நக பாலீஷ் பூசலாமா?
ஒரு பொதுவான அடிப்படையை விளங்கிக்கொண்டால் பல கேள்விகளுக்குரிய பதில்கள் நமக்குக் கிடைத்துவிடும். மார்க்க சட்டத்திட்டங்களுக்கு இடையூராக அமையாத அலங்காரப் பொருட்கள் எதை வேண்டுமானலும் நாம் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை.
மார்க்கத்தை கடைபிடிப்பதற்கு இடஞ்சலாக அமைந்த அலங்காரப் பொருட்களை பயன்படுத்துவது கூடாது.
உளூ செய்யும் போது கழுவப்பட வேண்டிய உறுப்புக்கள் முழுவதிலும் அவசியம் தண்ணீர் பட வேண்டும் என்பது மார்க்கச் சட்டம். அறைகுறையாகக் கழுகுவது தடுக்கப்பட்டிருக்கிறது.
நாங்கள் மேற்கொண்ட பயணம் ஒன்றில் அல்லாஹ்வின் (ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னே (பிந்தி) வந்துகொண்டிருந்தார்கள். அஸ்ர் தொழுகையின் நேரம் எங்களை நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் (அவசர அவசரமாக) உளூ (அங்கசுத்தி) செய்து கொண்டிருக்கும்போது எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் (கால்களை முறைப்படி கழுவாமல்) எங்கள் கால்கள் மீது தண்ணீர் தொட்டுத் தடவி (மஸ்ஹு செய்து) கொள்ளலானோம். (அதைக் கண்ட)
நபி (ஸல்) அவர்கள் “குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம்தான்!” என்று இரண்டு அல்லது மூன்று தடவை தமது குரலை உயர்த்திச் சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலிலி)
நூல் : புகாரி (96)
இன்றைக்கு விற்கப்படும் நகப்பூச்சுக்கள் தண்ணீர் ஊடுருவுவதை தடுக்கக்கூடியவையாக உள்ளது.
இவற்றைப் பூசிக்கொண்டு உளூ செய்யும் போது நகங்களின் மீது தண்ணீர்படுவது தடுக்கப்படுகிறது. எனவே தொழுகை அல்லாத மற்ற நேரங்களில் பூசிக்கொள்வதில் தவறில்லை. உளூ செய்யும் போது இவற்றை அகற்றிவிட வேண்டும்.
தண்ணீர் ஊடுருவதை தடுக்காத வகையில் நகப்பூச்சு கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.