தொழுமிடத்தில் ஆண்கள் பெண்களுக்கு மத்தியில் திரை போட வேண்டுமா ?

தொழுகையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கண்டிப்பாக திரையிட்டுத்தான் ஆகவேண்டும் என்றால் நபியவர்கள் அவ்வாறு கட்டளையிட்டிருக்க வேண்டும். அல்லது நடைமுறையில் செய்து காட்டியிருக்க வேண்டும் அல்லது அதற்கு சொல்லியாவாது இருக்க வேண்டும்.

ஆனால் அதற்கு மாற்றமாக நபியவர்கள் திரையின்றியே பெண்களுக்கு உரை நிகழ்த்தியுள்ளார்கள். தொழுகை நடத்தியுள்ளார்கள்.

ஹதீஸ் ஆதாரம் 1:

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ்(ரலி)
நூல்: ஸஹிஹுல் முஸ்லிம்(1607)

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டுள்ளேன். அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுகை நடத்தினார்கள்; பாங்கோ இகாமத்தோ இல்லை. பிறகு பிலால்(ரலி) அவர்கள்மீது சாய்ந்துகொண்டு, இறையச்சத்தைக் கடைப் பிடிக்குமாறும் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்குமாறும் வரியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வழங்கினார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு, பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு (மார்க்க நெறிமுறைகளையும் மறுமை நாளையும்) நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள்.

மேலும், பெண்களை நோக்கி, ”தர்மம் செய்யுங்கள். உங்களில் அதிகம் பேர் நரகத்தின் விறகு ஆவீர்கள்” என்று கூறினார்கள். அப்போது பெண்கள் நடுவிரிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மணி எழுந்து ”அது ஏன், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ”நீங்கள் அதிகமாகக் குறை கூறுகின்றீர்கள்; (நன்றி மறந்து) கணவனை நிராகரிக்கிறீர்கள்” என்று கூறினார்கள். அப்போது அப்பெண்கள் தம் காதணிகள், மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்களை (கழற்றி) பிலால்(ரலி) அவர்களின் ஆடையில் போட்டனர்.

விளக்கம்:
நபியவர்கள் பெண்கள் பகுதிக்குச் சென்று எவ்விதத் திரையுமில்லாமல் பெண்களுக்கு உரை நிகழ்த்தியுள்ளார்கள். நபியவர்களுடன் பிலால்(ரலி) அவர்களும் இருந்துள்ளார்கள். மேலும் கன்னங்கள் கருத்த ஒரு பெண்மணி எழுந்து கேள்வி கேட்டார் என்று வந்துள்ளது. திரையிட்டிருந்தால் இவ்வாறு கூறுவதற்கு முடியுமா? மேலும் பெண்கள் பிலால்(ரலி) அவர்கள் ஏந்திய துணியிலே தர்மங்களைப் போட்டுள்ளார்கள். திரையில்லாமல் இருந்தால்தான் இது சாத்தியமாகும். எனவே பெண்களுக்கு உரை நிகழ்த்தும் போது திரையில்லாமல் உரை நிகழ்த்தலாம் என்பதற்கு இது தெளிவான ஆதாரமாகும்.

இது போன்றே பிரத்யேகமாக பெண்களுக்கு மட்டும் மார்க்க தர்பியாக்களை அவர்கள் கேட்டதற்காக நபியவர்கள் செய்துள்ளார்கள்.
ஆதாரம்: ஸஹிஹுல் புஹாரி (7310)

மேலும், நபியவர்கள் காலத்தில் 5 வேளையும் பெண்கள் பள்ளி வந்து ஜமாஅத்துடன் தொழுபவர்களாக இருந்துள்ளனர். ஆனால் நபியவர்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் எத்தகைய தடுப்பையும் திரையையும் ஏற்படுத்தவில்லை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் தடுப்பு அல்லது திரை ஏற்படுத்த வேண்டுமானால் தொழுகையில் ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் நபியவர்கள் அவ்வாறு செய்யவில்லை. இதிலிருந்தும் திரை நபியவர்கள் வழிகாட்டவில்லை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஹதீஸ் ஆதாரம் 2:

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத்(ரலி)
நூல்: ஸஹிஹுல் புஹாரி(362)

சில ஆண்கள் சிறுவர்களைப் போன்று தங்களது சிறிய வேஷ்டியை தங்கள் கழுத்தில் கட்டிக் கொண்டு நபி(ஸல்) அவர்களுடன் தொழுவார்கள். (இதைக் கண்ட நபியவர்கள்) பெண்களிடம், ”ஆண்கள் (ஸஜ்தாவிலிருந்து எழுந்து) உட்காரும்வரை நீங்கள் (ஸஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தாதீர்கள்’ என்று சொன்னார்கள்.

விளக்கம்:
பெண்களின் பார்வை ஆண்களின் மறைவிடங்களைப் பார்த்துவிடக் கூடாது என்ற காரணத்தினால்தான் நபியவர்கள் பெண்களை தாமதமாக ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்துமாறு கூறுகிறார்கள். இதிலிருந்தே ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் எவ்வித திரையும் இருந்திருக்கவில்லை என்பதை நான் விளங்கிக் கொள்ள முடியும்.

ஹதீஸ் ஆதாரம் 3:

அறிவிப்பவர்: அம்ர் பின் ஸலிமா(ரலி)
நூல்: ஸஹிஹுல் புஹாரி(4302)

மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். நபி (ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்த போது, ”அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி (ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி (ஸல்) அவர்கள், ‘இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் எவர் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளாரோ அவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்’ என்று சொன்னார்கள்” எனக் கூறினார்கள்.

 

ஆகவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்த போது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும் (எங்களிடையே) இருக்கவில்லை. ஆகவே, (தொழுவிப்பதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய(சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும் போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது. ஆகவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், ”உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?” என்று கேட்டார். ஆகவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போல வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை.

விளக்கம்:
இமாமின் ஆடை கிழிந்திருந்தை ஒரு பெண்மணி சுட்டிக்காட்டுகிறார் என்றால் அங்கு எவ்விதத் திரையும் இருந்திருக்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். திரை இருந்திருந்தால் இமாமின் ஆடை கிழிந்திருந்ததை அப்பெண்மனி பார்த்திருக்க முடியாது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *