை தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாய்ந்து கொள்ளும் தலையணையாக இருந்தது என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.

நூல் : புகாரி 6456

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்து விடும். இதைக் கண்ட நாங்கள் ‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பைத் தயாரித்துத் தருகிறோம்; அது உங்கள் உடலைப் பாதுகாக்கும்‘ எனக் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘எனக்கும், இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது? மரத்தின் நிழல் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும், அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும், இவ்வுலகத்துக்கும் உள்ளது’ எனக் கூறி அதை நிராகரித்து விட்டார்கள்.

இதை அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்.

நூல்கள் : திர்மிதி 2299, இப்னுமாஜா 4099, அஹ்மத் 3525, 3991

இன்றைக்கு இருக்கும் பரம ஏழைகூட இத்தகைய வாழ்க்கை வாழ்வது இல்லை. ஆனால் மாபெரும் சக்கரவர்த்தி  இத்தகைய வாழ்க்கை வாழ்ந்துள்ளார் எனில் இவரது ஆட்சியில் ஊழலுக்கு இடம் இருந்திருக்குமா?

அவர்களது ஆட்சியில் ஏற்பட்டது போன்ற தன்னிறைவை அவர்களுக்குப் பின் இன்று வரை எந்த நாட்டிலும் எந்த ஆட்சியும் அடைய முடியவில்லை. ஆம் அந்த அளவுக்கு அவர்களது ஆட்சியில் செல்வம் கொழித்தது. அந்த நிலையில் தான் இவ்வளவு எளிமையான வாழ்க்கையைத் தேர்வு செய்து கொண்டார்கள்.

இன்று இது போன்று ஒரு அரசியல்வாதியை நம்மால் பார்க்க முடியுமா?

மேலும், ஆட்சியாளர்களின் வருகை என்றாலே அவர்களைச் சாதாரண மக்கள் நெருங்க முடியாது. ஆட்சியாளர்களுக்கு முன்னும் பின்னும் பாதுகாவல் என்று புடைசூழ வருகை தருவார்கள். ஆனால் நபிகள் நாயகம் தனக்கென்று தனித்துவத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. சிறுவர்கள் உட்பட அனைவரிடமும் கலந்து பழகிவந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுவர்களாகிய எங்களுடன் கலந்து பழகுவார்கள். எனது தம்பி அபூ உமைரிடம் ‘உனது குருவி என்ன ஆனது?’ என்று விசாரிக்கும் அளவுக்கு சிறுவர்களுடன் பழகுவார்கள்.

நூல் : புகாரி 6129

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மோடு இன்னும் எவ்வளவு காலம் இருப்பார்கள் என்பதை நாம் அறிய மாட்டோம். எனவே அவர்கள் நம்மால் சிரமப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்‘ என்று அப்பாஸ் (ரலி) மக்களிடம் கூறினார். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு நிழல் தரும் கூடாரத்தைத் தனியாக நாங்கள் அமைத்துத் தருகிறோமே’ என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘மக்கள் என் மேலாடையைப் பிடித்து இழுத்த நிலையிலும், எனது பின்னங்காலை மிதித்த நிலையிலும் அவர்களுடன் கலந்து வாழவே நான் விரும்புகிறேன். அவர்களிடமிருந்து அல்லாஹ் என்னைப் பிரிக்கும் வரை (மரணிக்கும் வரை) இப்படித் தான் இருப்பேன்’ எனக் கூறினார்கள்.

நூல் : பஸ்ஸார் 1293

மக்களில் ஒருவனாகத் தான் இருக்க வேண்டும் என்பதையே இந்த சக்கரவர்த்தி விரும்பியுள்ளார்.

ஆனால், இன்றைக்கு ஒரு அரசு அதிகாரியையோ அல்லது ஒரு அரசியல்வாதியையோ சந்திக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு கீழ் உள்ளவர்களை பணம் கொடுத்து சரிகட்டினால் தான் சந்திக்க முடியும் என்ற நிலைமை உள்ளது.

பெரும் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டிக் காத்த ஒரு மாமன்னர் தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் எதையும் சேமித்துக் கொள்ளாமால் தன் வாழ்க்கை முழுவதையும் மக்கள் நலனுக்காக அர்ப்பணித்துள்ளார்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *